NSA Ajit Doval On Operation Sindoor: கடந்த 2025ஆம் ஆண்டு ஏப்ரல் 22ஆம் தேதி ஜம்மு காஷ்மீரின் பகல்காம் பகுதியில் பயங்கரவாத தாக்குதல் நடந்தேறியது உலகம் முழுவதும் சோகத்தை ஏற்படுத்தியது. இதில் 26 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்த அனைவரும் ஆண்கள்.
அந்த வகையில், இந்திய பெண்களின் குங்குமத்தை பயங்கரவாதிகள் அழித்துவிட்ட நிலையில், அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், இந்திய படைகள் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் துல்லிய தாக்குதல் மேற்கொண்டனர்.
இதைத் தொடர்ந்து பாகிஸ்தான் இந்தியா மீது தாக்குதல் தொடுக்க முயற்சித்தது. அனைத்தையும் இந்தியா முறியடித்தது. மேலும் இந்தியா தொடர்ந்து பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்தும் வந்தது. சுமார் 88 மணிநேர தொடர்ச்சியான இரு தரப்பு தாக்குதல்கள் மே 10ஆம் தேதி அன்று முடிவுக்கு வந்தது.
இந்நிலையில், ஆப்ரேஷன் சிந்தூர் குறித்து 'Declassified: Operation Sindoor' என்ற பெயரில் ஆவணத்தொடர் (Docuseries) எடுக்கப்பட்டுள்ளது. Discovery சேனலில் இன்றிரவு 9 மணிக்கு முதல்முறையாக ஒளிபரப்பு செய்யப்பட இருக்கிறது. Discovery+ தளத்தில் இந்த ஆவணத்தொடரை காணலாம்.
ஆபரேஷன் சிந்தூர் குறித்த இந்த ஆவணத்தொடர் இரண்டு பாகங்களாக உள்ளது. இந்திய ராணுவ நடவடிக்கை, தேசிய பாதுகாப்பு தலைமையில் உள்ளவர்கள் எடுத்த முடிவுகள், ஆப்ரேஷன் சிந்தூரை சுற்றிய நிகழ்வுகள் ஆகியவை பதிவு செய்யப்பட்டுள்ளன.
NSA Ajit Doval appears in Discovery’s upcoming docuseries Declassified: Operation Sindoor, offering a first-hand look at the decisions, objectives and resolve behind India’s 88-hour response.
— Lovi (@lovish_pandey06) August 14, 2026
கடந்தாண்டு ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு பின்னர் முதல்முறையாக தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தனது கருத்தை இந்த ஆவணத்தொடருக்கு அளித்த பேட்டியின் மூலம் பொதுவெளியில் தெரிவித்துள்ளார்.
அதில் பகல்ஹாம் தாக்குதல் நடந்தபோது பிரதமர் மோடி சௌதி அரேபிய சுற்றுப்பயணத்தை பாதியில் ரத்து செய்துவிட்டு, உடனடியாக நாடு திரும்பிய பின்னர் மேற்கொண்ட அவசர கூட்டம் குறித்து அஜித் தோவல் நினைவுக்கூர்ந்துள்ளார்.
"பிரதமர் வந்துவிட்டார். வெளியுறவு செயலாளர் அவரை வரவேற்க சென்றிருந்தார். அப்போது விமானநிலையத்திலேயே நாங்கள் கூட்டம் நடத்தினோம். முதலில் என்ன நடந்தது உள்ளிட்ட அனைத்து விஷயங்களையும் அவர் தெரிந்துகொள்ள துடித்தார்.
அப்போது உடனே அவர் என்னிடம் கேட்ட முதல் கேள்வியே - 'யார் இதை செய்தது? யார் இதற்கு பொறுப்பு? எதிரிகள் யார் என்பதில் நாம் முதலில் தெளிவாக இருக்க வேண்டும். அது எனக்கு உடனடியாக தெரிய வேண்டும்" என்றார்.
மேலும் அவர் கூறுகையில், "உலகிற்குச் சொல்லிய செய்தி மிகவும் தெளிவானது. இந்தியாவின் தாராள மனப்பான்மையையோ அல்லது சகிப்புத்தன்மையையோ ஒரு பலவீனமாக தவறாக புரிந்துகொள்ளக்கூடாது. விளைவுகள் குறித்து பொருட்படுத்தாமல் பிரச்னைகளை எதிர்கொள்ள இந்தியாவால் கடுமையாக தாக்கவும் முடியும்" என்றார்.
அதேநேரத்தில், பயங்கரவாதத்திற்கு ஆதரவளிப்பதோ அல்லது பயங்கரவாதிகளுக்கு எதிராக திறம்பட நடவடிக்கை எடுக்க தவறுவதோ எங்களால் பொறுத்துக்கொள்ளவே முடியாத ஒன்று என்பதை பாகிஸ்தான் ராணுவம் புரிந்துகொள்ள வேண்டும் என இந்தியா விரும்பியதாகவும் அவர் கூறினார்.
ஆவணத்தொடருக்கு அளித்த பேட்டியில் அவர் மேலும் கூறியதாவது, "ஒருமுறை ஒரு விஷயம் தொடங்கிவிட்டால் தேசத்தின் இறையாண்மையைப் பாதுகாக்க, எந்த எல்லைக்கும் போக நாங்கள் தயாராகவே உள்ளோம். அதற்கென எவ்வித வரம்பும் இல்லை. கடைசி சொட்டு ரத்தம் சிந்தும் வரை நாங்கள் போராடுவோம்" என பேசியிருந்தார்.
மேலும், "ஆபரேஷன் சிந்து உயிர்ப்புடன் இருக்கிறது என பிரதமர் மோடி கூறுவார், அதாவது கடைசி பயங்கரவாதி ஒழிக்கப்பட்டால்தான் பயங்கரவாதத்திற்கு எதிரான போர் முடிவடையும் என்பதே அவரது நோக்கம்" என பேசி உள்ளார். முழு விவரங்களை அறிய Declassified: Operation Sindoor ஆவணத்தொடரை பார்க்கவும்.