கோவையில் கொடூரம்: பெற்ற தாயை கொன்ற மகன்.. மறைக்க முயன்ற மனைவி! என்ன நடந்தது?
Coimbatore Crime News: கோவை மாவட்டத்தில் குடும்ப தகராறு காரணமாக மதுபோதையில் பெற்ற தாயை கத்தியால் குத்தி கொலை செய்த மகன் செய்து செய்யப்பட்டுள்ளார். இந்த கொலையை மறைக்க முயன்றதாக அவரது மனைவியையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கோவை மாவட்டம் வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள முட்டத்துவயல் கிராமத்தின் காந்திஜி தெருவை சேர்ந்தவர் மீனாட்சி (60). இவரது மகன் அனந்தபாபு (38). அனந்தபாபுவுக்கும் அவரது தாயார் மீனாட்சிக்கும் இடையே அடிக்கடி குடும்ப பிரச்சினைகள் ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. குறிப்பாக, அனந்தபாபுவின் திருமணம் தொடர்பாக இருவருக்கும் இடையே தொடர்ந்து கருத்து வேறுபாடுகள் இருந்து வந்துள்ளன.
மதுபோதையில் தாயை கொன்ற மகன்
இந்த நிலையில், நேற்று இரவு அனந்தபாபு மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது மீனாட்சிக்கும் அவருக்கும் இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. மதுபோதையில் இருந்த மகனின் பேச்சு மற்றும் நடவடிக்கைகளால் ஆத்திரமடைந்த மீனாட்சு அவரை கண்டித்துள்ளார். இதனால் கோபமடைந்த அனந்தபாபு, வீட்டில் இருந்த கத்தியை எடுத்து தாயை சரமாரியாக குத்தி உள்ளார். இதைல் பலத்த காயமடைந்த மீனாட்சி ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
கொலை நடந்தபோது வீட்டில் வேறு யாரும் இல்லை எனக் கூறப்படுகிறது. மேலும், அப்பகுதியில் கோயில் நிகழ்ச்சி நடைபெற்றதால் அக்கம் பக்கத்தினரும் வீட்டில் இல்லாத சூழல் நிலவி உள்ளது.
கொலையை மறைக்க முயற்சி
இதற்கிடையில், அனந்தபாபுவின் மனைவி கல்பனா (29) கோயிலுக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு திரும்பி உள்ளார். அப்போது மாமியார் மீனாட்சி ரத்த வெள்ளத்தில் கிடப்பதையும், அருகில் கணவர் செய்வதறியாமல் நிற்பதையும் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.
இது குறித்து கணவரிடம் கேட்டபோது, தாய் தன்னை திட்டியதால் ஆத்திரத்தில் கத்தியால் குத்தியதாக அனந்தபாபு தெரிவித்துள்ளார். இதையடுத்து அக்கம் பக்கத்தினரின் உதவியுடன் 108 ஆம்புலன்ஸுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் சம்பவ இடத்திற்கு வந்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள் மீனாட்சி ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே, கொலை சம்பவம் காவல்துறையினருக்கு தெரிந்தால் சிக்கல் ஏற்படும் எனக் கருதிய அனந்தபாபு அதை மறைக்க திட்டமிட்டதாக கூறப்படுகிறது. இதற்கு அவரது மனைவி கல்பனாவும் உடந்தையாக இருந்ததாக தெரிகிறது. இருவரும் சம்பவத்தை மறைக்கும் வகையில் சில மாற்றங்களை செய்துவிட்டு, மீனாட்சி உயிரிழந்த தகவலை உறவினர்களுக்கு தெரிவித்துள்ளனர். வீட்டிற்கு வந்த உறவினர்களுக்கு மீனாட்சியின் மரணத்தில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் ஆலாந்துறை காவல் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளனர்.
கணவன் மனைவி கைது
இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த ஆலாந்துறை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். மீனாட்சியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து அனந்தபாபுவிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர தாயை கொலை செய்ததை ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது. மேலும், கொலை சம்பவத்தை மறைக்க முயன்றதாக அவரது மனைவி கல்பனாவையும் காவல்துறையினர் கைது செய்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மதுபோதையில் பெற்ற தாயை மகன் கொலை செய்த சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.