பெரியார் அறிவுலக சர்ச்சை: 8 கேள்விகளுடன் லஞ்ச ஒழிப்புத்துறையில் திமுக புகார்!
கோவை பெரியார் அறிவுலகத்தில் புத்தகங்கள் கொள்முதல் செய்யப்பட்டதில் முறைகேடு நடந்ததாக எழுந்த புகாரை விசாரிக்கக் கோரி, திமுக சார்பில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறையிடம் 8 கேள்விகளுடன் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
கோவை பெரியார் அறிவுலகத்தில் புத்தகங்கள் வாங்கப்பட்டதில் முறைகேடுகள் நடைபெற்றதாக எழுந்துள்ள புகார், தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. போலி எழுத்தாளர்கள் மற்றும் பதிப்பகங்களின் பெயர்களில் புத்தகங்கள் வாங்கப்பட்டதாக எழுத்தாளர் பெருமாள் முருகன் குற்றம்சாட்டிய நிலையில், ஆளும் தமிழக வெற்றிக் கழகத்திற்கும் திமுகவுக்கும் இடையே இந்த விவகாரம் தொடர்பாக மோதல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், பெரியார் அறிவுலகத்தில் புத்தகங்கள் கொள்முதல் செய்யப்பட்டதில் ஊழல் நடைபெற்றுள்ளதா என்பதை விசாரிக்கக் கோரி திமுக சார்பில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை இயக்குநரிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. திமுக சட்டத்துறை இணைச் செயலாளர் ஐ.பரந்தாமன் இந்த மனுவை அனுப்பியுள்ளார். அதில், புத்தக கொள்முதல் தொடர்பாக 8 முக்கிய கேள்விகளுக்கு உரிய விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
கோவையில் திறக்கப்பட்ட பெரியார் அறிவுலகம்!
கோவையில் சுமார் ரூ.300 கோடி செலவில் பெரியார் அறிவுலகம் அமைக்கப்பட்டுள்ளது. ஏழு தளங்களை கொண்ட இந்த அறிவுலகத்தை தமிழக முதலமைச்சர் விஜய் அண்மையில் திறந்து வைத்தார். இந்த திட்டத்தின் கீழ் புத்தகங்கள் வாங்குவதற்காக சுமார் ரூ.50 கோடியும், மின்னணு புத்தகங்களுக்காக ரூ.5 கோடியும் செலவிடப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால், பல்வேறு தரப்பினரும் பெரியார் அறிவுலகத்தின் திறப்பை வரவேற்றனர். ஆனால், புத்தக கொள்முதல் தொடர்பாக எழுத்தாளர் பெருமாள் முருகன் முன்வைத்த குற்றச்சாட்டுகள் தற்போது பெரும் சர்ச்சையாக மாறியுள்ளன.
போலி புத்தகங்கள் வாங்கப்பட்டதாக எழுந்த புகார்
பெரியார் அறிவுலகத்திற்காக போலியான எழுத்தாளர்கள் மற்றும் பதிப்பகங்களின் பெயர்களில் புத்தகங்கள் வாங்கப்பட்டதாக எழுத்தாளர் பெருமாள் முருகன் புகார் தெரிவித்தார். மேலும், சில புத்தகங்கள் அதிக விலைக்கு கொள்முதல் செய்யப்பட்டதாகவும், புத்தகங்களை வழங்குவதற்காகவே போலி பதிப்பகங்கள் உருவாக்கப்பட்டிருக்கலாம் என்றும் அவர் குற்றம்சாட்டினார்.
இதுமட்டுமின்றி, அறிவுலகத்தில் இடம்பெற்றுள்ள சில புத்தகங்களில் வரலாற்று பிழைகள் இருப்பதாகவும், செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்ட தகவல்களை பயன்படுத்தி புத்தகங்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் பெருமாள் முருகன் தெரிவித்திருந்தார். இந்த குற்றச்சாட்டுகள் வெளியானதை தொடர்ந்து, பெரியார் அறிவுலக புத்தக கொள்முதல் விவகாரம் அரசியல் ரீதியாகவும் முக்கியத்துவம் பெற்றது. தமிழக வெற்றிக் கழகமும் திமுகவும் இந்த விவகாரத்தில் ஒன்றையொன்று குற்றம்சாட்டி வருகின்றன.
புத்தக கொள்முதல் முறைகேடு.. திமுக புகார்!
இந்த சூழலில், கோவை பெரியார் அறிவுலகத்தில் புத்தகங்கள் வாங்கப்பட்டதில் முறைகேடுகள் நடந்துள்ளதா என்பதை விசாரிக்க வேண்டும் என திமுக சார்பில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறையிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
திமுக சட்டத்துறை இணைச் செயலாளர் ஐ.பரந்தாமன் அனுப்பியுள்ள புகார் மனுவில், புத்தக கொள்முதல் நடைமுறை, அதற்கான ஒப்புதல்கள், புத்தகங்களை தேர்வு செய்தவர்கள் மற்றும் பதிப்பகங்களுக்கு வழங்கப்பட்ட பணம் உள்ளிட்ட விவரங்கள் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், இந்த விவகாரத்தில் கீழ்க்கண்ட 8 கேள்விகளுக்கு அதிகாரிகள் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் திமுக வலியுறுத்தியுள்ளது.
திமுக முன்வைத்துள்ள 8 கேள்விகள்!
1. கொள்முதல் உத்தரவு வழங்கியவர்கள் யார்? பெரியார் அறிவுலகத்திற்கு புத்தகங்கள் வாங்குவதற்கான கொள்முதல் மற்றும் வாங்குதல் உத்தரவுகளை எந்த அதிகாரிகள் வழங்கினர்?
2. புத்தகங்கள் எவ்வாறு தேர்வு செய்யப்பட்டன? ஒவ்வொரு புத்தகமாக மதிப்பீடு செய்து வாங்கப்பட்டதா அல்லது ஒரே நேரத்தில் தொகுப்பாக புத்தகங்கள் கொள்முதல் செய்யப்பட்டனவா?
3. பதிப்பகங்களுக்கு எப்போது ஆர்டர்கள் வழங்கப்பட்டன? புத்தகங்களை வழங்குவதற்காக சம்பந்தப்பட்ட பதிப்பகங்களுக்கு கொள்முதல் உத்தரவுகள் எந்தெந்த தேதிகளில் பிறப்பிக்கப்பட்டன?
4. கொள்முதல் கோப்புகளை கையாண்ட அதிகாரிகள் யார்? புத்தக கொள்முதல் தொடர்பான குறிப்புக் கோப்புகளை தயாரித்தவர்கள், கையெழுத்திட்டவர்கள் மற்றும் ஒப்புதல் வழங்கிய அதிகாரிகள் யார்?
5. புத்தக தேர்வு குழு நடைமுறைகள் பின்பற்றப்பட்டனவா? தகுதியான புத்தக தேர்வு மற்றும் கொள்முதல் குழு இந்த புத்தகங்களை தேர்வு செய்ததா? அதற்கான விதிமுறைகள் மற்றும் நடைமுறைகள் முறையாக பின்பற்றப்பட்டனவா?
6. குறிப்பிடப்பட்ட எழுத்தாளர்கள் உண்மையானவர்களா? த்ரிஷா விஜய், சங்கீதா விஜய், தாமரை பன்னீர், தாமரை முரளி, மோனிகா ரவி ஆர். உள்ளிட்ட பெயர்களில் எழுத்தாளர்கள் உண்மையில் உள்ளனரா? அவர்களின் புத்தகங்கள் முறையாக வெளியிடப்பட்டுள்ளனவா?
7. புத்தகங்கள் எப்போது வழங்கப்பட்டன? புத்தகங்கள் விநியோகம் செய்யப்பட்ட தேதிகள் என்ன? அவை பெறப்பட்டபோது புத்தகங்களின் தரம் மற்றும் எண்ணிக்கை சரிபார்க்கப்பட்டதா?
8. பதிப்பகங்களுக்கு எவ்வளவு பணம் வழங்கப்பட்டது? ஒவ்வொரு பதிப்பகத்திற்கும் எந்தெந்த தேதிகளில் பணம் வழங்கப்பட்டது? வழங்கப்பட்ட தொகை எவ்வளவு?
இந்த 8 கேள்விகளுக்கும் உரிய விசாரணை நடத்தி, பெரியார் அறிவுலக புத்தக கொள்முதல் தொடர்பான உண்மை நிலையை வெளிப்படுத்த வேண்டும் என திமுக தனது புகார் மனுவில் கோரியுள்ளது. இதனால், கோவை பெரியார் அறிவுலக புத்தக கொள்முதல் விவகாரம் தமிழக அரசியல் களத்தில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.