சென்னை ராஜீவ் காந்தி சாலையில் போக்குவரத்து மாற்றம்.. இந்த ரூட்ல போக முடியாது!
Chennai Traffic Diversion Rajiv Gandhi Salai: சென்னை ராஜீவ் காந்தி சாலையில் செப்டம்பர் 5ஆம் தேதி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மெட்ரோ பணிகள் காரணமாக பெருநகர சென்னை போக்குவரத்து காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
Chennai Traffic Diversion: தலைநகர் சென்னையில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் கடுமையாக இருந்து வருகிறது. அதுவும் தற்போது மெட்ரோ பணிகள், சாலைப் பணிகள் போன்றவற்றை மாநகராட்சி செய்து வருகிறது. இதனால், சென்னையில் போக்குவரத்து நெரிசல் இருந்து வருகிறது. குறிப்பாக, பிக் ஹவரில் வாகனங்களுக்கு நகர்ந்து செல்லும் அளவுக்கு போக்குவரத்து நெரிசல் இருந்து வருகிறது.
இதற்கிடையில், மெட்ரோ பணிகள், சாலைப் பணிகள் போன்ற காரணங்களால் அவ்வப்போது போக்குவரத்து மாற்றத்தை பெருநகர சென்னை காவல்துறை செய்து வருகிறது. இந்த நிலையில், செப்டம்பர் 1 முதல் முக்கிய சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதாவது, செப்டம்பர் 1 முதல் செப்டம்பர் 5ஆம் தேதி வரை ராஜீவ் காந்தி சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் போக்குவரத்து மாற்றம்
இதுகுறித்து போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னை மெட்ரோ ரயில் திட்டம், கட்டம்-2 பணிகளின் ஒரு பகுதியாக, ராஜீவ் காந்தி சாலையில், எல்நெட் அலுவலகம் எதிரில், உள்வரும் வழித்தடத்தில் அமைந்துள்ள 900 மி.மீ. விட்டமுள்ள கழிவுநீர் குழாயில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இப்பணிகளை பாதுகாப்பாக மேற்கொள்ளும் வகையில், 01.09.2026 முதல் 05.09.2026 வரை 4 நாட்களுக்கு, இரவு 11.00 மணி முதல் அதிகாலை 05.00 மணி வரை கீழ்க்கண்ட போக்குவரத்து மாற்றங்கள் நடைமுறைப்படுத்தப்பட உள்ளன.
டைடல் பார்க் சந்திப்பு முதல் இந்திரா நகர் சிக்னல் வரை ராஜீவ் காந்தி சாலையின் உள்வரும் வழித்தடம், மேற்கண்ட இரவு நேரங்களில் பொதுப் போக்குவரத்திற்காக மூடப்படும். டைடல் பார்க் மற்றும் எல்நெட் அலுவலகம் நோக்கிச் செல்லும் Pick-up / Drop-off வாகனங்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்படும்.
டைடல் பார்க் சந்திப்பில், உள்வரும் வாகனங்கள் ராஜீவ் காந்தி சாலையின் எதிர்திசை வழித்தடத்திற்கு மாற்றப்பட்டு, இந்திரா நகர் சிக்னல் வரை செல்ல அனுமதிக்கப்படும். பின்னர் அங்கிருந்து மீண்டும் உள்வரும் வழித்தடத்தில் செல்லலாம். ராமானுஜம் ஐ.டி. சிட்டி செல்லும் வாகனங்கள் இந்திரா நகர் சிக்னலில் உள்ள U-Turn வழியாக செல்லலாம்.
ராஜீவ் காந்தி சாலையில் போக்குவரத்து மாற்றம்
மத்திய கைலாஷ் அருகே சர்தார் பட்டேல் சாலையில் அமைந்துள்ள புதிய மேம்பாலம் மேற்கண்ட பணிக்காலத்தில் போக்குவரத்திற்காக மூடப்படும். கிண்டியில் இருந்து வரும் கனரக வாகனங்கள் மற்றும் MTC பேருந்துகள், மத்திய கைலாஷ் சந்திப்பில் ராஜீவ் காந்தி சாலை நோக்கி வலதுபுறம் திரும்ப அனுமதிக்கப்படாது. அவை அடையாறு சந்திப்பு - LB சாலை சாஸ்திரி நகர் 1-வது அவென்யூ - 11-வது குறுக்குத் தெரு 10-2 குறுக்குத் தெரு M.G. சாலை வழியாக சென்று, பின்னர் LB சாலையில் இணைந்து ECR/OMR பகுதிகளை நோக்கி செல்ல வேண்டும்.
கிண்டியில் இருந்து வரும் இலகுரக வாகனங்கள். மத்திய கைலாஷ் சந்திப்பில் ராஜீவ் காந்தி சாலை நோக்கி வலதுபுறம் திரும்ப அனுமதிக்கப்படும். இந்திரா நகர் சிக்னலில் இடதுபுறம் திரும்பி, இந்திரா நகர் 2-வது அவென்யூ 3-வது அவென்யூ கலாக்ஷேத்ரா சந்திப்பு வழியாக சென்று, LB சாலையில் இணைந்து ECR/OMR பகுதிகளை நோக்கி செல்லலாம். மேற்படி போக்குவரத்து மாற்றங்கள் தற்காலிகமாக நடைமுறைப் படுத்தப்பட உள்ளதால் ஓட்டுநர்களும் மற்றும் பொதுமக்களும் ஒத்துழைப்பு வழங்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.