government employee rules Tamil Nadu : அரசு நிர்வாகத்தில் ஒழுங்குமுறையையும் வெளிப்படைத்தன்மையையும் நிலைநாட்டும் வகையில் தமிழக வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை மிகக் கடுமையான சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அரசு ஊழியர்கள் தங்களின் பணியிட மாறுதல் மற்றும் பதவி உயர்வு போன்ற சொந்தக் கோரிக்கைகளுக்காக அரசியல்வாதிகள் மற்றும் வெளிச் செல்வாக்குகளைப் பயன்படுத்துவதற்கு இதில் கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அலுவலக வழிகளைப் புறக்கணித்து நடக்கும் இத்தகைய சிபாரிசு நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க அரசு இந்தத் துணிச்சலான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் கீழ் இயங்கும் பல்வேறு அரசு அலுவலகங்களில் பணியாற்றி வரும் சில அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள், தங்களின் பணியிட மாறுதல், பதவி உயர்வு உள்ளிட்ட தனிப்பட்ட சேவை சார்ந்த தேவைகளுக்காக உரிய நிர்வாக நடைமுறைகளைப் பின்பற்றுவதில்லை என்பது கண்டறியப்பட்டுள்ளது. துறைத் தலைவரின் அனுமதியைப் பெறாமல், நேரடியாக அமைச்சர்களின் அலுவலகங்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் (MLAs) மற்றும் முதலமைச்சரின் முகவரி பிரிவு ஆகியவற்றுக்கு மனு அளிப்பதுடன், சிபாரிசுகளையும் நாடி வருகின்றனர். நிர்வாக மரபுகளுக்கு முற்றிலும் எதிரான இந்த போக்கைத் தடுத்து நிறுத்த தற்போது துறை ரீதியான கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டுள்ளன.
அரசு ஊழியர்கள் அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்துவதைத் தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் நடத்தை விதிகள் மிகத் தெளிவாகத் தடை செய்கின்றன:
விதி 18-ன் படி: எந்தவொரு அரசுப் பணியாளரும் தங்களின் பணி சார்ந்த விஷயங்களில் சாதகமான ஆணைகளைப் பெறுவதற்கோ அல்லது சலுகைகளை அடைவதற்கோ, எவ்வித வெளிச் செல்வாக்கையோ அல்லது அரசியல் அழுத்தங்களையோ பயன்படுத்தவோ, அல்லது கொண்டுவர முயற்சிக்கவோ கூடாது.
விதி 20-ன் படி: அரசு ஊழியர்கள் தங்களின் நியாயமான குறைகள் மற்றும் கோரிக்கைகளை மேலதிகாரிகளிடம் தெரிவிக்கும்போது, அதற்கென வகுக்கப்பட்டுள்ள உரிய அதிகாரப்பூர்வ வழிமுறைகளை மட்டுமே பின்பற்ற வேண்டும். மேலும் அரசின் கண்ணியத்திற்கும், நற்பெயருக்கும் குந்தகம் விளைவிக்கும் வகையில் எந்தவொரு தொடர்பையோ அல்லது அறிக்கையையோ வெளிப்படுத்தக் கூடாது.
இந்த விதிகளை மீறிச் செயல்படுவது நடத்தை விதிமீறலாகக் கருதப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் அனைத்துப் பணியாளர்களும் கீழ்க்கண்ட வழிமுறைகளைக் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது:
பணி தொடர்பான எந்தவொரு கோரிக்கை அல்லது குறையாக இருந்தாலும், தங்களின் அலுவலகத் தலைவர் மற்றும் துறைத் தலைமை வழியாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
துறைத் தலைவரின் முன்அனுமதியின்றி அல்லது உரிய வழிமுறையின்றி அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் முதல்வர் முகவரிப் பிரிவை நேரடியாக அணுகுவதோ அல்லது வெளிச் செல்வாக்கைப் பயன்படுத்த முயற்சிப்பதோ முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும்.
இந்த அறிவுறுத்தல்களை மீறி நேரடியாக மனுக்கள் அனுப்பப்படுவது தெரியவந்தால், சம்பந்தப்பட்ட பணியாளர் மீது தமிழ்நாடு குடிமைப் பணிகள் (ஒழுங்கு மற்றும் மேல்முறையீடு) விதிகளின் கீழ் தயவுதாட்சண்யமின்றி உடனடியாக ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இந்த அறிவுறுத்தல்கள் அனைத்து அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கும் சுற்றறிக்கையாக அனுப்பப்பட்டு, அவர்களின் ஒப்புதல் பெறப்பட்டு ஆவணப்படுத்தப்பட வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. சிபாரிசு கலாச்சாரத்தைக் கட்டுப்படுத்தி, தகுதி மற்றும் மூப்பு நிலையின் அடிப்படையில் வெளிப்படையான நிர்வாகத்தை முன்னெடுக்க அரசு எடுத்துள்ள இந்த நடவடிக்கை நேர்மையான ஊழியர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.