Trichy Job Fair: தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் நூற்றுக்கணக்கானோர் வேலைவாய்ப்புகளை பெற்று வருகின்றனர். இந்த நிலையில, திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு முகாம் குறித்து அம்மாவட்ட ஆட்சியர் பிரத்திக் தாயள் முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலுள்ள வேலைநாடுநர்களை தனியார் துறைகளில் பணியமர்த்தும் நோக்கத்தோடு, திருச்சிராப்பள்ளி மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து நடத்தும் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 24.10.2026 (சனிக்கிழமை) அன்று திருவானைக்கோவில், ஸ்ரீமத் ஆண்டவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் காலை 9.00 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரை நடைபெறவுள்ளது.
இம்முகாமில் தொழில்துறை, சேவைத்துறை, விற்பனைத்துறை போன்ற பல்வேறு தனியார்துறைகளைச் சார்ந்த 200-க்கும் மேற்பட்ட தனியார்துறை நிறுவனங்கள் தகுதியுள்ள நபர்களை வேலைக்கு தேர்ந்தெடுக்க உள்ளனர்.
மேலும், இம்மாவட்டத்திலுள்ள திறன் பயிற்சி நிறுவனங்கள் கலந்து கொண்டு இலவச திறன் பயிற்சிக்கு ஆட்களை தேர்வு செய்யவுள்ளனர்.
இத்தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் 10-ஆம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு, ஐ.டி.ஐ, டிப்ளமோ, செவிலியர், இளநிலை, முதுநிலை பட்டப்படிப்புகள் பொறியியல் பட்டப்படிப்புகள் போன்ற கல்வித்தகுதிகளையுடைய 18 வயது முதல் 35 வயதிற்குட்பட்ட வேலைநாடுநர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் சுய விவரக்குறிப்பு (BIO-DATA), அனைத்து கல்விச்சான்றுகளின் நகல்கள், ஆதார் அட்டை மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றுடன் கலந்து கொண்டு பயன்பெறலாம்.
மேலும் தகவல்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தினை நேரிலோ அல்லது 0431-2413510, 94990-55902 என்ற தொலைபேசி/அலைபேசி எண்களிலோ தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் பிரத்திக் தாயள் தெரிவித்துள்ளார்
மேலும், திருச்சி மாவட்டத்தில் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பும் வெளியாகி உள்ளது. அதாவது, மாவட்ட பெண்கள் அதிகாரமளித்தல் மையத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மூலம் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்திடும் வகையிலும் துறை சார்ந்த திட்டப்பணிகளுக்கு உதவிடும் வகையிலும் மாவட்ட சமூக நல அலுவலகத்தில், "மாவட்ட பெண்கள் அதிகாரமளித்தல் மையம்" ஒப்பந்த அடிப்படையில் செயல்பட்டு வருகிறது. இம்மையத்தில் பணிபுரிய ஒப்பந்த அடிப்படையில் பணியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளது. இப்பதவிகளுக்கு விண்ணப்பம் செய்ய கடைசி நாள்: 23.10.2026 மேலும் விபரங்களுக்கு திருச்சிராப்பள்ளி மாவட்ட சமூகநல அலுவலகத்தை அணுக வேண்டும்.
கல்வித்தகுதி : சமூக பணியில் முதுகலைப்பட்டம் பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
பணி அனுபவம்: தொடர்புடைய துறையில் அரசு அல்லது அரசு சாரா நிறுவனங்களில் குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 35 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை: 1
இந்த பணிக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் அக்டோபர் 23ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.