SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

கோவை : ஈஷாவின் மண் காப்போம் மாதிரி பண்ணையில் மண் உயிரியல் பயிற்சி..! 10 நாடுகளை சேர்ந்தவர்கள் பங்கேற்பு..

கோவையின் ஈஷாவின் மண் காப்போம் மாதிரி பண்ணையில் மண் உயிரியல் பயிற்சி நடந்தது. இதில் 10 நாடுகளை சேர்ந்த 40க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இது குறித்த முழு விவரத்தை இங்கு தெரிந்து கொள்வோம்.

Written By Yuvashree M
Published: Nov 02, 2026, 12:19 PM IST | Updated: Nov 02, 2026, 12:50 PM IST
Join

மண்ணில் வாழும் நுண்ணுயிர்கள் மற்றும் மண் வளத்தை மீட்டெடுக்கும் வழிமுறைகள் குறித்து விவசாயிகள், தோட்டக்கலை மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களுக்குப் பயிற்சி அளிக்கும் சர்வதேச அமைப்பான ‘சாயில் ஃபுட் வெப் ஸ்கூல்’ (Soil Food Web School), கோவையில் உள்ள சத்குருவின் ‘மண் காப்போம்’ இயக்கத்தின் மாதிரி பண்ணையில் இரண்டு ‘மண் உயிரியல்’ பயிற்சி நிகழ்ச்சிகளை நடத்தியது.

‘மண் காப்போம்’ பயிற்சி!

இதுகுறித்துப் பேசிய சாயில் ஃபுட் வெப் அறக்கட்டளையின் செயல் இயக்குநர் இவான் பக்மேன், “எங்களது பயிற்சி நிகழ்ச்சியை முதன்முறையாக இந்தியாவில் நடத்துவது மகிழ்ச்சியளிக்கிறது. விவசாயிகளுடன் இணைந்து மண் காப்போம் இயக்கம் மேற்கொண்டு வரும் களப்பணிகளும், பல்வேறு சமூகங்களுடன் கொண்டுள்ள வலுவான தொடர்புகளும் ஈஷா மாதிரிப் பண்ணையை பயிற்சி அளிக்கும் களமாக தேர்ந்தெடுக்க முக்கியக் காரணங்களாக அமைந்தன.

அதிலும் குறிப்பாக ஏற்கனவே இயற்கை மற்றும் மீளுருவாக்க விவசாய முறைகள் இந்த மாதிரி பண்ணையில் பின்பற்றப்பட்டு வருகிறது. ஆகையால் 10 நாடுகளைச் சேர்ந்த 46 பங்கேற்பாளர்கள் தாங்கள் கற்றவற்றைச் செயல்முறையில் செய்து பார்க்க ஏற்ற இடமாக  இம்மாதிரி பண்ணை அமைந்தது” என்றார்.

பலன்களை சொல்ல ஒரு வாய்ப்பு..!

சத்குருவால் தொடங்கப்பட்ட உலகளாவிய ‘மண் காப்போம்’ இயக்கத்தின் ஒரு பகுதியாக, மண் காப்போம் மாதிரி பண்ணைகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு மண்ணின் கரிம வளத்தை மீட்டெடுப்பதற்கும், விவசாயத்தை லாபகரமான தொழிலாக மாற்றுவதற்கும் உதவும் மரம் சார்ந்த விவசாயம், இயற்கை விவசாயம் மற்றும் மீளுருவாக்க விவசாய முறைகள் செயல்முறையில் பரிசோதிக்கப்பட்டு, விவசாயிகளுக்கு களப் பயிற்சிகளாக அளிக்கப்படுகின்றன. இதன்மூலம் இந்த விவசாய முறைகளின் பலன்களைப் பரவலாகக் கொண்டு செல்ல முடிகிறது.

இந்த மாதிரி பண்ணையில் நடைபெற்ற முதல் நிகழ்ச்சியான இரண்டு நாள் ‘மண்ணில் வாழும் உயிர்கள்’ பயிற்சி, இம்மாதம் (அக்.) 16, 17 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இதில் 61 பேர் பங்கேற்றனர். இதனைத் தொடர்ந்து, அக். 19 முதல் 30-ம் தேதி வரை நடைபெற்ற 10 நாள் மண் உயிரியல் சிறப்புப் பயிற்சி இன்று (30/10/2026) நிறைவடைந்தது. இதில் 6 கண்டங்களைச் சேர்ந்த 10 நாடுகளில் இருந்து 46 பேர் பங்கேற்றனர்.

தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா, உத்தரப் பிரதேசம் ஆகிய 7 மாநிலங்களில் இருந்தும், கோஸ்டாரிகா, நெதர்லாந்து, ஆஸ்திரேலியா, ஈரான், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் இருந்தும் பங்கேற்பாளர்கள் கலந்து கொண்டனர். இவர்களில் விவசாயிகள், வேளாண் ஆலோசகர்கள், இயற்கை விவசாய வடிவமைப்பாளர்கள், நுண்ணுயிரியலாளர்கள், வேளாண் தொழில் வல்லுநர்கள், தன்னார்வத் தொண்டு நிறுவன நிர்வாகிகள் மற்றும் மண் அறிவியல் வல்லுநர்கள் உள்ளிட்டோர் அடங்குவர்.

மேலும் படிக்க | கோவை : மாணவர்களுக்கு விடுமுறை..சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது! மாவட்ட ஆட்சியர் உத்தரவு

செய்முறை பயிற்சி..

பயிற்சியில் செயல்முறை அனுபவம் அளிப்பது குறித்துப் பேசிய சாயில் ஃபுட் வெப் ஸ்கூலின் கல்விப் பிரிவு இயக்குநர் லோய்டா, “வெவ்வேறு முறைகளில் தயாரிக்கப்பட்ட கம்போஸ்ட்களை (மக்கிய உரம்) அருகருகே வைத்து ஒப்பிட்டுப் பார்ப்பது, பங்கேற்பாளர்களுக்கு நேரடியான அனுபவத்தை அளித்தது. ஒரு கம்போஸ்ட் ஏன் மற்றொன்றிலிருந்து மாறுபடுகிறது, அதில் என்ன மாற்றங்களைச் செய்ய வேண்டும் போன்ற கேள்விகளுக்கான விடைகளைத் தேடுவது பயிற்சியின் முக்கியப் பகுதியாகும். கம்போஸ்ட் தயாரிப்பது என்பது ஒரு குறிப்பிட்ட முறையைப் பின்பற்றுவது மட்டுமல்ல. அதன் தன்மையைக் கவனித்து, அதற்கேற்ப தேவையான மாற்றங்களைச் செய்வதும் ஆகும்” என்றார்.



இரண்டு நாள் பயிற்சியில் மண் உயிரியல் அடிப்படைகள் மற்றும் மண்ணின் ஆரோக்கியத்தைப் பராமரிப்பதில் மண்ணில் வாழும் உயிரினங்களின் பங்கு குறித்து விளக்கப்பட்டது. தொடர்ந்து நடைபெற்ற 10 நாள் பயிற்சியில் ‘பயோகம்ப்ளீட்’ எனும் முழுமையான கம்போஸ்ட் தயாரிப்பது குறித்து செய்முறைப் பயிற்சி அளிக்கப்பட்டது.

இதற்குத் தேவையான இயற்கை மூலப்பொருட்களைத் தேர்ந்தெடுத்தல், கம்போஸ்ட் தயாரித்தல், அதன் ஈரப்பதம் மற்றும் காற்றோட்டத்தைப் பராமரித்தல், கம்போஸ்டின் தன்மையைக் கண்காணித்தல் மற்றும் கிளறிவிடுதல் உள்ளிட்டவை கற்றுக்கொடுக்கப்பட்டன. மேலும், கம்போஸ்ட் எக்ஸ்ட்ராக்ட், கம்போஸ்ட் டீ போன்ற உர திரவக் கலவைகளைத் தயாரிப்பது மற்றும் அவற்றின் தரத்தை மதிப்பிடுவது குறித்தும் பயிற்சி அளிக்கப்பட்டது.

பயிற்சியின் ஒரு பகுதியாக, மண், கம்போஸ்ட் மற்றும் திரவக் கலவைகளின் மாதிரிகளை நுண்ணோக்கி மூலம் ஆய்வு செய்து, அவற்றில் உள்ள நுண்ணுயிரிகளை அடையாளம் காணவும் பயிற்சி அளிக்கப்பட்டது. மேலும் இதில் மண் மாதிரிகளைச் சேகரித்தல் மற்றும் வயல்களில் மண்ணின் தன்மையை நேரடியாக ஆய்வு செய்தல் போன்ற பயிற்சிகளும் இடம்பெற்றன.

இந்தப் பயிற்சி நிகழ்ச்சிகளில் பல்வேறு நாடுகள் மற்றும் மாநிலங்களில் இருந்து வந்திருந்த பங்கேற்பாளர்கள் தங்களது அனுபவங்களைப் ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொண்டதுடன், அந்தந்த பகுதிகளின் மண் மற்றும் தட்பவெப்ப நிலைகளுக்கு ஏற்ப மண் உயிரியல் சார்ந்த விவசாய முறைகளை எவ்வாறு செயல்படுத்தலாம் என்பது குறித்தும் கலந்துரையாடினர்.

மேலும் படிக்க | தேனியை தொடர்ந்து கோவை சிறையிலும் கைதி எஸ்கேப்.. என்னதான் பிரச்சனை?

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

யுவஸ்ரீ, 3 ஆண்டுகளுக்கும் மேல் டிஜிட்டல் மீடியாவில் பணியாற்றி வருகிறேன். சினிமா, வைரல், குற்றம் மற்றும் உள்ளூர் சம்பந்தப்பட்ட செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உள்ளது. கதை மற்றும் கவிதைகளை எழுதுவதும், அவற்றை சில மேடைகளில் பகிர்வதும் எனக்கு பிடித்த விஷயங்கள்.

ZEENEWS TRENDING STORIES