சென்னை மாவட்ட வேலைவாய்ப்பு : டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!
Chennai District Jobs : சென்னை மாவட்ட மகளிர் அதிகார மையத்தில் ஒப்பந்த அடிப்படையிலான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
Chennai District Jobs : தமிழ்நாடு அரசின் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் கீழ் செயல்படும் சென்னை மாவட்ட மகளிர் அதிகார மையத்தில் ஒப்பந்த அடிப்படையில் காலியாக உள்ள 6 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை சென்னை மாவட்ட ஆட்சியர் மாலதிஹெலன் வெளியிட்டுள்ளார். 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் முதல் பட்டதாரிகள் வரை விண்ணப்பிக்கக்கூடிய இந்தப் பணியிடங்களுக்குத் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலிப்பணியிடங்கள், சம்பளம் மற்றும் கல்வித் தகுதி விவரங்கள்
பாலின சிறப்பு நிபுணர்: இந்தப் பிரிவில் மொத்தம் 2 காலிப்பணியிடங்கள் உள்ளன. இதற்குச் சமூகப் பணி, சமூகவியல் அல்லது வாழ்வியல் அறிவியல் சார்ந்த துறையில் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும் (முதுகலைப் பட்டம் பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்). மேலும், அரசு அல்லது அரசு சாரா நிறுவனங்களில் (NGO) பெண்கள் மேம்பாடு மற்றும் சமூக ஒருங்கிணைப்பு சார்ந்த பணிகளில் குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் முன்அனுபவம் அவசியம். இப்பணிக்கு மாதச் சம்பளமாக தலா ரூ.21,000 வழங்கப்படும்.
நிதி கல்வியறிவு வல்லுநர்: இப்பிரிவில் 1 பணியிடம் காலியாக உள்ளது. பொருளாதாரம், வங்கியியல் அல்லது அது சார்ந்த துறையில் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும் (முதுகலைப் பட்டதாரிகளுக்கு முன்னுரிமை). நிதி சார்ந்த விழிப்புணர்வு பணிகளில் அரசு அல்லது அரசு சாரா நிறுவனங்களில் 3 ஆண்டுகள் பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும். இப்பணிக்கு மாதம் ரூ.21,000 ஊதியம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கணக்கு உதவியாளர்: இப்பிரிவில் 1 பணியிடம் அறிவிக்கப்பட்டுள்ளது. கணக்கியல் துறையில் பட்டம் அல்லது டிப்ளமோ பெற்றவர்கள், அல்லது கணக்கியலை ஒரு பாடமாகப் படித்த பட்டதாரிகள் இதற்கு விண்ணப்பிக்கலாம். தொடர்புடைய துறையில் அரசு அல்லது அரசு சாரா நிறுவனங்களில் குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் முன்அனுபவம் பெற்றிருக்க வேண்டும். தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு மாதம் ரூ.20,000 சம்பளம் வழங்கப்படும்.
தகவல் தொழில்நுட்பப் பணியாளர் - மிஷன் சக்தி திட்டம்: இப்பிரிவில் 1 காலிப்பணியிடம் உள்ளது. கணினி அல்லது தகவல் தொழில்நுட்பம் சார்ந்த அறிவுடன் ஏதேனும் ஒரு இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். மாநில அல்லது மாவட்ட அளவிலான அரசு, அரசு சாரா அல்லது தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் தரவு மேலாண்மை மற்றும் இணைய வழி அறிக்கை தயாரிப்பில் குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் அனுபவம் அவசியம். இதற்கு மாத ஊதியமாக ரூ.20,000 வழங்கப்படும்.
பல்நோக்கு உதவியாளர் (MTS): இப்பிரிவில் 1 பணியிடம் காலியாக உள்ளது. குறைந்தபட்சம் 10-ம் வகுப்பு (SSLC) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் எழுதப் படிக்கத் தெரிந்திருப்பதோடு, அடிப்படை கணினி அறிவு மற்றும் தட்டச்சுத் திறன் பெற்றிருக்க வேண்டும். இப்பணிக்கு விதவைகள், ஆதரவற்ற பெண்கள் மற்றும் முதிர்கன்னிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு மாதம் ரூ.12,000 சம்பளம் வழங்கப்படும்.
வயது வரம்பு மற்றும் விண்ணப்பிக்கும் முறை
மேற்கண்ட அனைத்துப் பணியிடங்களுக்கும் விண்ணப்பிப்பவர்களின் அதிகபட்ச வயது வரம்பு 35 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் https://chennai.nic.in என்ற சென்னை மாவட்ட அதிகாரப்பூர்வ இணையதளத்திலிருந்து விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய சான்றிதழ்களுடன் இணைத்து, வரும் 20.11.2026 அன்று மாலை 5.00 மணிக்குள் நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவோ "மாவட்ட சமூக நல அலுவலர், மாவட்ட சமூக நல அலுவலகம், 8-வது தளம், ம. சிங்காரவேலர் மாளிகை, 62, ராஜாஜி சாலை, சென்னை மாவட்ட ஆட்சியரகம், சென்னை - 600 001" என்ற முகவரிக்குச் சென்றடையுமாறு அனுப்பி வைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்