Never Have I Ever எனும் நெட்ஃப்ளிக்ஸ் தொடர் மூலம், உலகளவில், குறிப்பாக இந்தியர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர்தான் மைத்ரேயி ராமகிருஷ்ணன். இவர், இந்த தொடரில் இந்திய தமிழ் பெண்ணாக நடித்திருப்பார். இவர் நடிப்பில் சமீபத்தில் Best Of The Best எனும் படத்தில் நடித்தார். இந்த படம் குறித்த நேர்காணலில் கலந்து கொண்ட போது தன்னை ‘தமிழ் ஈழப்பெண்’ என்று அடையாளப்படுத்திக்கொண்டார். இதுதான் தற்போது சர்ச்சையாக வெடித்துள்ளது. இது குறித்த முழு தகவலை இங்கு தெரிந்து கொள்வோம்.
மைத்ரேயி ராமகிருஷ்ணனுக்கு தர்போது 24 வயது ஆகிறது. 2001ஆம் ஆண்டு கனடா நாட்டில் பிறந்த இவர், 5 வருடங்களுக்கு முன்பாக வெளியான நெவர் ஹேவ் ஐ எவர் எனும் தொடர் மூலம் உலகளவில் கவனம் ஈர்த்தார். இந்த தொடரில் அவருடைய கதாப்பாத்திரத்தின் பெயர், தேவி விஸ்வகுமார்.
ஒரு பக்கம் அவருக்கு பேரும் புகழும் உயர்ந்தாலும், இன்னொரு புறம், அவருக்கான வெறுப்புணர்வும் இணையத்தில் அப்போதே பரவத்தொடங்கியது. இதற்கு அவர் நடித்த கதாப்பாத்திரம் ஒரு காரணம் என்றாலும், அவருடைய அடையாளமும் ஒரு பெருங்காரணமாக பார்க்கப்பட்டது.
அந்த சமயத்தில், தான் தன்னுடைய சினிமா கெரியருக்காகவும், வாழ்க்கைக்காகவும், ப்ரமோஷன் பணிகளை செய்ய தயாராக இருந்ததாகவும், ஆனால் தனக்கு இவ்வளவு வெறுப்பு வரும் என்பதை சற்றும் எதிர்பார்க்கவில்லை என்றும் பேசியிருந்தார்.
மைத்ரேயி நடித்துள்ள, ‘பெஸ்ட் ஆஃப் தி பெஸ்ட்’ திரைப்படம், கடந்த 18ஆம் தேதி நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகி ட்ரெண்டிங்கில் நம்பர் 1 இடத்தில் இருந்தது. இவர் இதில் ‘மாயா’ எனும் கதாப்பாத்திரத்தில் நடித்திருப்பார். அதில் அவர் தன்னை அறிமுகப்படுத்திக்கொள்ளும் போது ‘என் பெயர் மாயா, நான் இலங்கையை சேர்ந்தவர்’ என்று கூறுவார். ஆனால் படத்தை பற்றிய ப்ரமோஷன் நிகழ்ச்சிகளில் பேசும் போது, தன்னை ஈழத்தமிழர் என்றும், தன் நாடு கனடா என்றும் அடையாளப்படுத்தி கொண்டார். தான் ஏன் இப்படி கூறுகிறேன் என்பது குறித்து, பல்வேறு நேர்காணல்களிலும் பேசியிருக்கிறார்.
மைத்ரேயியின் இந்த அடையாளம் குறித்தும், Best Of The Best படத்தில் ஒரு பகுதி இடம் பெற்றுள்ளது. இந்த படத்தில், மாயா எனும் அந்த கதாப்பாத்திரம் பாலிவுட் ஃப்யூஷன் நடனக்குழுவில் இணைகிறார், அப்போது அவரை இந்தியர் என நினைத்துக்கொள்வர் அதற்கு அவர், நான் தமிழர், என் குடும்ப இலங்கையை சேர்ந்தது என்று கூறுவார்.
படத்தில் பல இடங்களில், மாயாவை ‘இலங்கையர்’ என்று அறிமுகப்படுத்துவதாக இருந்தது. ஆனா, மைத்ரேயி அந்த வசனத்தை மாற்றுமாறு கேட்டுக்கொண்டதாக கூறப்படுகிறது.
மைத்ரேயி, தன்னுடைய அடையாளம் குறித்து சமீபத்திய நேர்காணலில் பேசியிருந்தார். அதில், ”அந்த காட்சியில், நான் என்னை இலங்கை தமிழர் என்று சொல்லியிருக்கலாம். ஆனால், ஒரு தமிழ் ஈழப்பெண்ணாக இருந்துகொண்டு, என்னுடைய அடையாளத்தை பற்றி உண்மையிலேயே இப்படித்தான் உணர்கிறேன் என சொல்லிவிட முடியாது. ‘நான் தமிழ் பெண், என் குடும்பம் இலங்கையை சேர்ந்தது’ என்று நான் துல்லியமாக சொல்வது சரி எனப்பட்டது.
பலர், தெற்காசிய மக்கள் அனைவரும் இந்தியாவை சேர்ந்தவர்கள் என நினைத்துக்கொள்வதாகவும், அது உண்மையல்ல என்பதை காட்ட இது சிறந்த வழி எனப்பட்டதாகவும் கூறியிருக்கிறார். மேலும், தன்னை போன்ற குடும்ப பின்னணியை கொண்டவர்களும் உலகம் முழுவ்தும் வாழும் புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்களும், ‘தமிழ் இலங்கையர்’ என்று கூறுவதற்கும், ‘நான் தமிழ், என் குடும்பத்தின் வேர் இலங்கையில் இருந்து வந்தவை’ என்று கூறுவதற்கும் இடையிலான வேறுபாடு நன்றாக தெரியும் என்றும் தெரிவித்திருந்தார்.
தான் ஒரு தமிழ் ஈழப்பெண்ணாக இருப்பதில் பெருமிதம் கொள்கிறேன் என்று கூறிய அவர், தன் குடும்பத்தை தன்னுடைய கலாச்சார வரலாற்றையும் தான் நேசிப்பதாகவும் தெரிவித்தார். தன்னுடைய இந்த பயணத்தின் மூலமாக தன்னுடைய அடையாளத்தை நான் இன்னும் அதிகமாக நேசிக்க அதிகமாக கற்றுக்கொள்கிறேன் என்று கூறுகிறார்.
மைத்ரேயி தன்னை தமிழ் ஈழப்பெண் என அடையாளப்படுத்தி கொண்டதற்கு சமூக வலைதளங்களில் ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பி இருக்கிறது. அவர், ‘இலங்கை தமிழர்’ எனும் அடையாளத்திலிருந்து தன்னை விலக்கி கொள்வதாக சிலர் சமூக வலைதளங்களில் விமர்சிக்கின்றனர்.
இலங்கை செய்தி ஊடகமாக இருக்கிறது, ஜாஃப்னா மானிட்டர். இதில் வெளியிட்டிருக்கும் செய்தியின் படி, இலங்கையில் இருக்கும் சில ஃபேஸ்புக் பக்கங்கள், பெஸ்ட் ஆஃப் தி பெஸ்ட் திரைப்படத்திற்கு ஒன் ஸ்டார் மதிப்பீடு மட்டுமே வழங்குமாறு பிரச்சாரம் செய்து வருவதாகவும், இன்னொரு புறம் ஏஐ கருவிகளை பயன்படுத்தி படத்திற்கு எதிரான விமர்சனங்கள் பகிரப்பட்டு வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை படங்களின் தளமான imdb கவனித்து, தங்களின் தளங்களில் இது போல யாரும் இந்த நடவடிக்கைகளில் ஈடுபடாத வண்ணம் பார்த்துக்கொண்டது. அதே சமயத்தில், மைத்ரேயியின் கருத்துக்கு பலர் ஆதரவும் தெரிவித்து வருகின்றனர்.
மைத்ரேயி ராமகிருஷ்ணனின் தாய், தந்தை இருவரும் வெளிநாட்டில் வாழும் இலங்கை தமிழர்களின் குரலாக விளங்குகின்றனர். போர் நடந்த சமயத்தில் கனடாவிற்கு குடி பெயர்ந்த இவர்கள், அங்கு தங்களின் உறவினர்களுடன் வாழ்கின்றனர்.
மைத்ரேயியின் தந்தை, ஐடி ஊழியராக வேலை பார்த்து வருகிறார். தாயார் மார்கெட்டிங் அதிகாரியாக இருக்கிறார். மைத்ரேயி, அரசியல் சார்ந்த கருத்துகளில் தெளிவாக இருப்பதற்கு அவருடைய பெற்றோரும் ஒரு காரணமாக இருக்கின்றனர்.