சென்னைக்கு அலர்ட்! இன்று முதல் விடாமல் கொட்டப்போகும் கனமழை.. வெதர்மேன் அப்டேட்
TN Weather Update: நவம்பர் 243ஆம் தேதி சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக் கூடும் என டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் தெரிவித்துள்ளார்.
TN Weather Update: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இருந்து வருகிறது. ஆனால், கடந்த சில தினங்களாகவே மழையின் தாக்கமே இல்லை. வடமாவட்டங்கள், தென் மாவட்டங்கள், டெல்டாவில் மழை பொழிவு இல்லை. இதனால், டெல்டா மாவட்டங்களில் வறட்சி நிலவி வருகிறது. இதற்கிடையில், நேற்று நள்ளிரவில் சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் லேசான மழை பெய்தது. இந்த நிலையில், இன்றைய வானிலை நிலவரம் குறித்து டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் முக்கிய தகவலை பகிர்ந்துள்ளார்.
இன்று எங்கெல்லாம் மழை பெய்யும்?
டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் தனது எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது, "கிழக்கு திசை அலைகளுடன் தொடர்புடைய குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக, 2026 நவம்பர் 23 முதல் 27 வரை தமிழ்நாடு முழுவதும் வடகிழக்கு பருவமழை தீவிரமடையக்கூடும். சில இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
தென்மேற்கு வங்கக்கடலில், கிழக்கு திசைக் காற்றோட்டத்தில் நிலவும் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி காரணமாக, 2026-ஆம் ஆண்டு நவம்பர் 23 முதல் 27 வரை தமிழ்நாட்டில் பருவமழை தீவிரமடையக்கூடும். இது வலுவடைந்து ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறி, இலங்கை, மன்னார் வளைகுடா, குமரிக்கடல் மற்றும் லட்சத்தீவு கடல் பகுதி வழியாக நகர்ந்து செல்லக்கூடும்.
தற்போது வீசிக் கொண்டிருக்கும் வறண்ட, குளிர்ந்த வடதிசைக் காற்றுக்கு மாற்றாக, ஈரப்பதம் நிறைந்த வெப்பமான கிழக்குத் திசைக் காற்று வீசக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் தாக்கத்தால் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் இன்று (நவம்பர் 23) இடியுடன் கூடிய பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.
மேலும் படிக்க: சென்னை மக்களே உஷார்... நவம்பர் 21, 22 போக்குவரத்து மாற்றங்கள் - முழு விவரம் இதோ
அடுத்த 24 மணி நேரத்தில் விழுப்புரம், புதுச்சேரி, கடலூர், மயிலாடுதுறை, காரைக்கால், நாகப்பட்டினம், திருவாரூர் மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களில் மிதமான முதல் ஓரளவு கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. வட உள்மாவட்டங்கள் மற்றும் மத்திய உள்மாவட்டங்களிலும் மாலை மற்றும் இரவு நேரங்களில் லேசான மழை பெய்யக்கூடும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னைக்கு மிக கனமழை அலர்ட்
மேலும், "நவம்பர் 24,25ஆம் தேதிகளில் கடலூர், புதுச்சேரி, மயிலாடுதுறை, காரைக்கால், நாகப்பட்டினம், திருவாரூர், தூத்துக்குடி மற்றும் ராமேஸ்வரம் கடலோர மண்டலங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், புதுக்கோட்டை, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் அவ்வப்போது கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. உள்மாவட்டங்கள், மேற்கு உள்மாவட்டங்கள் மற்றும் கொங்கு மண்டலத்தில் பரவலான மழை பெய்ய வாய்ப்புள்ளது என டெல்டா வெதர்மேன் கூறியுள்ளார்.
மேலும், நவம்பர் 26,27ஆம் தேதிகளில் தென் கடலோர, காவிரி டெல்டா மற்றும் உள் மாவட்டங்களில் மிதமானது முதல் ஓரளவு கனமான மழையும், ஆங்காங்கே கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது. அதே சமயம், உள் பகுதிகள் மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் நல்ல மழை எதிர்பார்க்கப்படுகிறது. இது வெள்ளத்தை ஏற்படுத்தும் மழையோ அல்லது பரவலான மிக கனமழையோ குறித்த எச்சரிக்கை அல்ல. நவம்பர் 23 முதல் 27 வரை நல்ல, மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது; மிக கனமழை என்பது அங்கொன்றும் இங்கொன்றுமாக மட்டுமே இருக்கக்கூடும்" என கூறியுள்ளார்.
மேலும் படிக்க: அடுத்த ரவுண்ட் ஆரம்பம்! நவ.23 முதல் மிக கனமழை.. வெதர்மேன் முக்கிய அலர்ட்
முக்கிய குறிப்புகள்
- கிழக்கு திசை காற்றோட்டத்தில் காணப்படும் தாழ்வான பகுதி (trough of low), ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறக்கூடும். இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவோ அல்லது புயலாகவோ மாறுவதற்கு வாய்ப்பில்லை.
- மழை அவ்வப்போது பெய்யுமே தவிர, நாள் முழுவதும் தொடர்ந்து பெய்யாது.
- காவிரி டெல்டா மற்றும் தென் தமிழகத்தின் சில பகுதிகளில், நவம்பர் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளது.
- தமிழகத்தின் உட்புறப் பகுதிகள் மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில், நவம்பர் 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் நல்ல மழை பெய்யக்கூடும்.
- இந்த மழைப்பொழிவு விவசாயிகளுக்குப் பயனுள்ளதாக அமையும் மற்றும் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டத்தை உயர்த்த உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் படிக்க: பூந்தமல்லி - வடபழனி மெட்ரோவில் முக்கிய மாற்றம்... சென்னை மக்கள் கவனத்திற்கு...