கிருஷ்ண ஜெயந்தி விடுமுறை: சொந்த ஊர் செல்பவர்களுக்கு குட் நியூஸ்.. சிறப்பு பேருந்துகள் இயக்கம்
TNSTC Special Buses: கிருஷ்ண ஜெயந்தி பண்டிகையை முன்னிட்டு, தமிழக போக்குவரத்து கழகம் சென்னையில் இருந்து இதர மாவட்டங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்குகிறது. இன்று முதல் செப்டம்பர் 6ஆம் தேதி பல்வேறு மாவட்டங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.
Krishna Jayanthi Special Buses: தமிழகத்தில் நாளை (செப்டம்பர் 4) கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. இதனால், நாளை தமிழகம் முழுவதும் விடுமுறை அறிவிக்கப்ட்டுள்ளது. தொடர்ந்து, வார இறுதி நாட்களான சனி, ஞாயிறுக் கிழமை என மூன்று நாட்கள் தொடர் விடுமுறை வருகிறது. இதனால், மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்லத் தொடங்கியுள்ளனர். இந்த நிலையில் தான், தமிழக போக்குவரத்து கழகம் சிறப்பு பேருந்துகள் இயக்குவதாக அறிவித்துள்ளது. இன்று முதல் செப்டம்பர் 6ஆம் தேதி சென்னையில் இருந்து பல்வேறு மாவட்டங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக அறிவித்துள்ளது.
சிறப்பு பேருந்துகள் இயக்கம்
செப்டம்பர் 3ஆம் தேதியான இன்று (வியாழக்கிழமை), செப்டம்பர் 4ஆம் தேதி (வெள்ளிக்கிழமை கிருஷ்ண ஜெயந்தி) செப்டம்பர் 5ஆம் தேதி (சனிக்கிழமை) மற்றும் செப்டம்பர் 6ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) வார விடுமுறை நாட்களை முன்னிட்டு சென்னையிலிருந்து இதர இடங்களுக்கும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழ்நாடு முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களால் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு செப்டம்பர் 3ஆம் தேதி (வியாழக்கிழமை) அன்று 910 பேருந்துகள் இயக்கப்படுகிறது.செப்டம்பர் 4ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) அன்று 740 பேருந்துகளும், செப்டம்பர் 5ஆம் தேதி (சனிக்கிழமை) 880 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர். பெங்களூரு ஆகிய இடங்களுக்கு செப்டம்பர் 3ஆம் தேதி (வியாழக்கிழமை) அன்று 210 பேருந்துகளும், செப்டம்பர் 4ஆம் தேதி வெள்ளிக் கிழமை அன்று 115 பேருந்துகளும், செப்டம்பர் 5ஆம் தேதி சனிக்கிழமை அன்று 115 பேருந்துகளும் மேற்கூறிய இடங்களிலிருந்தும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. பெங்களூர், திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்து பல்வேறு இடங்களுக்கு 200 சிறப்பு பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
கிளாம்பாக்கம், மாதவரத்தில் இருந்து சிறப்பு பேருந்துகள்
மாதவரத்திலிருந்து செப்டம்பர் 3 முதல் செப்டம்பர் 5ஆம் தேதி வரையிலான நாட்களில் கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், வேலூர், ஓசூர் மற்றும் புதுச்சேரி ஆகிய இடங்களுக்கு ஒவ்வொரு நாளும் 95 சிறப்பு பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும், ஞாயிறு அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூர் திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் செப்டம்பர் 6ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) அன்று 805 சிறப்பு பேருந்துகள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த வார இறுதியில் வியாழக்கிழமை அன்று 14,016 பயணிகளும் வெள்ளிக்கிழமை அன்று 8688 பயணிகளும் சனிக்கிழமை 6459 பயணிகளும் மற்றும் ஞாயிறு அன்று 14,239 பயணிகளும் பயணம் மேற்கொள்ள முன்பதிவு செய்துள்ளனர்.
இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்திற்கு www.tnstc.in மற்றும் TNSTC Mobile App மூலம் முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இச்சிறப்பு பேருந்து இயக்கத்தினை கண்காணிக்க அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே, பயணிகள் மேற்கூறிய வசதியினை பயன்படுத்தி தங்களது பயணத்தினை மேற்கொள்ள இதன் மூலம் கேட்டுக்கொள்ளப்படுகிறது. என தெரிவிக்கப்பட்டுள்ளது.