இளைஞர்களே செயலி உருவாக்க சூப்பர் சான்ஸ்! தமிழக அரசின் 3 நாள் சிறப்புப் பயிற்சி முகாம்
Tamil Nadu government : ஏஐ மூலம் செயலியை உருவாக்க தமிழ்நாடு அரசின் 3 நாள் சிறப்பு பயிற்சி முகாம் அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த முழு விவரங்களை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்
Tamil Nadu government : தமிழக அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை சார்பில், செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி செயலிகளை உருவாக்கும் App Development Using AI என்ற மூன்று நாள் நேரடிப் பயிற்சி முகாம் சென்னையில் அறிவிக்கப்பட்டுள்ளது. எவ்வித கோடிங் முன் அனுபவமும் இன்றி, நவீன ஏஐ தொழில்நுட்பங்கள் வழியே செயலிகள் மற்றும் இணையதளங்களை உருவாக்கக் கற்றுக்கொடுக்கும் நோக்கில் இந்த முகாம் நடத்தப்படுகிறது.
பயிற்சி நடைபெறும் நாள், நேரம் மற்றும் இடம்
இப்பயிற்சி முகாம் வரும் செப்டம்பர் 23 முதல் 25, 2026 வரை காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை நடைபெறவுள்ளது. சென்னை, ஈக்காட்டுத்தாங்கலில் உள்ள சிட்கோ தொழிற்பேட்டை, தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவன (EDII-TN) வளாகத்தில் இப்பயிற்சி நேரடியாக வழங்கப்படும்.
பயிற்சிகளின் சிறப்பம்சங்கள்
இப்பயிற்சியில் பங்கேற்பாளர்களுக்கு பல்வேறு நவீன செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பங்கள் செயல்முறை விளக்கங்களுடன் கற்றுத்தரப்பட உள்ளன:
முக்கிய ஏஐ கருவிகள்: சாட்ஜிபிடி, ஜெமினி ப்ரோ, நோட்புக் எல்எம், லவபிள் மற்றும் பிராம்ப்ட் இன்ஜினியரிங் முறைகள் வழியே நேரடி புரோட்டோடைப்பிங் பயிற்சி அளிக்கப்படும்.
நேரடி ஆப் உருவாக்கம்: கல்வித் தொழில்நுட்பம், மருத்துவம், நிதி மற்றும் சில்லறை வணிகம் உள்ளிட்ட துறைகளுக்கான ஏஐ சார்ந்த இணையதளங்கள், செயலிகள் மற்றும் தானியங்கி அமைப்புகளைப் படிப்படியாக உருவாக்க வழிகாட்டப்படும்.
தொழில்முனைவோர் அணுகுமுறை: நிஜ உலகப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணும் வகையில் ஏஐ குறைந்தபட்ச சாத்தியமான தயாரிப்புகளை (AI MVP) உருவாக்குதல் மற்றும் அவற்றை முதலீட்டாளர்கள், வழிகாட்டிகளிடம் எவ்வாறு காட்சிப்படுத்துவது என்பது குறித்துப் பயிற்றுவிக்கப்படும்.
தொழில் மற்றும் வணிக வளர்ச்சி: வேலைவாய்ப்பு நேர்காணல்கள், ரெஸ்யூம், லிங்க்ட்இன் சுயவிவரம் போன்றவற்றிற்கான சிறப்பான போர்ட்ஃபோலியோவை உருவாக்குவதோடு, தனிநபர் தொழில்முனைவு கருவிகளைக் கொண்டு ஃப்ரீலான்ஸ் பணிகளைத் தொடங்குவதற்கான வழிகளும் விளக்கப்படும்.
யார் யார் விண்ணப்பிக்கலாம்?
மாணவர்கள், புதிய தொழில்முனைவோர், படைப்பாளர்கள் மற்றும் ஆரம்ப நிலைத் தொழில் வல்லுநர்கள் என ஆண்கள், பெண்கள், திருநங்கைகள் அனைவரும் இதில் கலந்துகொள்ளலாம். விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 18 வயது பூர்த்தியடைந்தவராகவும், பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராகவும் இருக்க வேண்டும். இதற்கு எந்தவித கோடிங் அனுபவமும் தேவையில்லை; அடிப்படை கணினி அறிவு மட்டுமே போதுமானது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்பதிவு மற்றும் கூடுதல் விவரங்கள்
இப்பயிற்சி முகாமில் கலந்துகொள்ள முன்பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. விருப்பமும் தகுதியும் உடையவர்கள் www.editn.in என்ற அதிகாரப்பூர்வ இணையதள முகவரியில் சென்று உடனடியாகப் பதிவு செய்துகொள்ளலாம். கூடுதல் விவரங்களுக்குத் திங்கள் முதல் வெள்ளி வரை காலை 10:00 மணி முதல் மாலை 5:45 மணிக்குள் 8668100181 / 9360221280 ஆகிய தொலைபேசி எண்களைத் தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது