கோவை பெரியார் அறிவுலக சர்ச்சை.. அகல்விளக்கு பதிப்பாளர் மோகன் விளக்கம்!
கோவை பெரியார் அறிவுலக நூல் கொள்முதல் முறைகேடு குற்றச்சாட்டுகளை மறுத்த பதிப்பாளர் மோகன், ரூ.17 லட்சம் மதிப்பிலான நூல்கள் மட்டுமே வழங்கப்பட்டதாகவும், அரசு குழுக்களின் அனுமதியுடன் கொள்முதல் நடந்ததாகவும் விளக்கம் அளித்துள்ளார்.
கோவை பெரியார் அறிவுலகத்திற்கு நூல்கள் வாங்கியதில் முறைகேடுகள் நடைபெற்றதாக எழுந்துள்ள சர்ச்சைக்கு, தொடர்புடைய பதிப்பகங்களின் உரிமையாளர் மோகன் விளக்கம் அளித்துள்ளார். கோடிக்கணக்கில் ஊழல் நடந்ததாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள அவர், நூல் கொள்முதல், பதிப்பங்களின் செயல்பாடு மற்றும் எழுந்தாளர்களின் பெயர்கள் குறித்து தனது தரப்பு தகவல்களை பகிர்ந்துள்ளார்.
நூல் கொள்முதல் ரூ. 17 லட்சம் மட்டுமே
கோவை பெரியார் அறிவுலகத்திற்காக நூல்கள் வாங்கியதில் பல கோடி ரூபாய் முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதற்கு பதிலளித்த பதிப்பாளர் மோகன், தனது பதிப்பங்கள்மூலம் வழங்கப்பட்ட நூல்களின் மொத்த மதிப்பு ரூ. 17 லட்சம் மட்டுமே என தெரிவித்துள்ளார். மேலும், இந்த விற்பனையில் பதிப்பகத்திற்கு வழக்கமாக கிடைக்கும் 10 சதவீத லாபத்தை கணக்கிட்டால், சுமார் ரூ. 1.70 லட்சம் மட்டுமே வருவாய் கிடைக்கும் என்றும் அவர் விளக்கமளித்துள்ளார். இதனால், கோடிக்கணக்கில் ஊழல் நடந்ததாக கூறப்படும் தகவல்கள் உண்மைக்கு மாறானவை என அவர் மறுப்பு தெரிவித்துள்ளார்.
30 ஆண்டுகளாக பதிப்பகத் துறையில் இருப்பதாக விளக்கம்
புத்தக வெளியீட்டு துறையில் சுமார் 30 ஆண்டுகளாக பணியாற்றி வருவதாக மோகன் குறிப்பிட்டுள்ளார். மேலும், பீனிக்ஸ் பப்ளிகேஷன்ஸ் மற்றும் அகல் விளக்கம் பதிப்பகம் ஆகிய இரண்டு நிறுவனங்களை நடத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளார். சிக்மா பிரிண்டிங் குறித்து எழுந்த கேள்விகளுக்கு பதிலளித்த அவர், அது ஏற்கனவே மூடப்பட்ட சிறிய அச்சுப் பிரிவு என்றும், தற்போது அரசின் சிறிய அளவிலான அச்சு பணிகளுக்கு மட்டும் பயன்படுத்தப்படுவதாகவும் கூறியுள்ளார்.
பெரியார் அறிவுலகத்திற்காக வழங்கப்பட்ட நூல்கள் அனைத்தும் அரசு சார்ந்த புத்தகக் குழு மற்றும் உரிய குழுக்களின் அனுமதி பெற்ற பிறகே கொள்முதல் செய்யப்பட்டதாகவும் மோகன் தெரிவித்துள்ளார்.
நூல்களில் இடம்பெற்ற பெயர்கள் புனைப்பெயர்கள்!
நூல்களில் இடம்பெற்றுள்ள சில எழுத்தாளர்களின் பெயர்கள் குறித்த சர்ச்சைக்கும் பதிப்பாளர் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. திரிஷா விஜய், விஜய் மோகன், விஜய் பாரதி உள்ளிட்ட பெயர்கள் உண்மையான எழுத்தாளர்களின் புனைப்பெயர்கள் என்றும், அவற்றை வேறு விதமாகப் புரிந்துகொள்ள வேண்டியதில்லை என்றும் மோகன் தரப்பு தெரிவித்துள்ளது.
குற்றச்சாட்டுகளுக்கு சட்டப்படி பதிலளிப்பேன்
தன் மீது முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் மற்றும் அவற்றைச் சுற்றியுள்ள விவாதங்கள் குறித்து வழக்கறிஞருடன் ஆலோசனை நடத்தி, உரிய சட்ட நடவடிக்கைகள் மற்றும் பதில்களை வழங்குவேன் என மோகன் தெரிவித்துள்ளார். கோவை பெரியார் அறிவுலக நூல் கொள்முதல் தொடர்பாக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், பதிப்பாளர் மோகனின் இந்த விளக்கம் விவகாரத்தில் அவரது தரப்பு நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளது.