SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு உள்ளூரிலேயே அரசு வேலைவாய்ப்பு!

Tamil Nadu Govt Jobs for 8th Pass: கிராம ஊராட்சிகளில் 3,941 மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இயக்குபவர் பணியிடங்களை நிரப்ப ஊரக வளர்ச்சித் துறை ஆணையர் அதிரடி உத்தரவிட்டுள்ளார்.

Written By Karthikeyan Sekar
Published: Nov 16, 2026, 18:18 IST | Updated: Nov 16, 2026, 18:26 IST
Image Credit: Tamil Nadu Govt Jobs
Join

Tamil Nadu Govt Jobs for 8th Pass: தமிழகத்தில் உள்ள கிராம ஊராட்சிகளில் குடிநீர் விநியோகத்தின் முதுகெலும்பாகச் செயல்படும் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இயக்குபவர்களின் காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்புவதற்கு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை ஆணையர் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். சென்னை நீங்கலாக அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கும் (வளர்ச்சி) இது தொடர்பாக அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில், கிராமப்புறங்களில் குடிநீர் விநியோகம் தடையின்றி நடைபெறுவதை உறுதி செய்ய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

மேலும் படிக்க | திருச்சி : வைகுண்ட ஏகாதசி தேதி, நேரம், சிறப்பு பேருந்துகள் மற்றும் ஏற்பாடுகள் முழு விவரம்

கடந்த 05.07.2017 அன்று வெளியிடப்பட்ட அரசாணையின் படி, தமிழ்நாடு முழுவதும் உள்ள கிராம ஊராட்சிகளில் அனுமதிக்கப்பட்ட மொத்த மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இயக்குபவர் பணியிடங்களின் எண்ணிக்கை 40,419 ஆகும். இதில் தற்போது மாநிலம் முழுவதும் 36,478 பேர் மட்டுமே பணியாற்றி வருகின்றனர். அதாவது, ஊராட்சி கணக்கு எண் 7-ல் ஊதியம் பெறுபவர்களாக 16,822 பேரும், ஊராட்சி கணக்கு எண் 1-ல் ஊதியம் பெறுபவர்களாக 19,656 பேரும் பணியில் உள்ளனர். மீதமுள்ள 3,941 பணியிடங்கள் நீண்ட நாட்களாகக் காலியாக உள்ளதால், பல கிராமங்களில் குடிநீர் விநியோகம் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு, அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கைக்கு மிகாமல் இந்த 3,941 காலிப்பணியிடங்களை விரைந்து நிரப்ப அறிவுறுத்தப்பட்டுள்ளது.  

இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பவர்களுக்கான இருப்பிடத் தகுதி குறித்து மிக முக்கியமான விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. அதன்படி, விண்ணப்பதாரர் காலிப்பணியிடம் உள்ள அல்லது தேவை உள்ள அந்தக் குறிப்பிட்ட குடியிருப்பில் வசிப்பவராக இருக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஒருவேளை அந்தக் குறிப்பிட்ட குடியிருப்பில் தகுதியான அல்லது பொருத்தமான விண்ணப்பதாரர் யாரும் கிடைக்கவில்லை என்றால் மட்டுமே, அதே ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள அருகிலுள்ள கிராம ஊராட்சியைச் சேர்ந்தவர்களைப் பரிசீலிக்கலாம் எனத் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.  

கல்வித் தகுதி மற்றும் அனுபவத்தைப் பொறுத்தவரை, விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருப்பதோடு, தமிழில் நன்றாக எழுதவும் படிக்கவும் தெரிந்தவராக இருக்க வேண்டும். மேலும், மோட்டார் பம்ப் இயக்குவதில் ஐந்து முதல் பத்து ஆண்டுகள் வரை அனுபவம் உள்ளவர்களுக்குத் தேர்வில் முன்னுரிமை வழங்கப்படும். குறிப்பாக, இதுவரை மாதம் 250 ரூபாய் தொகுப்பூதியம் பெற்றுப் பணியாற்றி வந்த பழைய OHT இயக்குபவர்களுக்கு இந்த நியமனத்தில் முன்னுரிமை அளிக்கலாம் எனவும் கடிதத்தில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பைப் பொறுத்தவரை விண்ணப்பதாரர்கள் 25 வயது பூர்த்தியடைந்தவராகவும், 58 வயதிற்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். பகுதி நேரப் பணியாளர்களாக நியமிக்கப்படும் இவர்கள், தினமும் குறைந்தபட்சம் நான்கு மணி நேரம், அதாவது காலையில் இரண்டு மணி நேரமும் மாலையில் இரண்டு மணி நேரமும் பணியாற்ற வேண்டும். அத்துடன், தேவைப்படும் நேரங்களில் இரவு நேரப் பணிகளையும் மேற்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஒரே குடியிருப்பில் உள்ள பணியிடத்திற்கு இரண்டு பேருக்கு மேல் போட்டியிடும் சூழல் ஏற்பட்டால், வயதில் இளையவர் சற்று தொலைவில் உள்ள ஊராட்சி குக்கிராமத்திற்குப் பணியமர்த்தப்படுவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, கிராமப்புறங்களில் வசிக்கும் எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற தகுதியான நபர்கள், தங்களது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அல்லது சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களைத் தொடர்பு கொண்டு இந்த வேலைவாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.  
 

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

I have 10 years of experience in writing content for news, television, and digital media websites. I have extensive experience in government projects, politics, and other fields. I provide quality news with factual information.
Read More

ZEENEWS TRENDING STORIES