Music Director Deva Passed Away: பிரபல இசையமைப்பாளர் தேனிசைத் தென்றல் தேவா (75) மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இன்று காலமானார்.
இன்று காலையில் தேவா திடீரென நெஞ்சு வலிப்பதாக கூறியுள்ளதை தொடர்ந்து அவரது குடும்பத்தினர் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரை பரிசோதித்து பார்த்த மருத்துவர்கள் அவர் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இன்று காலை 8 மணியளவில் அவரது உயிர் பிரிந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
1986ஆம் ஆண்டு வெளியான 'மாட்டுக்கார மன்னாரு' திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் தேவா அறிமுகமானார். அதன்பின், 3 ஆண்டுகள் கழித்துதான் 'மனசுக்கேத்த மகாராஜா' அவர் இசையமைத்த படம் வெளியானது. தொடர்ந்து 1990இல் வெளியான வைகாசி பொறந்தாச்சு திரைப்படத்திற்காக தமிழக அரசின் சிறந்த இசையமைப்பாளருக்கான விருதை பெற்றார், தேவா.
தமிழில் மட்டுமின்றி கன்னடம், தெலுங்கு, மலையாளம் படங்களுக்கும் இவர் இசையமைத்துள்ளார். தமிழில் மட்டும் 375க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு அவர் இசையமைத்துள்ளார். மொத்தமாக 400க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் அவர் பணியாற்றி உள்ளார். பிற இசையமைப்பாளர்களின் இசையமைப்பிலும் இவர் பல பாடல்களை பாடியிருக்கிறார். இவரது தனித்துவமிக்க கானா பாடலும், குரலும் இவரை தமிழ்நாட்டின் பட்டித் தொட்டியெங்கும் கொண்டு சேர்த்தது.
1992ஆம் ஆண்டு ரஜினியின் அண்ணாமலை படத்திற்கு இசையமைத்து பெரும் புகழை பெற்றார். அப்போது அண்ணாமலை படத்தில் ரஜினி பெயருக்கான டைட்டில் கார்டு இசைதான், சமீபத்தில் வெளியாகியிருக்கும் ஜெயிலர் - 2 திரைப்படம் வரை தொடர்ந்து பயன்படுத்தப்பட்டு வருகிறது. அந்தளவிற்கு ரசிகர்கள் இடையே பெரும் வரவேற்பை பெற்ற அந்த BGM-ஐ போட்டவர் தேவா. இன்றும், என்றும் தேவாவின் அந்த இசைக்கு விசில் பறக்கும்.
தொடர்ந்து ரஜினிக்கு பாட்ஷா, அருணாச்சலம் ஆகிய திரைப்படங்களில் தேவா பணியாற்றினார். ரஜினிக்கு பாமர மக்களிடம் பெயர் வாங்கிக் கொடுத்த 'வந்தேன்டா பால்காரன்...', 'நா ஆட்டோக்காரன்... ஆட்டோக்காரன்...' உள்ளிட்ட பாடல்கள் தேவாவின் கைவண்ணத்தில் உருவானவை. கனா பாடல்களை உலகறியச் செய்தவர்களில் தேவா முக்கியமானவர்.
ரஜினி மட்டுமின்றி விஜயகாந்த், கமல், கார்த்திக், சத்யராஜ், விஜய், அஜித், பிரசாந்த், தனுஷ் என முன்னணி கதாநாயகர்களின் பல வெற்றித் திரைப்படங்களுக்கு தேவா இசையமைத்து உள்ளார். கமல்ஹாசனின் அவ்வை சண்முகி, பம்மல் கே. சம்பந்தம், பஞ்சதந்திரம் உள்ளிட்ட திரைப்படங்களுக்கு தேவா இசையமைத்துள்ளார்.
அஜித்தின் பெரிய ஹிட் படங்களான ஆசை, காதல் கோட்டை, வாலி, ஆனந்த பூங்காற்றே, முகவரி, ரெட் உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்தவர் தேவா. அதேபோல், விஜய்யின் ரசிகன், தேவா, செந்தூரப்பாண்டி, கோயம்புத்தூர் மாப்பிள்ளை, ஒன்ஸ் மோர், நேருக்கு நேர், நினைத்தேன் வந்தாய், பிரியமுடன், நிலவே வா, குஷி என உள்ளிட்ட படங்களில் தேவா இசையமைத்துள்ளார். இவரை
சாவாப் பாடல்கள் தந்த தேவா மறைந்துவிட்டார் தேனிசைத் தென்றல் நின்று போயிற்றா? நெஞ்சு கனக்கிறது தன் பேச்சு மூச்சு அனைத்திலும் இசையாகவே இருந்தவர் சங்கீதத்தோடு இங்கிதம் தெரிந்தவர் பண்ணிசைக்கத் தெரிந்த பண்பாளர் அவரோடு நான் பணியாற்றிய அண்ணாமலை, பாட்ஷா அருணாசலம், வாலி, குஷி, நேருக்கு நேர், ஆசை, பஞ்ச தந்திரம் முதலிய நூற்றக்கணக்கான படங்களின் பாட்டு வெற்றிக்கு தேவாவே காரணம் தேவாவின் இசையைப்போல் ரஜினிக்கு வேறு யாரும் பொருந்தவில்லை என்றுதான் ரசிகர்கள் பேசுவார்கள் என்ன சொல்வது? எனக்கு என் விரல்களில் ஒன்று போய்விட்டது அவரை இழந்துவாடும் குடும்பத்தார்க்கும் ரசிகர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கல் கவலைப்படாதே சகோதரா என்று பாடியவனே! இன்றுநான் கவலைப்படாமல் என்ன செய்ய? #Deva | #தேவா
— வைரமுத்து (@Vairamuthu) October 17, 2026
1950ஆம் ஆண்டு நவம்பர் 20ஆம் தேதி அன்று மா.சொ.சொக்கலிங்கம், மா.சொ.கிருஷ்ணவேணி ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார், தேவா. சிறுவயதில் கூட, தேவா இசையுலகில் ஈர்க்கப்பட்டார். சந்திரபோசுடன் இணைந்து, இவர் பல இசை நிகழ்ச்சிகளை நிகழ்த்தினார்.
ஜே. பி. கிருஷ்ணாவிடம் பாரம்பரிய இசையைக் கற்றுக்கொள்ளத் தொடங்கிய இவர், தன்ராஜுடன் தொடர்ந்து லண்டனில் உள்ள டிரினிட்டி இசைக் கல்லூரியில் மேற்கத்திய இசையில் ஒரு படிப்பை முடித்துள்ளார். இவரின் சகோதரர்களான சபேஷ்-முரளி இசை இரட்டையர்களாக தமிழ் திரையுலகில் வலம் வந்தனர். இவரது மகன் ஸ்ரீகாந்த் தேவாவும் ஓர் இசையமைப்பாளராவார்.
தேவா திரையுலகிற்கு வருவதற்கு முன்பு, தூர்தர்சன் பொதிகைத் தொலைக்காட்சியில் சிறிது காலம் பணியாற்றினார். வயலும் வாழ்வும் என்ற நிகழ்ச்சியின் பாடல்களுக்கு இசையமைத்தார்.
அந்நாட்களில், தேவாவின் சகோதரர்கள் இளையராஜாவுடனும் பிற இசையமைப்பாளர்களின் இசைக்குழுக்களில் இசைக் கருவிகளை வாசித்து வந்தனர். சிறந்த இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் இவரைத் 'தேனிசைத் தென்றல்' என்று அழைத்தார். பக்தித் திரைப்படங்களின் பாடல்களுக்காகவும் இவர் பிரபலமானவர்.
'அறம்' படத்தை இயக்கிய கோபி நயினாரின் 'காலனி' படத்திற்கும், 'வா, வரலாம் வா' என்ற இன்னொரு படத்திற்கும் இசை அமைத்துக் கொண்டிருந்தார். மாரி செல்வராஜ் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் 2021ஆம் ஆண்டில் வெளியான'கர்ணன்' படத்தின் 'மஞ்சனத்தி' பாடலும், மாரி செல்வராஜ் இயக்கி 2023ஆம் ஆண்டில் வெளியான 'மாமன்னன்' படத்தில் பாடிய 'நெஞ்சமே நெஞ்சமே' பாடலும் வித்தியாசமாக இருந்தன.