3 தமிழர்கள் சுட்டுக்கொலை: மான் வேட்டையா? வனத்துறையின் வேட்டையா? - கர்நாடகாவில் நடந்தது என்ன?
Karnataka Forest Shooting : கர்நாடகாவின் சாம்ராஜ்நகர் வனப்பகுதியில் 3 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. வனத்துறையின் வாதம், அரசின் வாதம், குடும்பத்தினர் புகார், அரசியல் எதிர்வினைகள் என்ன ஆகியவை குறித்து விரிவாக இதில் பார்க்கலாம்.
Karnataka Forest Shooting : கர்நாடகாவின் சாம்ராஜ்நகர் பகுதியில் உள்ள காவிரி வனவிலங்கு சரணாலயம் பகுதியில் மான் வேட்டையாடியதாக ஆகஸ்ட் 15ஆம் தேதி அன்று அதிகாலையில் மூன்று பேர் வனத்துறை அதிகாரிகளால் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்டவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.
3 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்டதை கண்டித்து கர்நாடகாவின் சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் மக்கள் போராட்டம் வலுத்துள்ளது. சாம்ராஜ் நகர் மாவட்டம் ராமபுரா அருகே ஹனூரில் வனத்துறையின் வாகனங்களுக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்துள்ளனர்.
மூன்று பேர் மீது துப்பாக்கிச்சூடு - இதுவரை நடந்தது என்ன?
ஏற்கெனவே, காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக கர்நாடகா - தமிழ்நாடு எல்லையில் பதற்றம் நிலவும் சூழலில், தற்போது மூன்று தமிழர்கள் கொல்லப்பட்டிருப்பதால் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது. அரசியல் ரீதியாகவும் இச்சம்பவம் பெரும் பரபரப்பை உண்டாக்கி உள்ளது. இந்நிலையில், இச்சம்பவத்தில் இதுவரை நடந்தது என்ன என்பதை விரிவாக இங்கு காணலாம்.
சுட்டுக்கொல்லப்பட்டவர்கள் யார்?
- மரியமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த அந்தோணி சாமி (50)
- ஜெகநாததொட்டி பகுதியைச் சேர்ந்த ஜான் ரோஸ் பீட்டர் (43)
- லாசர்தொட்டி பகுதியைச் சேர்ந்த செபாஸ்டியன் டேவிட் குமார் (35)
இவர்கள் மூன்று பேரும் ஹனூர் தாலுகாவைச் சேர்ந்தவர்கள்தான்.
உயிரிழந்தவர்களுடன் வந்த மகிமைதாஸ் (45) என்பவர் காயங்களுடன், தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். (ANI செய்தி முகமை அடிப்படையிலான தகவல்)
வனத்துறை அதிகாரிகள் கூறுவது என்ன?
- கர்நாடகா மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டம் ஹனூர் வட்டம் ஷக்யம் வனப்பகுதியில் ஒரு குழு மான்வேட்டையாடி வருவதாக ரகசிய தகவல் கிடைத்தாக வனத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
- அவர்களிடம் மான் கறி இருந்ததாகவும் அதிகாரிகள் குற்றஞ்சாட்டினர். வனத்துறை அதிகாரிகளை குற்றஞ்சாட்டப்பட்ட நபர்கள் துப்பாக்கியால் சுட்டதை அடுத்துதான், வனத்துறை அதிகாரிகள் அவர்களை பதிலுக்குச் சுட்டதாக தெரிவிக்கின்றனர்.
அந்தோணிசாமி மனைவியின் புகார்
- உயிரிழந்த அந்தோணிசாமியின் மனைவி லூர்து மேரி வனத்துறை அதிகாரிகள் மீது ஹனூர் போலீசாரிடம் புகார் தெரிவித்தார்.
- FIR தகவலின்படி, ஆகஸ்ட் 14ஆம் தேதி இரண்டு பசு மாடுகள் காணாமல் போயுள்ளது. அடுத்த நாள் (ஆகஸ்ட் 15) மரியமங்கலம் கிராமத்திற்கு அருகே உள்ளே வனப்பகுதியில் மூன்று பேரும் பசுவை தேடிச் சென்றுள்ளனர் என லூர்து மேரி புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
- பசு மாடுகளை தேடிக்கொண்டிருந்தபோது வனத்துறை அதிகாரிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் அவர்கள் உயிரிழந்ததாக லூர்து மேரி குற்றஞ்சாட்டினார்.
- சம்பவ இடத்தில் இருந்து முதலில் தப்பிச் சென்றதாக கூறப்பட்ட மகிமைதாஸ், லூர்து மேரியை தொடர்புகொண்டு இந்த சம்பவம் குறித்து தெரிவித்துள்ளதாக புகாரில் தெரிவித்துள்ளார்.
- இதில் சம்பந்தபட்ட வனத்துறை அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என லூர்து மேரி புகாரில் கோரிக்கை விடுத்துள்ளார்.
போலீசார் கூறியது என்ன?
இதன் அடிப்படையில் ஹனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். முதல் தகவல் அறிக்கை (FIR) கொல்லேகலாவில் உள்ள கூடுதல் உரிமையியல் நீதிபதி மற்றும் JMFC நீதிமன்றத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.
துப்பாக்கிச்சூடு சம்பவத்தை சுற்றியுள்ள சூழ்நிலைகளை கண்டறிய விசாரணை நடைபெற்று வருவதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
முதலமைச்சர் டி.கே. சிவகுமார் கூறுவது என்ன?
- (துப்பாக்கிச்சூடு)சம்பவம் குறித்து எனக்கு அதிகாலை 5 மணிக்கு தகவல் வந்தது.
- விசாரணைக்கு பிறகுதான் உண்மை என்ன என்பது தெரியவரும்.
- வனப்பகுதியில் இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்துள்ளது.
- சில சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
- துப்பாக்கி உள்ளிட்ட பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.
- சிலர் கைதும் செய்யப்பட்டுள்ளனர். உடல்கள் உடற்கூராய்வுக்கு எடுத்துச்செல்லப்பட்டன.
- துப்பாக்கிச்சூடு குறித்து மாஜிஸ்திரேட் தலைமையில் விசாரணைக்கு உத்தரவிடுகிறேன்.
வனத்துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி கூறுவது என்ன?
- ஹனூர் வட்டத்தில் ஷக்யம் வனக்கோட்டத்தில் கீழ் உள்ள பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் இச்சம்பவம் நடந்துள்ளது.
- உரிமம் இல்லாமல் துப்பாக்கி ஏந்தியிருந்த நான்கு பேரை வனத்துறையின் இரண்டு குழுக்கள் கண்டறிந்தனர். அவர்கள் நால்வரும் போலீசாரை பார்த்ததும் துப்பாக்கிச்சூடு நடந்தது.
- நால்வரிடமும் நான்கு பைகளில் மான் இறைச்சி இருந்தது.
- உயிரை பாதுகாப்பதற்காக தற்காப்புக்காகே அவர்களை சுட்டனர் என வனத்துறை அதிகாரிகள் என்னிடம் தெரிவித்தார்கள்.
- விசாரணைக்கு பிறகே உண்மையான நிலவரம் தெரியவரும். அதன்பிறகு தேவையான நடவடிக்கையை எடுப்போம்.
- எங்கள் அதிகாரிகள் தவறு செய்திருப்பது கண்டறியப்பட்டால் நாங்கள் நிச்சயமாக நடவடிக்கை எடுப்போம்.
அன்புமணி ராமதாஸ் வெளியிட்ட அறிக்கை
மூன்று தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்டதை கண்டித்து பாமக தலைவர் அன்புமணி வெளியிட்ட அறிக்கையில், "கொல்லப்பட்ட மூவரும் தமிழ்நாட்டை பூர்வீகமாகக் கொண்டவர்கள் ஆவர். சுமார் 100 ஆண்டுகளுக்கு முன் மேட்டூர் அணை கட்டுவதற்காக நிலங்கள் கையகப்படுத்தப்பட்ட போது, வீடுகள் மற்றும் உடமைகளை இழந்து வாழ்வாதாரம் தேடி கர்நாடகம் மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டம் மரியமங்கலம் பகுதியில் குடியேறியவர்கள் ஆவர்" என தெரிவித்துள்ளார்.
முன்வைக்கும் குற்றச்சாட்டுகள்
- மரியமங்கலம் காட்டுப்பகுதியில் மான் வேட்டையாடியதற்கோ, இரு தரப்புக்கும் இடையே சண்டை நடந்ததற்கோ எந்த சான்றுகளும் இல்லை.
- கொல்லப்பட்டவர்கள் துப்பாக்கிகளை வைத்திருந்ததாக கூறப்படுவதிலும் உண்மையில்லை.
- தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தி வருவதால் அங்கு பதட்டம் ஏற்பட்டுள்ளது.
- கர்நாடக ஆளும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சாம்ராஜ்நகர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரும், மாவட்ட பொறுப்பு அமைச்சருமான புட்டரங்கா ஷெட்டி, மதச்சார்பற்ற ஜனதா தளத்தைச் சேர்ந்த ஹானூர் சட்டப்பேரவை உறுப்பினர் மஞ்சுநாத் ஆகியோர் அதிகாலை நேரத்தில் என்கவுன்டருக்கான தேவை ஏன் வந்தது? என்று வினா எழுப்பியுள்ளனர்.
- மனித உரிமை ஆர்வலர்களும் வனத்துறையினர் செயலைக் கண்டித்துள்ளனர்.
அன்புமணியின் கோரிக்கைகள்
- தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்டது தொடர்பாக முரண்பட்ட செய்திகள் வெளியாகி வருவதால் உண்மையைக் கண்டறிய மாஜிஸ்திரேட் விசாரணைக்கு ஆணையிடப்பட்டிருப்பதாக கர்நாடக முதலமைச்சர் டி.கே. சிவக்குமார் தெரிவித்துள்ளார்.
- ஆனால் இந்த விசாரணையில் உண்மை வெளிவராது. இதுகுறித்து சிபிஐ விசாரணைக்கு ஆணையிடப்பட வேண்டும்.
- தமிழர்கள் படுகொலைக்காக கர்நாடக அரசுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் கண்டனம் தெரிவிக்க வேண்டும்.
- பாதிக்கப்பட்ட மூவரின் குடும்பங்களுக்கும் கர்நாடக அரசிடம் இருந்து தலா ரூ.1 கோடி இழப்பீட்டை வாங்கித் தர வேண்டும்.
- மூன்று தமிழர்களை சுட்டுக்கொன்ற கர்நாடக அரசுக்கு முதலமைச்சர் விஜய் இதுவரை கண்டனம் தெரிவிக்காதது ஏன் என தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் கேள்வி எழுப்பி உள்ளார்.
முதல்வர் விஜய் என்ன செய்ய வேண்டும்...?
அரசியல் கட்சித் தலைவர்களின் கோரிக்கைகளுக்கு மதிப்பளித்து, முதலமைச்சர் விஜய் கர்நாடக அரசிடம் வலியுறுத்தி முறையான விசாரணைக்கு கோரிக்கை வைக்க வேண்டும். தவெகவின் கூட்டணி கட்சியான காங்கிரஸ்தான் கர்நாடகாவில் ஆளுங்கட்சி என்பதால் முதல்வர் விஜய் வெளிப்படையான விசாரணைக்கு வலியுறுத்த வேண்டும்.