Bank Of Baroda-வில் வேலை! ரூ.85,920 வரை சம்பளம்! எப்படி விண்ணப்பிப்பது?
பேங்க் ஆஃப் பரோடா வங்கியில், சுமார் 2,482 உள்ளூர் வங்கி அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 132 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி என்ன? விண்ணப்பிப்பவர்களுக்கு வேண்டிய தகுதி என்ன? இது குறித்த முழு விவரத்தை இங்கு தெரிந்து கொள்வாேம்.
பொதுத்துறை வங்கிகளில் ஒன்றாக இருக்கிறது, பேங்க் ஆஃப் பரோடா வங்கி. பொதுத்துறை வங்கிகளில் பணிபுரிய விரும்புபவர்களுக்கு, பரோடா வங்கி ஒரு புதிய வேலைவாய்ப்பை அறிவித்திருக்கிறது. Local Bank Officer அதாவது உள்ளூர் வங்கி அதிகாரி பதவியில், நாடு முழுவதும், 2,482 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட இருக்கின்றன. இதற்கான இணையதள விண்ணப்பப்பதிவு தற்போது ஆரம்பித்துள்ளது.
பேங்க் ஆஃப் பரோடா:
மொத்தம் 2,482 காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டிற்காக 132 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் பொதுப்பிரிவிற்கு 52, பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கு 12, இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 36, பட்டியலினத்தவருக்கு 20, பழங்குடியினருக்கு 12 இடங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அதிலும் 6 பணியிடங்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான ஒதுக்கீட்டில் இடம் பெற்றிருக்கின்றன.
தகுதி என்ன?
- இந்த வேலைக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள், ஆகஸ்ட் 1ஆம் தேதி 2026ன் படி, 21 முதல் 30 வயதுக்குள் இருக்க வேண்டும். இதில், எஸ்சி, எஸ்டி, ஓபிசி மற்றும் மாற்றுத்திறனாலிகள் உள்ளிட்ட பிரிவினருக்கு, அரசு விதிகளின்படி வயது தளர்வு வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
- இந்த பணிக்கு, அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிறுவனத்தில் ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருக்க வேண்டும்.
- ரிசர்வ் வங்கியால் அங்கீகரிக்கப்பட்ட வங்கியில் அதிகாரி நிலையில், குறைந்தபட்சமாக ஓராண்டு பணி அனுபவத்தை பெற்றிருக்க வேண்டும்.
- காப்பீடு, பரஸ்பர நிதி விநியோகம், தொகுப்பு மேலாண்மை சேவைகள் உள்ளிட்ட துறைகளில் தொடர்பு கொண்ட சான்றிதழ் படிப்புகளை முடித்தவர்களுக்கும் முன்னுரிமை வழங்கப்படும்.
சம்பளம் எவ்வளவு?
இதில் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு, அடிப்படை சம்பளமாக ரூ.48,480 வரை வழங்கப்படும். அதிகபட்சமாக இந்த சம்பளம், ரூ.85,920 வரை சம்பளம் கிடைக்கும். கணினி வழித்தேர்வு, க்ரூப் டிஸ்கஷன், நேர்காணல் மற்றும் மொழித்தகுதி தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு நடைபெறும்.
தேர்வு நடைபெறும் முறை:
- கணினி வழியில் நடத்தப்படும் தேர்வில், ஆங்கிலம், வங்கி அறிவு, பொது அறிவு, பொருளாதார விழிப்புணர்வு மற்றும் Aptitude Testing மற்றும் நுண்ணறிவு ஆகிய பிரிவுகளில் 120 மதிப்பெண்களுக்கு 120 கேள்விகள் இடம் பெரும்.
- தமிழ்நாட்டில் இதற்கான செண்டர்கள், சென்னை, மதுரை, நெல்லை, சேலம், கோயம்புத்தூர், திருச்சி, வேலூர், விருதுநகர், தஞ்சை, கடலூர், கன்னியாகுமரி, நாமக்கல் உள்ளிட்ட இடங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட இருக்கின்றன.
- 10 அல்லது 12ஆம் வகுப்பில் தமிழ் பாடத்தை ஒரு பாடமாக படித்தவர்கல், மொழித் தகுதி தேர்வில் இருந்து விலக்கை பெறுவர்.
ஆங்கிலத்தை தவிர, பிற பிரிவுகளையும் தமிழில் எழுதலாம்.
இத்தேர்வு முடிந்த பிறகு, பல்வேறு கட்டத்தேர்வுகளில் பெறும் மதிப்பெண்கள் மற்றும் காலிப்பணியிடங்களின் அடிப்படையில் தகுதியானவர்கள் இந்த பணியிடங்களை நிரப்ப தேர்வு செய்யப்படுவார்கள்.
தேர்வு கட்டணம்:
இந்த வேலைக்கு விண்ணப்பிக்க தகுதியும் ஆர்வமும் இருப்பவர்கள், பரோடா வங்கியின் அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்புக்கான இணையதளம் வழியே விண்ணப்பிக்கலாம். இதில், பொதுப்பிரிவு விண்ணப்பத்தாரர்களுக்கு ரூ.850 கட்டணம் வசூலிக்கப்படும். எஸ்சி, எஸ்டி மாற்றுத்திறனாளிகள் மற்றும் முன்னாள் ராணுவத்தினருக்கு ரூ.175 கட்டணமும் வசூலிக்கப்படுகிறது. தகுதியுள்ளவர்கள், இதற்கு விண்ணப்பிக்கலாம்.