தமிழ் ஆசிரியர்களுக்கு வெளிநாட்டில் வேலை.. மாதம் ரூ.1.25 லட்சம் சம்பளம்.. யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
TN Govt Teacher Jobs: அயல்நாடுகளில் தற்காலிக தமிழ் ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. ஆசிரியர் பணிக்கு மாதம் ரூ.1.25 லட்சம் சம்பளம் வழங்கப்பட உள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
TN Govt Teacher Jobs: தமிழக அரசு கல்வி ரீதியாக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக, தமிழ் மொழிக்காக பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் தமிழக அரசு தமிழ்மணம் என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. தமிழ்மணம் திட்டம் என்பது அயல்நாடுகளில் வாழும் தமிழர்களின் குழந்தைகளுக்கு தமிழ் மொழியைக் கற்பிக்கத் தற்காலிக தமிழ் ஆசிரியர்களை நியமிக்கும் திட்டமாகும்.
தமிழ் ஆசிரியர்களுக்கு வெளிநாட்டில் வேலை
வெளிநாடுகளில் உள்ள தமிழ் குழந்தைகளுக்குத் தமிழ் மொழி, பண்பாடு மற்றும் கலாச்சாரம் ஆகியவற்றை எளிதாகக் கொண்டு சேர்ப்பதே இத்திட்டத்தின் நோக்கமாகும். இத்திட்டத்திற்கான ஆசிரியர்கள் தமிழ் இணையக் கல்விக்கழகம் மூலம் தேர்வு செய்யப்படுகின்றனர். தேர்ந்தெடுக்கப்படும் ஆசிரியர்கள் பிஜி தீவு போன்ற பல்வேறு வெளிநாடுகளில் உள்ள கல்வி நிறுவனங்களுக்குத் தமிழ் ஆசிரியர்களாக அனுப்பி வைக்கப்படுகின்றனர். இந்த நிலையில், தமிழக அரசு தமிழ் ஆசிரியர்களுக்கு வெளிநாட்டில் வேலை தொடர்பான முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பில், வெளிநாடுகளில் வாழும் அயலகத் தமிழர்களின் தலைமுறைகளுக்கு மொழி மற்றும் பண்பாட்டுத் தொடர்ச்சியைக் கற்பிக்கவும் திறன் மேம்படுத்தவும், தமிழ்மொழி மற்றும் தமிழ்க் கலைகளை உலகளாவிய அளவில் பரப்பிட அயலகத் தமிழர் நலன் பொது (மறுவாழ்வு.2.(2))த் துறையால் அரசாணை நிலை எண்.728, நாள் 24.11.2025 அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
அரசாணையினை செயல்படுத்தும் வகையில், தமிழ் இணைய கல்விக்கழகம் வாயிலாக தமிழ் ஆசிரியர்களையும், கலை பண்பாட்டுத் துறையின் வாயிலாக கலை ஆசிரியர்களையும் தேர்வு செய்து அளித்திட அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை கேட்டுக்கொண்டுள்ளது.
கம்போடியா, இந்தோனேசியா, மலாவி, மியான்மர், பிலிப்பைன்ஸ், தென் ஆப்பிரிக்கா, தான்சானியா, மொரிஷியஸ், ரீயூனியன், குவாடலூப், மார்டினிக் ஆகிய நாடுகளில் உள்ள தமிழ்ச் சங்கங்கள் தமிழ் ஆசிரியர்களை அனுப்பிட கோரியுள்ளனர். ஆங்கிலம் நன்கு எழுத, பேசத் தெரிந்த 25 வயது நிரம்பிய, தகுதியும் திறமையும் வாய்ந்த தமிழ் ஆசிரியர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
மேலும் படிக்க: ராணுவம், காவல் துறை பணிகளுக்கான இலவசப் பயிற்சி - விண்ணப்பிக்க கடைசி நாள் எப்போது?
விண்ணப்பிப்பது எப்படி?
விண்ணப்பங்களைத் தமிழ் இணைய கல்விக்கழகத்தின் www.tamilvu.org இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். விண்ணப்பங்களை முழுமையாகப் பூர்த்தி செய்து, இயக்குநர், தமிழ் இணைய கல்விக்கழகம், காந்தி மண்டபம் சாலை, கோட்டூர், சென்னை 600 025 என்ற முகவரிக்கு 30.11.2026 அன்று மாலை 5.00 மணிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் தமிழ் ஆசிரியர்கள் ஓர் ஆண்டுக்கு ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்படுவார்கள். மாதம் ஒன்றுக்கு ரூ.1,25,000/- ஊதியமாக வழங்கப்படும். பணி ஒதுக்கீடு செய்யப்பட்ட நாட்டிற்கு ஒரு முறை சென்று திரும்புவதற்கான போக்குவரத்துச் செலவினம், விசா செலவினம், தங்குமிட செலவினங்களை நிபந்தனைகளுக்குட்பட்டு அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை வழங்கும்.
தற்போதைய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சிறந்த முறையில் வகுப்புகள் மேற்கொள்ளும் தகுதி வாய்ந்த தமிழ் ஆசிரியர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம் 01001 தமிழ் இணைய கல்விக்கழகத்தின் இயக்குநர் (மு.கூ.பொ.) திரு. ச. அருண்ராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
1. 'தமிழ்மணம்' திட்டம் என்றால் என்ன?
வெளிநாடுகளில் வாழும் தமிழர்களின் குழந்தைகளுக்குத் தமிழ் மொழி, பண்பாடு மற்றும் கலாச்சாரத்தைக் கற்பிப்பதற்காகத் தற்காலிகத் தமிழ் ஆசிரியர்களை நியமிக்கும் தமிழக அரசின் திட்டமே 'தமிழ்மணம்' ஆகும்.
2. தமிழ் ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கத் தேவையான தகுதிகள்
25 வயது நிரம்பியவராகவும், ஆங்கிலம் நன்கு எழுதவும் பேசவும் தெரிந்த தகுதியும் திறமையும் வாய்ந்த தமிழ் ஆசிரியராகவும் இருக்க வேண்டும். மேலும், நவீனத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வகுப்புகள் நடத்தும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
3. தமிழ் ஆசிரியர் பணிக்கு என்ன சம்பளம்?
ஓராண்டு ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்படும் ஆசிரியர்களுக்கு மாதம் ரூ.1,25,000/- ஊதியமாக வழங்கப்படும். அத்துடன் விசா, தங்குமிடம் மற்றும் ஒருமுறை சென்று திரும்புவதற்கான பயணச் செலவினங்களும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு அரசால் வழங்கப்படும்.
மேலும் படிக்க: தேர்வு கிடையாது! சென்னை மெட்ரோவில் சூப்பர்வைசர் வேலை... மாதம் ரூ.31,000 சம்பளம்!