SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

"பார்த்திபன் அமைச்சர் என்பதே எனக்குத் தெரியாது" - வைகோ விளக்கம்!

கொளத்தூர் எம்எல்ஏ பாபுவின் இறுதி ஊர்வலத்தின்போது அமைச்சர் பார்த்திபனை நோக்கி மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கையை நீட்டி திட்டுவது போன்ற வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், வைகேவே இந்த விவகாரம் குறித்து விளக்கம் அளித்துள்ளார்.

Written By R Balaji
Published: Nov 21, 2026, 15:23 IST | Updated: Nov 21, 2026, 15:30 IST
Join

சட்டமன்ற தேர்தல் முடிவுகளுக்கு பிறகு தமிழக அரசியலில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. நீண்ட காலமாக திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ், விசிக, மதிமுக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகள் கூட்டணியில் இருந்து வெளியேறின. கம்யூனிஸ்ட் கட்சிகளை தவிர மற்ற கட்சிகள் தமிழக வெற்றிக் கழகத்தின் கூட்டணியில் இணைந்துள்ளன. இதற்கிடையே, மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் அரசியல் விமர்சனங்களும் கவனம் பெற்று வருகின்றன.

கொளத்தூர் எம்எல்ஏ பாபுவின் இறுதி ஊர்வலத்தில் முதல்வருடன் வைகோ சென்றபோது நடந்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியது. அப்போது அமைச்சர் பார்த்திபனை நோக்கி வைகோ கையை நீட்டி பேசியதாக கூறப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக கோவையில் செய்தியாளர்களை சந்தித்த வைகோ விளக்கம் அளித்தார்.

பார்த்திபன் அமைச்சர் என்பதே எனக்கு தெரியாது - வைகோ

அப்போது பேசிய அவர், “முதலமைச்சருக்கு எந்த ஆபத்தும் ஏற்படாத வகையில் அவருடன் சென்றேன். நான் கொடுக்கும் பாதுகாப்பை 100 பேராலும் கொடுக்க முடியாது. முதலமைச்சருடன் நடந்து சென்றபோது என் கையைப் பிடித்து இழுத்தார்கள். நான் அமைச்சரை பார்த்து கையை நீட்டிப் பேசவில்லை. அவர் அமைச்சர்தான் என்பதுகூட எனக்கு தெரியாது. என் கையை பிடித்து இழுத்தவரிடம்தான் உன் வேலையை பார்த்துக்கொண்டு போ என்று கூறினேன். இதுகுறித்து விஜய் மேனேஜ் செய்து கொள்கிறேன் என்று தெரிவித்தார்.

நான் யாரையும் திட்டவில்லை. யாருடைய கையையும் பிடித்து இழுக்கவும் இல்லை. இதில் என்ன தவறு இருக்கிறது? ஊடகங்கள் திமுகவுக்காக ஏஜென்ட் வேலை பார்க்கின்றன. திராவிட இயக்கத்தை பாதுகாக்க வேண்டும் என்பதற்காகத்தான் திமுக கூட்டணியில் இணைந்தோம். ஆனால், எங்களை அவமானப்படுத்தினார்கள். திமுகவுடன் இனி இருக்கக் கூடாது என்று மதிமுக பொதுக்குழுவில் முடிவு எடுக்கப்பட்ட பிறகுதான் கூட்டணியில் இருந்து வெளியேறினோம். கொள்கைக்காகவே இந்த முடிவை எடுத்தோம்.

பிரதமர் நரேந்திர மோடி எனக்கு பல வாய்ப்புகளை வழங்கினார். ஆனால், கொலைக்காரரை அழைத்து வந்தது தவறு என்று கூறிவிட்டு வெளியேறினேன். அதை மன்னிக்க முடியாத தவறு என்று தெரிவித்தேன். முதலமைச்சர் என்னை அண்ணன் என்று அழைத்ததால் அவருடன் சென்றேன். இது திமுகவினருக்குப் பிடிக்கவில்லை. காந்தாரி வயிறு எரிவதை போல, முதலமைச்சருடன் நான் சென்றதை பற்றி தொடர்ந்து பேசுகிறார்கள் என்றார்.

திமுகவை விமர்சித்த வைகோ

தொடர்ந்து திமுகவை விமர்சித்து பேசிய அவர், திமுக குடும்பத்தினர் கிரீஸ் நாட்டுக்கு சென்று திருமணம் நடத்த வேண்டுமா?" என்று கேள்வி எழுப்பினார். ஜெயலலிதா நகை அணிந்தது குறித்து ஐந்து ஆண்டுகளாக பேசியவர்கள், இப்போது ஏன் வெளிநாட்டில் திருமணம் நடத்த வேண்டும்? சட்டம் ஒழுங்கு தொடர்பாக விவாதம் நடத்த நான் தயாராக இருக்கிறேன். இதுகுறித்து பேச திமுக தயாரா? என்னை நடிகர் வடிவேலுவுடன் ஒப்பிட்டது மகிழ்ச்சிதான். அவரும் தமிழர்தான். அவருடைய நகைச்சுவையால் பல திரைப்படங்கள் வெற்றி பெற்றுள்ளன. விஜயகாந்த் விஷயத்திலும் அவரை தமிழ்நாடு முழுவதும் பேச வைத்துவிட்டு, வேலை முடிந்ததும் கைவிட்டுவிட்டார்கள். பட வாய்ப்பு தருவதாக கூறி வடிவேலுவை ஏமாற்றிவிட்டார்கள்.

திமுகவுக்காக பாடுபட்டவன்

நான் திமுகவுக்காக பாடுபட்டவன். அந்த கட்சியைப் பற்றி எனக்கு நன்றாக தெரியும். திருப்பரங்குன்றம் தீபம் தொடர்பான தீர்ப்பு துரதிர்ஷ்டவசமானது. திமுக ஆட்சியில் நடைபெற்ற கொலை, கொள்ளை சம்பவங்களுக்கு முதலமைச்சர் பதில் சொல்ல வேண்டும். தூத்துக்குடியில் 9 வயது சிறுமிக்கு நிகழ்ந்த பாலியல் வன்கொடுமை மிகவும் கொடூரமானது. அந்தச் சம்பவத்தில் தொடர்புடையவர் மூன்று முறை ஜாமீனில் வெளியே வந்துள்ளார். இவை அனைத்தும் அவருடைய ஆட்சியில்தான் நடந்தன. மதிமுக என்ற கட்சியை யாராலும் அழிக்கவோ, கரைக்கவோ முடியாது.

மதிமுகவை அழிக்க கருணாநிதியே முயற்சி செய்தார். ஆனால், இனி எங்களை யாராலும் அழிக்க முடியாது. மேகதாது பிரச்சினைக்காக முதலில் போராடியவன் நான். செய்தியாளர்கள் எனது மனதை புண்படுத்தும் நோக்கத்தில் கேள்விகளை கேட்கிறார்கள். அதற்கெல்லாம் பதில் அளிக்க முடியாது. நான் பத்திரிகையாளர்களுடன் சண்டையிட்டதாக செய்தி வெளியிடப் பார்க்கிறீர்கள். அதை பற்றி எனக்குக் கவலையில்லை.

தமிழகத்தின் முதலீடுகள் ஆந்திராவுக்குச் செல்லவில்லை. முதலமைச்சர் விஜய் நேர்மையான ஆட்சியை நடத்தி வருகிறார். ஊழல்வாதிகள் யாரும் முதலமைச்சரை நெருங்க முடியாது" என்றார்.
 

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

நான் ஊடகத் துறையில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறேன். தற்போது ஜீ நியூஸ் தமிழில் Content Writer ஆக வேலை பார்க்கும் எனக்கு விளையாட்டு, அரசியல் மற்றும் க்ரைம் சார்ந்த செய்திகளை எழுதுவதில் அதிக ஆர்வம் உண்டு.
Read More

ZEENEWS TRENDING STORIES