New Secretariat Explained: தமிழ்நாடு சட்டப்பேரவையில் கடந்த 3 ஆம் தேதி அவை விதி எண் 110 இன் கீழ் அறிவிப்பு வெளியிட்ட முதலமைச்சர் விஜய், தலைமைச் செயலகம், சட்டப்பேரவைச் செயலகம் மற்றும் அனைத்துத் துறை அலுவலகங்கள் அடங்கிய நிர்வாக வளாகம் ரூ.1200 கோடி செலவில், 20 லட்சம் சதுர அடி பரப்பளவில் அமைக்கப்படும் என்று அறிவித்தார். இடத்தை தேர்வு செய்தாலும், சட்டப்பேரவையில் எந்த இடத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கப்படும் என்ற தகவலை விஜய் வெளியிடவில்லை.
ஆனால், கடந்த சில தினங்களுக்கு முன்பு, பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கப்படும் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. 08.09.2026 அன்று வெளியிடப்பட்ட அரசாணையில் முதலமைச்சரின் அறிவிப்புக்கிணங்க புதிய தலைமைச் செயலகம் மற்றும் சட்டமன்றக் கட்டிடம் சென்னை பட்டினப்பாக்கம் கடற்கரையை ஒட்டிய பகுதியில் 25.55 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்படும் எனக் கூறப்பட்டிருந்தது.
அந்தப் பகுதியில் வீட்டு வசதி வாரியத்திற்கு சொந்தமான 21.37 ஏக்கர் நிலம், சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான 0.93 ஏக்கர் நிலம், வருவாய்த் துறையில் ஆவணங்கள் இல்லாத 1.20 ஏக்கர் நிலம் உள்பட மொத்தம் 26.36 ஏக்கர் பரப்பளவில் 15 மாடி கட்டிடமாக புதிய வளாகம் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. புதிய தலைமைச் செயலகம் முதல்வர் விஜய்யின் வீடு அமைந்துள்ள, ஆர்ஏபுரம் மண்டவேலிப்பாக்கத்தில் உள்ள தெற்கு கால்வாய்க் கரைச் சாலையில் இருக்கும் அடுக்குமாடிக் குடியிருப்பிலிருந்து சுமார் 350 மீட்டர் தொலைவில் அமைய உள்ளது.
இதில் தான், 15 மாடி கட்டிடமாக புதிய வளாகம் அமைக்கப்படும். இந்த நிலம் மயிலாப்பூர் நகர எல்லைக்குள் வருகிறது. பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக, பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் அமைப்பது மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதனால், மீனவர்கள் போராட்டத்தை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது.
பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைவது மீனவர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைப்பது மீனவர்களின் வாழ்வாதாரம், வீடுகள், மீன் விற்பனை என்னாகும் என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏனென்றால், தலைமைச் செயலகம் அமைந்தால், பட்டினம்பாக்கம், லூப் சாலையில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம். அப்பகுதி விஐபி பகுதியாக மாறும்போது, மீனவர்கள் தங்கள் அன்றாட வாழ்க்கையை நடத்துவது சிரமத்தை ஏற்படுத்தலாம் என அஞ்சுகின்றனர்.
மேலும், பாதுகாப்பு காரணங்களை காட்டி, செயலகத்தின் சுற்றுப்புறத்தில் உள்ள தற்காலிக வீடுகளை அப்புறப்படுத்த அழுத்தங்கள் வரலாம் என மீனவர்கள் நினைக்கின்றனர். மேலும், லூப் சாலையில் கடற்கரையோரத்தில் மீனவர்கள் படகுகள், வலைகளை வைத்து வருகின்றனர்.
தலைமைச் செயலகம், அதையொட்டி வர உள்ள புதிய உயர்மட்ட மேம்பாலத்தால் அகலமான சாலைகள் போன்ற திட்டங்களால் கடற்கரைக்கான பாதை அடைக்கப்படலாம். இதனால், மீன்பிடி உபகரணங்களை தாரளமாக வைக்க முடியாமல் போகுமோ என்ற அச்சம் மீனவர்கைள் மத்தியில் நிலவுகிறது.
புதிய தலைமைச் செயலகம் கட்டப்படும் பட்சத்தில் அதனால் நேரடியாக முள்ளிகுப்பம், முள்ளிமாநகர், பட்டினப்பாக்கம், சீனிவாசபுரம், ராஜீவ்காந்தி நகர், பவானி குப்பம், இருதயபுரம், செல்வராஜபுரம், டூமிங் குப்பம். நொச்சி நகர் உள்பட 12 மீனவ கிராம மக்கள் பாதிக்கப்படுவார்கள். அவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும்.
முள்ளிகுப்பம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த 1,500-க்கும் மேற்பட்ட மீனவக் குடும்பங்களின் வாழ்வாதாரமும், படகுகளை நிறுத்தவும், வலைகளைப் பின்னவும் பயன்படுத்தப்பட்டு கடற்கரை நிலங்களும் பாதிக்கப்படும். ஏற்கனவே மெரினா கடற்கரை மற்றும் கலங்கரை விளக்கம் முதல் சீனிவாசபுரம் வரையுள்ள மீனவ மக்களிடமிருந்து பல ஆண்டு காலமாக படிப்படியாக அவர்களுக்கு உரிமையான நிலங்கள் பறிக்கப்பட்டு வருகிறது என பூவுலகின் நண்பர்கள் குறிப்பிடுகின்றனர்.
போக்குவரத்து நெருக்கடியைச் சமாளிக்கிறோம் எனும் பெயரில் மீனவர்களின் பாரம்பரிய தொழில் நடவடிக்கைகளுக்கான பயன்பாட்டில் இருந்த இடம் லூப் சாலையாக மாற்றப்பட்டது. கடற்கரையை அழகுபடுத்துகிறோம், நீலக்கொடி சான்றிதழ் எனும் பெயரிலும் மீனவர்களிடம் கலந்துரையாடாமல் அவர்களது வாழ்வியலுக்குத் துளியும் பயன்பாடாத நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகிறது. ஏற்கெனவே சீனிவாசபுரம் – ஊரூர் ஆல்காட் குப்பம் இணைக்கும் பாலம் அமைக்கும் திட்டத்தை மீனவர்கள் எதிர்த்து வருகின்றனர்.
பட்டினம்பாக்கத்தில் முதல்வர் விஜய் தலைமைச் செயலகம் அமைக்க முனைப்பு காட்டுவதற்கு ஜோதிட ரீதியாகவும் காரணம் என்று சொல்லப்படுகிறது. முதல்வர் விஜய் கடக ராசிக்காரராம். கடக ராசிக்காரரான விஜய், கடலோர பகுதியில் அமர்ந்து ஆட்சி செய்தால் அடுத்த 20 ஆண்டுகளுக்கு அவரது பணி சிறப்பாக இருக்கும் என ஜோதிடர் கூறியதாக தகவல்கள் கசிந்து வருகிறது.
கடலோர பக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைத்தால் முதல்வர் விஜய் தேசிய அளவிலும் உச்சத்தை அடையலாம் என ஜோதிடர் கூறியதாக தெரிகிறது இதன் அடிப்படையில் தான், புதிய தலைமைச் செயலகத்தை பட்டினம்பாக்கத்தில் அமைக்க முதல்வர் விஜய் முடிவு செய்தாராம். நீர்நிலைகளுக்கு அருகில் இருப்பது தலைவனுக்கும், தலைமைப் பொறுப்பில் இருப்பவர்களுக்கு பெரும் புகழை தேடி தருமாம்.
இதனால், பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க விஜய் தீவிரமாக இருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்து குறிப்பிட்ட பேசிய மீனவர்கள், "மீனவக் கிராமங்கள் இங்கு ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இருந்து வருகின்றன.
ஆங்கிலேய ஆட்சியாளர்கள் கூட எங்கள் நிலத்தைப் பறிக்க முயன்றனர், ஆனால் நாங்கள் உறுதியாக நின்றோம். இப்போது, விஜய் தனது ஜோதிடரின் ஆலோசனையின் அடிப்படையில் ஒரு திட்டத்துடன் வந்திருந்தால், அதை எதிர்கொள்ள நாங்கள் தயாராக இருக்கிறோம்," என்று கூறினர்.