Guduvanchery Suitcase Murder: சென்னையில் இருந்து டெல்லி செல்லும் தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயில் கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி ஆக்ரா ரயில் நிலையம் சென்றடைந்தது. அப்போது முன்பதிவு செய்யப்படாத பெட்டியில் சிவப்பு நிற சூட்கேஸின் உள்ளே துண்டு துண்டாக வெட்டிய நிலையில் பெண்ணின் உடல் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டது. உடல் பாகங்கள் சென்னையில் உள்ள பிரபலமான துணிக்கடையின் கவரில் போட்டு பேக்கிங் செய்யப்பட்டிருந்ததால் ஆக்ரா போலீசார் தமிழ்நாடு போலீசாரின் உதவியை நாடினர்.
அதன் அடிப்படையில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் உள்ள சிசிடிவி காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டது. அதில் ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் ஆகியோர் சிவப்பு நிற சூட்கேசை எடுத்து வந்து தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் வைத்துவிட்டு சென்றது தெரிய வந்தது. தொடர்ந்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் முதல் போலீசார் சிசிடிவி கேமராக்களை தொடர்ந்து ஆய்வு செய்தனர்.
அதில் சென்னை புறநகர் மின்சார ரயிலில் கூடுவாஞ்சேரி ரயில் நிலையத்தில் ஒரு தம்பதி சிவப்பு நிற சூட்கேஸூடன் ரயிலில் பயணம் செய்வது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் கூடுவாஞ்சேரி ரயில் நிலையம் அருகே இருந்த 200-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது கூடுவாஞ்சேரி மசூதி தெருவில் இருந்து ஒரு ஆட்டோ மூலமாக சம்பந்தப்பட்ட தம்பதியினர் சென்றது கண்டுபிடிக்கப்பட்டு அவர்கள் தங்கி இருந்த வீட்டை போலீசார் உடைத்து சோதனை செய்தனர்.
அப்போது வீடு முழுவதும் இரத்தமாக காட்சி அளித்ததும், ஒருவரை கொலை செய்து உடலை எலும்பு தனியாக, சதை தனியாக வெட்டி எடுத்து காய்கறிகள் போட்டு பிரியாணி டபராவில் சமைத்தும் வட மாநிலத்தில் பிரியாணி செய்வது போல் மைதா மாவு போட்டு தம் போட்டு விட்டு தப்பிச் சென்றுள்ளனர். தொடர்ந்து வீட்டின் உரிமையாளர் மற்றும் அக்கம் பக்கத்தினரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், அஸ்ஸாம் மாநிலத்தை சேர்ந்த மாணிக் உத்தின் லஸ்கர், அவரது மனைவி பகமதி மாஜி மற்றும் ஹைதுல் நிஷா ஆகியோர் தங்கி இருந்தது தெரியவந்தது.
கொலையாளிகளின் புகைப்படத்தை காட்டி உறுதிப்படுத்திய போலீசார் இறந்த பெண் ஹயத்துல் நிஷா என்பதும் தாம்பரம் மெப்ஸ்ஸில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்ததும் தெரியவந்தது. இவருக்கு திருமணமாகி 19-வயதில் மகன் உள்ளதும் இவர் தாம்பரத்தில் ஏசி மெக்கானிக்காக பணிபுரிந்து வந்துள்ளார். இதனை அடுத்து அவரை அழைத்து போலீசார் விசாரணை நடத்தினர்.
தொடர்ந்து ஹயத்துல் நிஷாவின் மகன் அளித்த புகாரின் அடிப்படையில் கூடுவாஞ்சேரி காவல் நிலையத்தில் கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும் இந்த வழக்கு தொடர்பாக இரண்டு தனிப்படைகள் அமைத்து அசாம், மணிப்பூர் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் மணிப்பூர் மாநிலம் காஷிம்பூர் பகுதியில் தனது நண்பர் வீட்டில் பதுங்கி இருந்த மாணிக் லஸ்கர் மற்றும் அவரது மனைவி பகமதி மாஜி ஆகியோரை கைது செய்தனர். தொடர்ந்து மணிப்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி டிரான்சிட் ஆணை பெற்று விமான மூலமாக மீனம்பாக்கம் விமான நிலையம் வந்தடைந்து கூடுவாஞ்சேரி காவல் நிலையம் அழைத்து வந்தனர்.
தொடர்ந்து குற்றவாளிகளிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கொலை செய்யப்பட்ட ஹயத்துல் நிஷாவும் (45), மாணிக் லஸ்கரும், அவரது மனைவி பகமதி மாஜியும் தாம்பரம் மெப்ஸில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தனர். பகமதி மாஜியும், ஹயத்துல் நிஷாவும் ஒரே மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து மாணிக் லஸ்கர் தனது மனைவி மூலமாக ஹயத்துல் நிஷாவுடன் அறிமுகமாகி பழகி வந்துள்ளார். இது நாளடைவில் திருமணம் தாண்டிய உறவாக மாறி உள்ளது.
இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்த நிலையில் ஹயத்துல் நிஷா கர்ப்பம் அடைந்துள்ளார். இந்த கர்ப்பத்திற்கு காரணம் நீதான் என்றும், அதனால் உனது மனைவியை விவாகரத்து செய்துவிட்டு என்னுடன் வாழ வேண்டும் என மாணிக் லஸ்கரை ஹயத்துல் நிஷா வற்புறுத்தி வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மாணிக் லஸ்கர் மற்றும் அவரது மனைவி பகமதி மாஜி இருவரும் கூட்டு சேர்ந்து ஹயத்துல் நிஷா வீட்டில் தங்கி அவரை கொலை செய்ய திட்டம் தீட்டி உள்ளனர்.
அதன்படி அவரை கொலை செய்ய திட்டம் தீட்டி யூட்யூபில் வீடியோ பார்த்து உள்ளனர். அதில் ப்ளம்ஸ் பழ கொட்டையை உட்கொண்டால் "அமிக்டலின்" என்னும் விஷப்பொருள் வெளியாகி சயனைடாக மாறும் தன்மை உள்ளதாக தெரியவந்துள்ளது. தொடர்ந்து பிளம்ஸ் பழத்தின் கொட்டையை எடுத்து அதனை காய வைத்து மாவாக அரைத்து உள்ளனர். பின்னர் மெடிக்கலில் இருந்து "டியூப்" மாத்திரையை வாங்கி வந்து அதில் இருக்கும் மருந்தை வெளியில் கொட்டி விட்டு மாவாக அரைத்து வைத்திருந்த பிளம்ஸ் பழத்தின் கொட்டையை அதன் உள்ளே நிரப்பி உள்ளனர்.
தொடர்ந்து கடந்த ஜூலை இரண்டாம் தேதி காலை ஹயத்துல் நிஷாவின் வீட்டிற்கு வந்த மாணிக் லஸ்கர் மற்றும் அவரது மனைவி பகமதி மாஜி இருவரும் கர்ப்பமாக இருப்பதால் சத்து மாத்திரை சாப்பிட வேண்டும் எனவும், தான் மெடிக்கலில் இருந்து வாங்கி வந்த மாத்திரையை போட்டு கொள்ளுமாறு வலியுறுத்தி அவரது வாயில் மாத்திரையை திணித்து உள்ளனர். மாத்திரையை உட்கொண்ட பின்னர் ஹயத்துல் நிஷா மயக்கம் அடைந்துள்ளார்.
இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திய மாணிக் லஸ்கர் மற்றும் அவரது மனைவி பகமதி மாஜி ஆகியோர் ஹயத்துல் நிஷாவின் கழுத்தை அறுத்து பிரியாணி அண்டாவில் அவரின் ரத்தத்தை பிடித்து உள்ளனர். உடலை எப்படி அகற்றுவது என தெரியாததால் மீண்டும் youtube மூலமாக வீடியோ பார்த்து ஹயத்துல் நிஷாவை தலைகீழாக பேனில் கட்டி தொங்கவிட்டு ஆட்டின் உடலை அறுப்பது போல சதை தனியாக எலும்பு தனியாக பிரித்து வெட்டி உள்ளனர். மேலும் கொலை செய்யப்பட்டது ஹயத்துல் நிஷா தான் என்பது தெரிய கூடாது என்பதற்காக அவரின் தலையிலிருந்து தோல் மற்றும் முடியை தனியாக பிரித்து எடுத்து உள்ளனர்.
பெண்ணை சதையை உரித்து கொதிக்க வைத்தோம்
பின்னர் ஹயத்துல் நிஷாவின் உடலில் இருந்து எலும்பு, மண்டை ஓடு ஆகியவற்றை பிரித்து ஜூலை மூன்றாம் தேதி இரவு சூட்கேஸில் வைத்து டெல்லி செல்லும் தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் வைத்துவிட்டு வந்துள்ளனர். தொடர்ந்து வீட்டில் இருந்த சதை மற்றும் மற்ற உடல் உறுப்புகளை பிரியாணி அண்டாவில் வினிகர், உப்பு, காய்கறிகள் சேர்த்து சமைத்து மைதா மாவு போட்டு பேக்கிங் செய்துள்ளனர்.
இதனால் நீண்ட நாட்களுக்கு துர்நாற்றம் அடிக்காமல் உடல் அழுகிவிடும் என நினைத்து அவர்கள் மீண்டும் தங்களுடைய சொந்த ஊருக்கு சென்று தலைமறைவாகி உள்ளனர். இந்த நிலையில் கொலை சம்பவம் நடைபெற்று 25 நாட்களை கடந்த நிலையில் கூடுவாஞ்சேரி தனிப்படை போலீசார் குற்றவாளிகள் இருவரையும் கைது செய்து கூடுவாஞ்சேரி காவல் நிலையம் அழைத்து வந்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மணிப்பூரில் கைது செய்யப்பட்டபோது அங்குள்ள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி போலீசார் அழைத்து வந்த நிலையில், ஆறு நாட்கள் போலீசார் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்திக் கொள்ளலாம் எனவும், ஆனால் 48 மணி நேரத்திற்கு ஒரு முறை குற்றவாளிகள் இருவருக்கும் மருத்துவ பரிசோதனை நடத்த வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டதன் அடிப்படையில் மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.