கோவை குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு.. சுற்றுலா பயணிகளுக்கு குளிக்க தடை!
கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில் உள்ள கோவை குற்றாலம் அருவியில் நீர்வரத்து திடீரென அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், இன்று (அக்டோபர் 10) சுற்றுலாப் பயணிகள் செல்ல வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.
இதன் காரணமாக சிறுவாணி மலை அடிவார பகுதிகளில் உள்ள நீரோடைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. குறிப்பாக, நேற்று வெள்ளிக்கிழமை மாலை முதல் அருவிக்கு செல்லும் நீரோடைகளில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு கோவை வளக்கோட்டம் சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, கோவை குற்றாலம் அருவியில் இன்று ஒருநாள் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது. அருவியில் மேற்கொள்ளப்படும் சூழல் சுற்றுலா நடவடிக்கைகளும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.
மேலும், மறு அறிவிப்பு வெளியாகும் வரை சுற்றுலா பயணிகள் கோவை குற்றாலம் அருவிக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர். வெள்ளப்பெருக்கு நிலவரம் மற்றும் பாதுகாப்பு சூழலை பொறுத்து அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.