தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பல்வேறு நிறுவனங்கள் தங்களது ஊழியர்களுக்கு போனஸ், இனிப்புகள் மற்றும் பரிசுப் பொருட்களை வழங்குவது வழக்கம். பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் வகையில், பெரும்பாலான நிறுவனங்கள் ஒரு மாத சம்பளம் அல்லது அதற்கு குறைவான தொகையை போனஸாக வழங்குகின்றன.
ஆனால், சில நிறுவனங்கள் ஊழியர்கள் எதிர்பார்க்காத வகையில் அதிக மதிப்புள்ள பரிசுகளை வழங்கி வருகின்றன. அந்த வகையில், குஜராத் மாநிலம் சூரத்தில் உள்ள ஜவுளிக்கடை உரிமையாளர் ஒருவர் தனது ஊழியர்களுக்கு வழங்கிய தீபாவளி பரிசு பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
சூரத்தின் மோட்டா வரச்சா பகுதியில் ராம்ஸ்வரூப் முண்டே என்பவர் ஜவுளிக்கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் 20 பேர் வேலை செய்து வருகின்றனர். தீபாவளியை முன்னிட்டு, இந்த 20 ஊழியர்களுக்கும் தலா ரூ.1 லட்சம் ரொக்கப் பணம் மற்றும் இனிப்புகளை அவர் வழங்கியுள்ளார்.
இதனை சற்றும் எதிர்பாராத ஊழியர்கள், மகிழ்ச்சியில் கண் கலங்கினர். கடை உரிமையாளரை அன்புடன் கட்டியணைத்து தங்களது நன்றியை வெளிப்படுத்தினர். இது தொடர்பான வீடியோ இணையத்தில் பரவி, பலரது பாராட்டுகளையும் பெற்று வருகிறது.
Diwali bonus with a difference! Surat textile businessman Ramswaroop stunned his 20 employees by gifting each over ₹1 lakh in cash. Currency bundles of ₹10 to ₹500 were arranged on silver-like puja platters & handed over to employees, leaving many emotional. video gone viral. https://t.co/LJ8FmbIRt2
— Dilip Kshatriya (@Kshatriyadilip) November 7, 2026
தனது ஊழியர்களுக்கு இவ்வளவு பெரிய தொகையை வழங்கியதற்கான காரணத்தை ராம்ஸ்வரூப் முண்டே பகிர்ந்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், “என்னிடம் வேலை செய்யும் 20 பேரையும் ஊழியர்களாக மட்டும் நான் பார்ப்பதில்லை. அவர்கள் என் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். அப்படி இருக்கும்போது, அவர்கள் பணக்கஷ்டத்துடன் தீபாவளியை கொண்டாட வேண்டிய அவசியம் என்ன?
தீபாவளியின்போது அவர்களுக்கு தேவையான பொருட்களை தாங்களே வாங்கிக்கொள்ளும் வகையில் பணம் கொடுக்க வேண்டும் என்று நினைத்தேன். அவர்களின் முகத்தில் உண்மையான மகிழ்ச்சியை பார்க்க வேண்டும் என்பதுதான் எனது விருப்பம். அதனால்தான் ஒவ்வொருவருக்கும் ரூ.1 லட்சம் ரொக்கப் பணத்துடன் பரிசுப் பொருட்களையும் வழங்கினேன்” என்று தெரிவித்துள்ளார்.
இந்த போனஸால் மகிழ்ச்சியடைந்த கடை ஊழியர்களில் ஒருவரான ரேகாபென் பலாடா, தனக்கு கிடைத்த தொகை வாழ்க்கையில் முக்கியமான தேவையை நிறைவேற்ற உதவும் என்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், “தீபாவளிக்கு இவ்வளவு பெரிய தொகை போனஸாக கிடைக்கும் என்று நான் நினைத்துக்கூட பார்க்கவில்லை. புதிதாக வீடு வாங்க வேண்டும் என்பது எனது ஆசை. அதற்கு பணம் தேவைப்பட்ட நிலையில், தற்போது கிடைத்துள்ள இந்த தொகை எனது வீட்டுக் கனவை நிறைவேற்ற உதவியாக இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஊழியர்களின் குடும்பத்தினருக்கும் மகிழ்ச்சியை அளிக்கும் வகையில் ஜவுளிக்கடை உரிமையாளர் வழங்கிய இந்த பரிசு, சமூக வலைதளங்களில் பாராட்டுகளை குவித்து வருகிறது.