வாகன ஓட்டிகளே அலர்ட்.. சென்னையில் முக்கிய வழித்தடத்தில் போக்குவரத்து மாற்றம்!
Chennai Traffic Changes: சென்னை காசிமேடு பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்ட்டுள்ளது. எனவே, அவ்வழியாக செல்பவர்கள் திட்டமிட்டு பயணிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே, எந்தெந்த பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்பதை விரிவாக பார்க்கலாம்.
Chennai Traffic Changes: தலைநகர் சென்னையில் போக்குவரத்து நெரிசல் என்பது பெரும் பிரச்னையாக உள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதியில் போக்குவரத்து நெரிசல் நாளுக்கு நாள் அதிகரித்து காணப்படுகிறது. சென்னையில் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலால் மாநகரமே ஸ்தம்பித்து போகிறது. குறிப்பாக, பீக் ஹவரில் வாகனங்கள் ஊர்ந்து செல்கிறது. பல்வேறு பகுதிகளில் மெட்ரோ பணிகள், சாலை விரிவாக்கம், மெட்ரோ வாட்டர் பணி போன்றவை நடைபெறுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதற்கிடையில், அவ்வப்போது பெருநகர சென்னை மாநகர போக்குவரத்து காவல்துறை போக்குவரத்து மாற்றம் செய்து வருகிறது. அந்த வகையில், காசிமேடு பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
காசிமேட்டில் கழிவுநீர் குழாய் சீரமைப்பு
காசிமேடு சிக்னல் அருகே உள்ள எஸ்.என். செட்டி சாலை – ஜீவரத்தினம் சாலை சந்திப்பில் சேதமடைந்த கழிவுநீர் குழாயைச் சீரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனால், அக்டோபர் 1 முதல் அப்பகுதியில் 15 நாட்களுக்கு பின்வரும் போக்குவரத்து மாற்றங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளன. இதனை பின்பற்றி கொண்டு, தங்கள் பயணங்களை திட்டமிட்டுக் கொள்ள வேண்டும் என போக்குவரத்து போலீசார் அறிவுறத்தி இருக்கின்றனர்.
மேலும் படிக்க: வீடு தேடி வரும் ரேஷன் பொருட்கள்.. அக்டோபர் மாத தேதி அறிவிப்பு.. ரெடியா இருங்க மக்களே!
போக்குவரத்து மாற்றம்
எஸ்.என். செட்டி சாலை ஜீவரத்தினம் சாலை சந்திப்பு வழியாக எண்ணூர் செல்லும் (வெளியேறும் திசை) பேருந்துகள் மற்றும் கனரக வாகனங்கள் ஜீவரத்தினம் சாலை வழியாகத் திருப்பி விடப்படும். அங்கிருந்து இடதுபுறம் திரும்பி, பின்னர் வலதுபுறம் திரும்பி வி.பி. கோவில் தெரு டி.எச். சாலை டி.எச். சாலை சுங்கச்சாவடி சந்திப்பு வழியாகத் தங்கள் இலக்கை அடைய வேண்டும்.
எஸ்.என். செட்டி சாலை ஜீவரத்தினம் சாலை சந்திப்பு வழியாக எண்ணூர் செல்லும் (வெளியேறும் திசை ) இருசக்கர வாகனங்கள் மற்றும் இலகுரக வாகனங்கள் ஜீவரத்தினம் சாலை வழியாக திருப்பி விடப்படும் அங்கிருந்து இடதுபுறம் திரும்பி, பின்னர் வலதுபுறம் திரும்பி வி.பி கோவில் தெரு டி.எச். சாலை வழியாகச் சென்று, டி.எச்.சாலை மெட்ரோ ரயில் (பில்லா எண்.12) அருகே 'U' திருப்பம் (U-turn) எடுத்து, இடதுபுறம் பாலகிருஷ்ணா தெருவுக்கு திரும்பி தங்கள் இலக்கை அடைய வேண்டும்.
எண்ணூரிலிருந்து எஸ்.என். செட்டி சாலை வழியாக பாரிமுனை நோக்கி (உள்வரும் திசை) வரும் இருசக்கர வாகனங்கள், இலகுரக வாகனங்கள், பேருந்துகள் மற்றும் கனரக வாகனங்கள், எஸ்.என். செட்டி சாலை பவர் குப்பம் சந்திப்பு (முஸ்லிம் அடக்கஸ்தலத்திற்கு எதிரே) பகுதியில் உள்ள வெளியேறும் திசைக்கு (எதிர் திசையில்) திருப்பி விடப்படும்; அங்கிருந்து இடதுபுறம் திரும்பி எஸ்.என். செட்டி சாலை -காசிமேடு சிக்னல் சந்திப்பு (உள்வரும் திசை) வழியாக தங்கள் இலக்கை அடைய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: சென்னையில் வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம்! பெயர் சேர்க்க முக்கிய வாய்ப்பு..