ஐபிஎல் 2027 தொடருக்கான வீரர்கள் ஏலத்தில் இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பங்கேற்க உள்ளார். ஆனால், அதே இங்கிலாந்து அணியை சேர்ந்த அதிரடி பேட்ஸ்மேன் ஹாரி புரூக்கால் இந்த ஏலத்தில் கலந்துக்கொள்ள முடியாத சூழல் உள்ளது. இருவரும் சமீபத்திய ஐபிஎல் தொடர்களில் விளையாடாமல் விலகியிருந்திருந்த நிலையில், பென் ஸ்டோக்ஸால் மட்டும் எப்படி 2027 ஐபிஎல் தொடருக்கான மினி ஏலத்தில் பங்கேற்க முடியும் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
ஐபிஎல் தொடரின் விதிமுறைகளின்படி, வெளிநாட்டு வீரர்கள் அனைவரும் மெகா ஏலத்தில் தங்களது பெயரை பதிவு செய்வது கட்டாயமாகும். அவ்வாறு பதிவு செய்யாத பட்சத்தில், அடுத்த ஆண்டு நடைபெறும் ஏலத்தில் பங்கேற்க முடியாது.
கடந்த 2025 ஆம் ஆண்டு நடைபெற்ற மெகா ஏலத்தில் பென் ஸ்டோக்ஸ் தனது பெயரை பதிவு செய்யவில்லை. இங்கிலாந்து அணிக்கான போட்டிகள் மற்றும் தனது உடல்தகுதியை நிர்வகிப்பதில் கவனம் செலுத்துவதற்ஆக அவர் இந்த முடிவை எடுத்திருந்தார். இதனால் 2026 ஆம் ஆண்டு நடைபெற்ற மினி ஏலத்தில் அவரால் பங்கேற்க முடியவில்லை. இந்த தடையானது 2026 ஆம் ஆண்டுடன் முடிவடைந்த நிலையில், 2027 ஐபிஎல் தொடருக்காக நடக்க இருக்கும் மினி ஏலத்தில் பென் ஸ்டோக்ஸ் எவ்வித தடையின்றி பங்கேற்க உள்ளார்.
பென் ஸ்டோக்ஸ் ஐபிஎல் மெகா ஏலத்தில் தனது பெயரை பதிவு செய்வதற்கு முன்பாகவே விலகுவதாக அறிவித்தார். ஆனால் ஹாரி புரூக் 2025 மெகா ஏலத்தில் பதிவு செய்து ஒரு அணியால் வாங்கப்பட்ட பின், தான் விலகுவதாக அறிவித்தார்.
2025 ஆம் ஆண்டு நடைபெற்ற மெகா ஏலத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி ஹாரி புரூக்கை ரூ. 6.25 கோடிக்கு வாங்கியது. இந்த சூழலில், புரூக் தனிப்பட்ட காரணங்களை கூறி, அந்தாண்டு ஐபிஎல் தொடரில் இருந்து விலகினார். இதன் காரணமாக, பிசிசிஐ ஹாரி புரூக் 2027 ஐபிஎல் தொடர் வரை விளையாட தடை விதித்தது. அதனால்தான், ஹாரி புரூக்கால் 2027 தொடருக்கான மினி ஏலத்தில் தனது பெயரை பதிவு செய்ய முடியவில்லை.
ஐபிஎல் ஏலத்தில் ஒரு அணியால் தேர்வு செய்யப்பட்ட பிற்கு, எதிர்பார்த்த தொகை கிடைக்கவில்லை என்பதற்காகவோ அல்லது வேறு காரணங்களுக்காகவோ சில வெளிநாட்டு வீரர்கள் கடைசி நேரத்தில் தொடரில் இருந்து விலகுவது அதிகரித்த நிலையில், பிசிசிஐயிடம் ஐபிஎல் அணிகளின் உரிமையாளர்கள் புகார் தெரிவித்தனர். அதாவது வீரர்கள் இப்படி விலகுவது அணிகளின் திட்டமிடல் பாதிக்கப்படுவதாக தெரிவித்தனர்.
இதனைத்தொடர்ந்து நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் முடிவு எடுத்த நிலையில், இப்படி ஏலத்தில் ஒரு அணியால் எடுத்த பிறகு, விலகு வீரர்களுக்கு இரண்டு ஆண்டுகள் தடை விதிக்கும் முறையை கொண்டு வந்தனர்.
இதற்கு முன்பு ஜேசன் ராய், அலெக்ஸ் ஹேல்ஸ் உள்ளிட்ட வீரர்கள் ஏலத்தில் தேர்வு செய்யப்பட்ட பிறகு ஐபிஎல் தொடரில் இருந்து விலகி உள்ளனர். மிட்செல் ஸ்டார்க் 2017 ஆம் ஆண்டு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் இருந்து விலகினார். 2019ஆம் ஆண்டு உலகக் கோப்பையை கருத்தில் கொண்டு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியாலும் அவர் விடுவிக்கப்பட்டார்.
ஐபிஎல்லில் இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் வனிந்து ஹசரங்காவின் பயணம் கவனிக்கக்கூடியதாக உள்ளது. அவர் 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டு நடந்த சீசனில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக ரூ. 10.75 கோடி ஒப்பந்தத்தில் விளையாடினார். அதன் பிறகு 2024ல் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அவரை ரூ. 1.5 கோடிக்கு வாங்கி இருந்த நிலையில், காயம் காரணமாக அந்த சீசனில் விளையாடவில்லை. 2025ல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக ரூ. 5.25 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டார். பின்னர் அந்த அணியில் இருந்து விடுவிக்கப்பட்ட பிறகு, 2026 ஆண்டில் லக்னோ சூப்பர் ஜெயன்ஸ் அணி அவரை ரூ. 2 கோடிக்கு வாங்கியது. ஆனால் தொடை பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக அவரால் விளையாட முடியவில்லை. தற்போது, லக்னோ அணி அவரை விடுவித்துள்ள நிலையில், மீண்டும் நடைபெற உள்ள ஏலத்தில் ரூ. 2 கோடி அடிப்படை விலையில் தனது பெயரை பதிவு செய்துள்ளார்.
2027 ஐபிஎல் ஏலத்திற்கான ஆரம்ப பட்டியலில் மொத்தம் 1,220 வீரர்கள் இடம்பெற்றுள்ளதாக பிசிசிஐ உறுதிப்படுஹ்தி உள்ளது. இதில் அதிகமாக ஆஸ்திரேலிய வீரர்கள் தங்களது பெயரை பதிவு செய்துள்ளனர்.
இதனை தொடர்ந்து, ஒவ்வொஎரு ஐபிஎல் அணியும் ஆரம்ப பட்டியலில் உள்ள வீரர்களில் தங்களுக்கு விருப்பமாணவர்களின் பெயர்களை பிசிசிஐயிடம் சமர்ப்பிக்க உள்ளன. அதன் அடிப்படையில் இறுதி ஏலப் பட்டியல் தயாரிக்கப்படும். இந்த இறுதிப் பட்டியல் வரும் டிசம்பர் 4 ஆம் தேதி வெளியிடப்பட உள்ளன.