செயற்கை நுண்ணறிவு மூலம் சுகாதாரத் துறையில் ஏற்படவுள்ள மாற்றங்கள்! டாக்டர் நாகேஷ்வர் ரெட்டி விளக்கம்
சுகாதாரத் துறையில் செயற்கை நுண்ணறிவின் வளர்ச்சி, அதன் பயன்பாடுகள் மற்றும் எதிர்காலத்தில் மருத்துவச் சேவைகளில் அது ஏற்படுத்தக்கூடிய மாற்றங்கள் குறித்து Dr.நாகேஷ்வர் ரெட்டி தனது உரையில் எடுத்துரைத்தார்.
கோவை: கோயம்புத்தூர் கங்கா மருத்துவமனையின் 2026-ஆம் ஆண்டிற்கான நிறுவனர் தின உரை (Founder's Day Oration) மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது. இதில், ஹைதராபாத்தில் உள்ள ஏசியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் காஸ்ட்ரோஎன்டாலஜி (AIG) மற்றும் AIG மருத்துவமனைகளின் தலைவர், பத்ம விபூஷன் டாக்டர் D. நாகேஷ்வர் ரெட்டி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, 'நமது நாட்டில் சுகாதாரத் துறையில் செயற்கை நுண்ணறிவு' (Artificial Intelligence in Healthcare in our Country) என்ற தலைப்பில் 12-வது நிறுவனர் தின உரையை நிகழ்த்தினார்.
சுகாதாரத் துறையில் செயற்கை நுண்ணறிவின் வளர்ச்சி, அதன் பயன்பாடுகள் மற்றும் எதிர்காலத்தில் மருத்துவச் சேவைகளில் அது ஏற்படுத்தக்கூடிய மாற்றங்கள் குறித்து அவர் தனது உரையில் எடுத்துரைத்தார்.
நிறுவனர் தின உரையின் நோக்கம்
1978-ஆம் ஆண்டு, ஒவ்வொரு நோயாளிக்கும் சிறந்த மருத்துவச் சிகிச்சையை மலிவு விலையில் வழங்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்துடன் ஒரு தம்பதியினரால் கங்கா மருத்துவமனை தொடங்கப்பட்டது. பல்வேறு சவால்களைக் கடந்து, அயராத உழைப்பு, அர்ப்பணிப்பு, நேர்மை மற்றும் மருத்துவ நெறிமுறைகளின் அடிப்படையில் இன்று கங்கா மருத்துவமனை உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவ நிறுவனமாக வளர்ந்துள்ளது.
எலும்பியல், பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை மற்றும் நுண் அறுவை சிகிச்சை உள்ளிட்ட துறைகளில் சிறந்த மருத்துவச் சேவைகள், கல்வி மற்றும் ஆராய்ச்சியின் மூலம் கோயம்புத்தூரை சர்வதேச மருத்துவ வரைபடத்தில் இடம்பெறச் செய்ததில் கங்கா மருத்துவமனை முக்கியப் பங்கு வகிக்கிறது.
தரமான மற்றும் மலிவு விலையிலான மருத்துவச் சேவைகளை வழங்குவதுடன், மருத்துவச் சிறப்பு, மருத்துவம் மற்றும் மாற்று ஆராய்ச்சி, கல்வி மற்றும் சமூகத்திற்குத் திருப்பிக் கொடுத்தல் ஆகிய நான்கு முக்கியக் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது.
நிறுவனர்களின் தொலைநோக்குப் பார்வை, கடின உழைப்பு, நேர்மை மற்றும் சமூக அக்கறையை அடுத்த தலைமுறையினருக்கு எடுத்துச் செல்லும் நோக்கில் 2013-ஆம் ஆண்டு நிறுவனர் தின உரை நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. ஒவ்வோர் ஆண்டும் தங்கள் துறையில் சிறந்து விளங்கி, சமூகத்திற்குப் பங்களிப்பு செய்த ஆளுமைகள் இந்த உரையை நிகழ்த்தி வருகின்றனர்.
முன்னணி ஆளுமைகள் பங்கேற்ற நிறுவனர் தின உரைகள்
கடந்த ஆண்டுகளில் டாக்டர் தேவி ஷெட்டி, N. கோபாலஸ்வாமி IAS, R. கோபாலகிருஷ்ணன், வேணு சீனிவாசன், சுப்ரதோ பக்ஷி, B. முத்துராமன், டாக்டர் அபய் பாங், பாஸ்கர் பட், நந்தன் நிலேகனி, N. சந்திரசேகரன் மற்றும் முன்னாள் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த புகழ்பெற்ற ஆளுமைகள் இந்நிகழ்வில் உரையாற்றியுள்ளனர்.