தமிழ் வழி பயின்றுவர்களுக்கான இட ஒதுக்கீடு விதிமுறையில் மாற்றம் - தமிழ்நாடு அரசு
Tamil Medium PSTM Reservation Rules : தமிழ்வழியில் (PSTM) பயின்றவர்களுக்கு அரசுப் பணியில் முன்னுரிமை கொடுக்கும் இடஒதுக்கீட்டில் விதிமுறைகள் மாற்றம் செய்யப்பட்டு, புதிய விதிமுறைகளை வெளியிட்டது தமிழ்நாடு அரசு.
Tamil Medium PSTM Reservation Rules : தமிழ் வழியில் படித்தவர்களுக்கான அரசுப் பணி முன்னுரிமை இடஒதுக்கீட்டில் (PSTM) தமிழ்நாடு அரசு மிக முக்கியமான சட்டத் திருத்தத்தைக் கொண்டு வந்துள்ளது. ஒரு முறை PSTM இடஒதுக்கீட்டின் மூலம் அரசுப் பணியில் சேர்ந்தவர்கள், மீண்டும் அதே ஊதிய நிலையிலான மற்றொரு பதவிக்கு அதே சலுகையைப் பயன்படுத்த முடியாது என்ற புதிய கட்டுப்பாடு அமலுக்கு வந்துள்ளது.
பின்னணி என்ன?
தமிழகத்தில் தமிழ் வழியில் பள்ளி மற்றும் கல்லூரிப் படிப்பை முடிக்கும் இளைஞர்களுக்கு அரசு வேலைவாய்ப்புகளில் முன்னுரிமை அளிக்கும் நோக்கில், கடந்த 2010-ஆம் ஆண்டு PSTM (Persons Studied in Tamil Medium) சட்டம் கொண்டுவரப்பட்டது. இதன் மூலம் டிஎன்பிஎஸ்சி உள்ளிட்ட அரசுப் பணித் தேர்வுகளில் 20 சதவீத இடங்கள் தமிழ் வழியில் பயின்றவர்களுக்கு ஒதுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், இந்த இடஒதுக்கீட்டு முறையில் உள்ள நடைமுறைச் சிக்கல்களைச் சரிசெய்யவும், பிற தகுதியான தேர்வர்களுக்கும் சம வாய்ப்பை உறுதி செய்யவும் தமிழ்நாடு அரசு இச்சட்டத்தில் திருத்தங்களை மேற்கொண்டுள்ளது.
புதிய சட்டத் திருத்தத்தின் முக்கிய அம்சங்கள்
ஒரே சலுகையை மீண்டும் பயன்படுத்தக் கட்டுப்பாடு:
PSTM முன்னுரிமை இடஒதுக்கீட்டின் கீழ் ஏற்கனவே தேர்வு செய்யப்பட்டு அரசுப் பணியில் சேர்ந்த ஒருவர், மீண்டும் அதே ஊதிய நிலை (Same level of pay) அல்லது குறைந்த ஊதியம் கொண்ட வேறு பணிகளுக்கான போட்டித் தேர்வுகளில் PSTM இடஒதுக்கீட்டுப் பிரிவில் போட்டியிட முடியாது.
உயர் பதவிகளுக்கு மட்டும் விதிவிலக்கு:
தற்போது வகிக்கும் பணியை விட அதிக ஊதிய விகிதம் கொண்ட உயர் பதவிகளுக்கான நேரடி நியமனத் தேர்வுகளில் மட்டுமே அவர்கள் மீண்டும் PSTM சலுகையைப் பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்கப்படுவர்.
'நேரடி நியமனம்' என்பதற்கான தெளிவான விளக்கம்:
PSTM சலுகை என்பது திறந்தநிலை போட்டித் தேர்வு அல்லது நேர்காணல் வழியாக நடைபெறும் "நேரடி நியமனங்களுக்கு" மட்டுமே பொருந்தும். பணி மாறுதல் (Recruitment by transfer) மூலம் செய்யப்படும் நியமனங்களுக்கு இச்சலுகை பொருந்தாது என்பது சட்டப்பிரிவு 2-ல் தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளது.
இந்த மாற்றத்திற்கு என்ன காரணம்?
டிஎன்பிஎஸ்சி குரூப்-4 அல்லது குரூப்-2 போன்ற தேர்வுகளில் PSTM ஒதுக்கீட்டின் கீழ் ஒருமுறை பணி நியமனம் பெற்ற பலர், தாங்கள் விரும்பிய மாவட்டத்திற்கோ அல்லது துறைக்கோ மாறுவதற்காக, மீண்டும் அதே நிலை கொண்ட அடுத்தடுத்த தேர்வுகளிலும் PSTM ஒதுக்கீட்டிலேயே விண்ணப்பித்து வந்தனர்.
இதனால், புதிதாகப் படித்து அரசு வேலைக்காகக் காத்திருக்கும் மற்ற தமிழ் வழித் தேர்வர்களுக்கான வாய்ப்பு பறிபோவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்தக் குறைபாட்டைக் களைந்து, புதிய தேர்வர்களுக்கும் பரவலாக வேலைவாய்ப்பு கிடைப்பதை உறுதி செய்யவே இந்த கட்டுப்பாடு கொண்டுவரப்பட்டுள்ளது.
யாருக்குப் பொருந்தும்? எப்போது முதல் அமல்?
பழைய அறிவிக்கைகளுக்குப் பாதிப்பில்லை:
இந்த புதிய அரசிதழ் வெளியீட்டுத் தேதிக்கு முன்னதாக அரசுத் தேர்வு முகமைகளால் வெளியிடப்பட்ட தேர்வு அறிவிக்கைகளுக்கு இந்த புதிய கட்டுப்பாடு பொருந்தாது.
சட்டப்பூர்வப் பாதுகாப்பு:
கடந்த 2010 செப்டம்பர் 7 முதல் இதுவரை மேற்கொள்ளப்பட்ட நேரடி நியமனங்கள் மற்றும் நடைமுறைகளின் சட்டப்பூர்வத் தன்மையைப் பாதுகாக்கும் விதிகளும் இந்த அரசிதழில் உறுதி செய்யப்பட்டுள்ளன.
சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட இந்த மசோதாவுக்குத் தமிழக ஆளுநர் ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து, சட்டத்துறை மூலம் அதிகாரப்பூர்வமாக அரசிதழில் வெளியிடப்பட்டு நடைமுறைக்கு வந்துள்ளது. இனிவரும் அரசுப் பணித் தேர்வு அறிவிக்கைகளில் இப்புதிய விதிமுறை முழுமையாகப் பின்பற்றப்படும்.