சென்னை டூர் - 1: ஒரே நாளில் 6 விஷ்ணு கோவில்கள் - எங்கெல்லாம் போகலாம்?
Chennai TTDC Vishnu Temples Tour : தமிழ்நாடு அரசு சென்னையை சுற்றி உள்ள விஷ்ணு கோவில்களுக்கு ஆன்மீக சுற்றுலா அழைத்துச் செல்கிறது. இரண்டு சுற்றுலா திட்டங்களில் முதலாவதை இங்கு விரிவாக காணலாம்.
Chennai TTDC Vishnu Temples Tour : ஆடி மாதம் நிறைவடைய இருக்கிறது. அடுத்து ஆவணி மாதம் பிறக்கிறது. செப்டம்பர் - அக்டோபரில் புரட்டாசி மாதம் பிறக்கும். புரட்டாசி மாதங்களில் பொதுவாக வைணவ கோயில்களுக்கு பக்தர்கள் சென்று தரிசனம் மேற்கொள்வார்கள்.
அந்த வகையில், தமிழ்நாடு அரசின் சுற்றுலாத்துறையின் கீழ் இயங்கி வரும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் (Tamilnadu Tourism Development Corporation) பக்தர்களுக்காக விஷ்ணு கோவில்களுக்கான ஆன்மீகச் சுற்றுலா ஏற்பாடு செய்துள்ளது.
விஷ்ணு கோவில்களுக்கு ஆன்மீக டூர்
மதுரை, திருச்சி, தஞ்சாவூர் மாவட்டங்களில் விஷ்ணு கோவில்களுக்கு TTDC அழைத்துச் செல்கிறது. அந்த வகையில், TTDC சென்னையை சுற்றிய விஷ்ணு கோவில்களுக்கும் ஒருநாள் ஆன்மீக சுற்றுலாவை ஏற்பாடு செய்துள்ளது. சென்னையில் மட்டும் இரண்டு ஆன்மீக சுற்றுலா திட்டங்களை TTDC ஏற்பாடு செய்துள்ளது.
சென்னையில் இரண்டு சுற்றுலா
அதில் முதல் சுற்றுலா திட்டம் குறித்து இங்கு பார்க்கலாம். இந்த சுற்றுலாவில் எந்தெந்த கோவில்களுக்கு அழைத்துச் செல்லப்படுவீர்கள்?, என்னென்ன வசதிகள் கிடைக்கும்?, எவ்வளவு கட்டணம்? என்பதை விரிவாக தெரிந்துகொள்ளலாம்.
சென்னை விஷ்ணு கோவில் சுற்றுலா - 1
- சென்னை திருவல்லிக்கேணி வாலஜா சாலையில் உள்ள சுற்றுலா வளாகத்தில் இருந்து காலை 8.30 மணிக்கு பேருந்து புறப்படும்.
- காலை 9 மணிக்கு திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலுக்குச் சென்று தரிசனம் மேற்கொள்ளலாம்.
- காலை 10 மணிக்கு பெசன்ட் நகரில் அஷ்டலஷ்மி கோவிலுக்குச் செல்லலாம்.
- பகல் 11.30 மணிக்கு திருவிடந்தை நித்ய கல்யாண பெருமாள் கோவிலில் சாமி தரிசனம் செய்யலாம்.
- மதியம் 12 மணி முதல் மதியம் 1 மணி வர திருவிடந்தை கோவில் அன்னதானத்தில் மதிய உணவு அருந்தலாம்.
- மாலை 4 மணிக்கு மாமல்லபுரம் ஸ்தலசயன பெருமாள் கோவிலில் தரிசனம் மேற்கொள்ளலாம்.
- மாலை 5.30 மணிக்கு சிங்கப்பெருமாள் கோவில் பகுதியில் உள்ள பாடலாத்ரி நரசிம்மர் கோவிலில் தரிசனம் மேற்கொள்ளலாம்.
- மாலை 6 மணிக்கு திருநீர்மலை நீர்வண்ண பெருமாள் கோவில் சென்று தரிசனம் செய்யலாம்.
- இரவு 7.30 மணிக்கு மீண்டும் திருவல்லிக்கேணி சுற்றுலா வளாகத்திற்கு திரும்பிவிடலாம்.
எவ்வளவு கட்டணம்?
நீங்கள் ஒரே நாளில் 6 பெருமாள் கோவில்களுக்கு சென்று சிறப்பான தரிசனம் மேற்கொள்ளளாம். கோவில் அன்னதானத்தையும் அருந்தலாம். பெருமாளின் அருளையும் பெறலாம். பேருந்து வசதி ஏற்படுத்தி தரப்படும்.
1800-4253-1111 என்ற தொலைப்பேசி எண்ணிலும்; support@ttdconline.com என்ற மின்னஞ்சல் முகவரியிலும் தொடர்புகொண்டு சுற்றுலா குறித்த பிற விவரங்களை தெரிந்துகொள்ளலாம். இந்த சுற்றுலாவுக்கு ஒரு நபருக்கு ரூ.1000 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.