சென்னை பெசன்ட் நகரில் போக்குவரத்து மாற்றம்.. இந்த ரூட்ல போகாதீங்க.. வாகன ஓட்டிகளே அலர்ட்!
Chennai Traffic Diversion In Besant Nagar: சென்னையில் 4 நாட்களுக்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்படும் என சென்னை காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெசன்ட் நகர் அன்னை வேளாங்கண்ணி தேவாலயம் திருவிழாவையொட்டி, அப்பகுதியில 4 நாட்கள் போக்குவரத்து மாற்றம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Chennai Traffic Diversion In Besant Nagar: தலைநகர் சென்னையில் போக்குவரத்து நெரிசல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்போது மெட்ரோ பணிகள், சாலை பணிகள் நடந்து வருவதால், சென்னையில் போக்குவரத்து நெரிசல் கடுமையாக இருக்கிறது. இதற்கிடையில், மெட்ரோ பணிகள், திருவிழா போன்ற நாட்களில் அவ்வப்போது போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில், சென்னையில் 4 நாட்களுக்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்படும் என பெருநகர சென்னை காவல்துறை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
பெசன்ட் நகர் வேளாங்கண்ணி தேவாலய திருவிழா
சென்னை பெசன்ட் நகர் அன்னை வேளாங்கண்ணி தேவாலயம் திருவிழா இன்று (ஆகஸ்ட் 29) கொடியேற்றுத்துடன் தொடங்குகிறது. இன்று மாலை 4.30 மணிக்கு கொடியேற்றம் நடைபெறுகிறது. இதனையடுத்து, ஊர்வலமும் நடைபெற உள்ளது. இதனை போன்று, ஆகஸ்ட் 31ஆம் தேதி இரவு 7.30 மணிக்கு நற்கருணை ஊர்வலும், செப்டம்பர் 7ஆம் தேதி இரவு 7.30 மணிக்கு பெரிய தேர் பவனியும் நடைபெற உள்ளது.
மேலும், செப்டம்பர் 8ஆம் தேத மாலை கொடி இறக்க நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதனை கருத்தில் கொண்டு, பக்தர்கள் அதிகளவில் பெசன்ட் தேவாலயத்திற்கு வருகை தருவார்கள். இதனால், ஆகஸ்ட் 29, செப்டம்பர் 7,8ஆம் தேதிகளில் பெசன்ட் நகர் பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் 4 நாட்களுக்கு போக்குவரத்து மாற்றம்
ஊர்வலங்களின் போது 6வது அவென்யூ (பீச் ரோடு), 2வது அவென்யூ, 3வது அவென்யூ, 4வது மெயின் ரோடு மற்றும் 7வது அவென்யூவைச் சுற்றியுள்ள சாலைகளில் போக்குவரத்து கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிழக்கு கடற்கரைச் சாலை (ECR) மற்றும் ஓஎம்ஆர் சாலைச் சாலையிலிருந்து (OMR) வரும் வாகனங்கள், அடையார் பேருந்து நிலையம், இந்திரா நகர் 2வது அவென்யூ மற்றும் இந்திரா நகர் 1வது பிரதான சாலை வழியாக எல்.பி. சாலையை நோக்கித் திருப்பி விடப்படும். பேருந்துகள் எம்.ஜி. சாலை மற்றும் சாஸ்திரி நகர் 1வது பிரதான சாலை வழியாகத் திருப்பி விடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், வட சென்னையில் இருந்து வரும் வாகனங்கள் திருவிக பாலம் வழியாக பெசன்ட் நகர்/சாஸ்திரி நகர் செல்லும் வாகனங்கள் வழக்கம் போல் செல்லும். கூட்ட நெரிசல் ஏற்பட்டால் எம்எல் பார்க், எல்பி சாலை, எம்ஜி சாலை வழியாக மாற்றுப்பாதை பயன்படுத்தப்படும்.
பார்க்கிங் வசதி
ஆல்காட் நினைவு மேல்நிலைப் பள்ளி, அறிஞர் அண்ணா அரசு மேல்நிலைப் பள்ளி, பெசன்ட் நகர் 2வது பிரதான சாலை, 4வது அவென்யூ மற்றும் 17வது குறுக்குத் தெரு ஆகிய இடங்களில் வாகன நிறுத்துமிட வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
ஊர்வலம் நடைபெறும் மூன்று நாட்களிலும் அதிகமான பக்தர்கள் மற்றும் போக்குவரத்து நெரிசல் இருக்கும் என்பதால், இந்த மூன்று பெசன்ட் நகர் கடற்கரை பகுதிகளுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் போக்குவரத்து காவல்துறையினருடன் ஒத்துழைத்து, மாற்று வழிகளைப் பயன்படுத்தி பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.