கோவையில் ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் 8 கொலைகள்.. பீதியில் மக்கள், சீர்குலையும் சட்டம் ஒழுங்கு?
கோவை மாவட்டத்தில் இந்த ஆகஸ்ட் மாதம் மட்டும் 8 கொலைகள் நடந்ததாக கூறப்படுகிறது. தொடர் கொலைகள் நடந்து வருவது அம்மாவட்ட மக்களை அச்சத்தில் ஆழ்த்தி உள்ளது.
கோவை மாவட்டத்தில் அடுத்தடுத்து அரங்கேறும் கொலை மற்றும் கொலை தொடர்பான சம்பவங்கள் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக ஆகஸ்ட் மாதத்தில் பல்வேறு பகுதிகளில் நடந்துள்ள கொலைச் சம்பவங்கள், கோவை மாவட்டத்தின் சட்ட ஒழுங்கு குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்புகின்றன.
இம்மாத தொடக்கத்தில் கோவை மலுமிச்சம்பட்டி பகுதியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் 19 வயது மாணவர் அமுதன் சக மாணவர்களால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் பலர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், இரு தரப்பினர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
அதேபோல், கோவை பீளமேடு பகுதியில் சென்னை வியாசர்பாடியை சேர்ந்த 25 வயது இளைஞர் நவீன் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் 9 பேர் கைது செய்யப்பட்டதுடன், கொலைக்கு பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் ஆயுதங்களையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
இதையடுத்து, பெரியநாயக்கன்பாளையம் அருகே கும்பல் தாக்குதலில் படுகாயமடைந்த 34 வயது தொழிலாளி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், சிங்காநல்லூர் பகுதியில் நண்பரின் தந்தையை கல்லால் தாக்கி கொலை செய்ததாக சிறுவன் ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவமும் பதிவாகியுள்ளது. போலீசாரின் விசாரணையில், மகனுடன் நட்பாக இருப்பதை கண்டித்ததால் ஏற்பட்ட தகராறில் இந்த கொலை நடந்ததாக கூறப்படுகிறது.
சமீபத்தில் கோவை ஆலந்தரை அருகே 60 வயது நாகராஜ் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக அவரது நண்பர் கந்தசாமியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குடிபோதையில் ஏற்பட்ட தகராறு காரணமாக கொலை நடந்ததா என்ற கோணத்திலும் விசாரணை நடைபெறுகிறது. இப்படி, கோவை மாவட்டத்தில் கடந்த 28 நாட்களில் 8 கொலை சம்பவங்கள் பதிவாகியிருப்பது பொதுமக்களிடையே அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே, குற்றச் சம்பவங்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். கோவை மாநகரில் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. ஜூலை 8 முதல் ஆகஸ்ட் 8 வரை நடத்தப்பட்ட சிறப்பு நடவடிக்கையில் 273 பேர் கைது செய்யப்பட்டு, 215 வழக்குகள் பதிவு செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.