CJP-க்கு அண்ணாமலை ஆதரவு: "டெல்லி போலீஸ் அணுகுமுறை தப்பு.. சிறை அவர்களை தலைவர்களாக்கும்!"
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக கேள்வி எழுப்பி வரும் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினருக்கு ’வி தீ லீடர்ஸ்’ அமைப்பின் அண்ணாமலை ஆதரவு தெரிவித்துள்ளார். டெல்லி போலீசார் அந்த கட்சி தலைவர்களை கையாளும் விதம் ஏற்புடையதல்ல என்றும், அவர்களை தொடர்ந்து சிறையில் அடைப்பது அவர்களின் அரசியல் செல்வாக்கை அதிகரிக்கவே உதவும் என்றும் அவர் விமர்சித்துள்ளார்.
தமிழக பாஜகவின் முன்னாள் தலைவரான அண்ணாமலை, அக்கட்சியில் இருந்து விலகிய பின்னர் வி தீ லீடர்ஸ் என்ற அமைப்பை நடத்தி வருகிறார். இந்த நிலையில், கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினரின் போராட்டம் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார்.
அப்போது பேசிய அவர், நாட்டில் சட்டம் அனைவருக்கும் சமமாக செயல்படுத்தப்பட வேண்டும் என்றும், டெல்லி போலீசார் அந்த கட்சி தலைவர்களிடம் நடந்துகொள்ளும் விதம் ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் தெரிவித்தார்.
கைது நடவடிக்கையால் தலைவர்கள் வலுவடைவார்கள்
கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினரிடம் ஜாமீன் மனுக்கள் தொடர்பான நடவடிக்கைகள் மற்றும் அவர்கள் மீண்டும் சிறையில் அடைக்கப்படுவது குறித்து பேசிய அண்ணாமலை, இத்தகைய செயல்பாடுகள் இளைஞர்களிடையே மத்திய அரசுக்கு எதிரான அதிருப்தியை ஏற்படுத்தக்கூடும் என்று கூறினார்.
மேலும், மகாத்மா காந்தி உள்ளிட்ட பல தலைவர்கள் சிறைக்கு சென்றதன் மூலம் மக்களிடையே பெரும் செல்வாக்கை பெற்றதை சுட்டிக்காடிய அவர், கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினரையும் தொடர்ந்து சிறையில் அடைப்பது அவர்களை மேலும் வலிமையான தலைவர்களாக மாற்றிவிடும் என்றார்.
அதேநேரத்தில், அந்த கட்சியினர் சட்டத்தை மீறியிருந்தால் உரிய நடவடிக்கை எடுப்பதில் தவறில்லை என்றும், ஆனால் தேவையற்ற வகையில் அவர்களை அலைக்கழிப்பது போன்ற தோற்றம் ஏற்படுவதை தவிர்க்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
வாக்காளர் பட்டியல் திருத்த விவகாரத்தில் முழு ஆதரவு
கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினரின் போராட்ட அணுகுமுறையையும் செயல்பாடுகளையும் தாம் முழுமையாக ஏற்றுக்கொள்ளாவிட்டாலும், அவர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு ஆதரவு அளிப்பதாக அண்ணாமலை தெரிவித்தார். குறிப்பாக, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மற்றும் அது தொடர்பான விவகாரங்களில் அந்த கட்சியினர் முன்வைக்கும் கேள்விகள் முக்கியமானவை என்றும் அவற்றை முழுமையாக ஆதரிப்பதாகவும் அவர் கூறினார்.
மேலும், டெல்லி போலீசார் இந்த விவகாரத்தில் சட்டத்தை தங்கள் கைகளில் எடுத்துக்கொள்வதை போன்ற நிலை ஏற்பட்டுள்ளதாக விமர்சித்தார். சட்டம் அனைவருக்கும் பொதுவானது என்பதை வலியுறுத்திய அவர், இத்தகைய நடவடிக்கைகள் ஜனநாயக ரீதியான கேள்விகளை எழுப்புவோருக்கு எதிர்மறையான விளைவுக்ளை ஏற்படுத்தக்கூடும் என்றும் சுட்டிக்காட்டினார்.
வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பான விவாதங்கள் தொடர்ந்து வரும் நிலையில், கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினருக்கு அண்ணாமலை தெரிவித்துள்ள இந்த ஆதரவும், டெல்லி போலீசார் மீதான அவரது விமர்சனமும் அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளன.