இலவச மென்பொருள் மற்றும் நிதி மேலாண்மை பயிற்சி - விண்ணப்பிப்பது எப்படி?
Tamil Nadu Government Free Software Finance Training : வெற்றிப்படி திட்டத்தின் கீழ் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இளைஞர்களுக்கு மென்பொருள் மற்றும் நிதி சார்ந்த இலவசத் திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் குறித்த முக்கிய அறிவிப்பை சென்னை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ளார்.
Tamil Nadu Government Free Software Finance Training : தமிழ்நாடு அரசின் 'வெற்றிப்படி திட்டத்தின்' கீழ் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இளைஞர்களுக்கு மென்பொருள் மற்றும் நிதி சார்ந்த இலவசத் திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் வழங்கப்பட உள்ளதாக சென்னை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். தகவல் தொடர்பு தொழில்நுட்பக் கழகத்துடன் (ICT Academy) இணைந்து இந்தப் பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன.
மேலும் படிக்க | சென்னை அரசு வேலைவாய்ப்பு: பெண்கள் தனிச்சிறையில் பணி - மாதம் ரூ.25,000 ஊதியம்!
வழங்கப்படும் பயிற்சிகளின் விவரம்
இந்தத் திட்டத்தின் கீழ் தகவல் தொடர்பு தொழில்நுட்பக் கழகத்தின் மூலம் சென்னை மாவட்டத்தில் பல்வேறு தொழில்நுட்ப மற்றும் நிதி சார்ந்த பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன. குறிப்பாக, இளநிலை மென்பொருள் உருவாக்குநர், இணையதள உருவாக்குநர், பயன்பாட்டு மென்பொருள் உருவாக்குநர் மற்றும் மென்பொருள் வடிவமைப்பாளர் ஆகிய மென்பொருள் சார்ந்த பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன. மேலும், மேலாண்மைத் தகவல் அமைப்பு தரவுப் பகுப்பாய்வாளர், நுண்நிதி நிர்வாக அலுவலர் மற்றும் காப்பீட்டு முகவர் ஆகிய நிதி சார்ந்த பயிற்சிகளும் இதில் இடம்பெற்றுள்ளன.
கல்வித் தகுதி மற்றும் நிபந்தனைகள்
மென்பொருள் சார்ந்த பயிற்சிகளில் சேர விரும்பும் விண்ணப்பதாரர்கள் இளங்கலை பொறியியல் அல்லது பி.எஸ்.சி கணினி அறிவியல் ஆகிய பாடப்பிரிவுகளில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். அதேபோல், நிதி சார்ந்த பயிற்சிகளைப் பெற இளங்கலை வணிகவியல் அல்லது இளங்கலை வணிக நிர்வாகவியல் ஆகிய பாடங்களில் பட்டம் பெற்றிருப்பது அவசியமாகும்.
இப்பயிற்சியில் சேருபவர்கள் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வகுப்பைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும். விண்ணப்பதாரர்களின் வயது 18 முதல் 35 வயதிற்குள்ளும், அவர்களின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 3 லட்சத்திற்குள்ளும் இருக்க வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
பயிற்சி நடைபெறும் இடங்கள்
சென்னை மாவட்டத்தில் ஆண்கள் மற்றும் பெண்களுக்குத் தனித்தனி இடங்களில் இப்பயிற்சிகள் நடைபெற உள்ளன. அதன்படி, ஆண்களுக்கு மேற்கு சி.ஐ.டி. நகர், சைதாப்பேட்டையில் உள்ள எம்.சி. ராஜா கல்லூரி மாணவர் விடுதியிலும், பெண்களுக்கு சென்னை-15, சைதாப்பேட்டையில் உள்ள அரசு ஆதிதிராவிடர் நலத்துறை ஆராய்ச்சி மாணவியர் விடுதி கற்றல் கற்பித்தல் மையத்திலும் பயிற்சிகள் நடத்தப்பட உள்ளன.
வேலைவாய்ப்பு மற்றும் விண்ணப்பிக்கும் முறை
இப்பயிற்சியினை முழுமையாக முடிக்கும் இளைஞர்களுக்குச் சான்றிதழ் வழங்கப்படுவதோடு, பயிற்சி அளிக்கும் நிறுவனத்தின் மூலமாகத் தகுதியான நபர்களுக்கு வேலைவாய்ப்பும் ஏற்படுத்தித் தரப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகுதியும் விருப்பமும் உள்ள இளைஞர்கள் இப்பயிற்சியில் சேருவதற்கு ஆதிதிராவிடர் நல இயக்குநரகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.taadw.tn.gov.in என்ற முகவரியில் 26.11.2026-க்குள் பதிவு செய்து கொள்ளலாம் என சென்னை மாவட்ட ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் கேட்டுக்கொண்டுள்ளார்.