துபாயில் இருந்து இஸ்ரேலின் டெல் அவிவ் நகருக்கு சென்ற ஃப்ளைதுபாய் விமானத்தில், கேப்டனை தாக்கி விமானத்தை கடத்த முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கடந்த செப்டம்பர் 30 ஆம் தேதி இந்த சம்பவத்தின்போது, விமானத்தின் கடுப்பாட்டை கைபறி, டெல் அவிவ் பென் சூரியன் சர்வதேச விமான நிலையத்தின் பயணிகள் முனையத்தில் விமானத்தை மோத செய்ய துணை விமானி திட்டமிட்டிருந்ததாக ஐக்கிய அரபு அமீரகத்தின் அரசு தரப்பு தெரிவித்துள்ளது.
இந்த சம்பவத்தில் கேடன் ஸ்மித் மச்சார் மீது கோடரியால் தாக்குதல் நடத்தப்பட்டது. விமானம் திடீரென சுமார் 17,000 அடி உயரம் வரை கீழறங்கியதால் பயணிகள் பணியாளர்கள் மற்றும் மற்றொரு விமானி தலையிட்டு, தாக்குதலை நடத்திய துணை விமானியை கட்டுப்படுத்தினர். இதையடுத்து விமானத்தின் கட்டுப்பாடு மீட்கப்படு சவுதி அரேபியாவின் தபுக் விமான நிலையத்தில் விமானம் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது.
இந்த நிலையில், விமானத்தை கடத்தி தற்கொலை தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக துணை விமானி ஒப்புக்கொண்டுள்ளார் என்று ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைமை அரசு வழக்கறிஞர் ஹமத் சைஃப் அல் ஷம்சி தெரிவித்துள்ளார்.
29 வயதான ஓமன் நாட்டை சேர்ந்த ஹமாம் அல் ஹம்மாமி என்ற துணை விமானி கடந்த 2001 ஆம் ஆண்டு செப்டம்பர் 11 ஆம் தேதி அமெரிக்காவின் உலக வர்த்தக மைய இரட்டை கோபுரங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதால் ஈர்க்கப்பட்டதாக விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதேபோன்ற தாக்குதலை விமானத்தை பயன்படுத்தி நடத்த வேண்டும் என்ற எண்ணம் அவருக்குள் உருவானதாகவும், விமான பணியில் சேர முடிவெடுத்ததற்கும் இந்த எண்ணம் தொடர்புடையதாக அவர் வாக்குமூலத்தில் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.
விசாரணை அதிகாரிகளின் தகவலின்படி,துணை விமானி 2017 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் படித்துக்கொண்டிருந்தபோது தீவிரவாத சிந்தனைகளை வளர்த்துக்கொள்ள தொடங்கியதாக கூறப்படுகிறது. மேலும், டெல் அவிவ் விமான நிலையத்தின் வழித்தடம் மற்றும் அமைப்பை பற்றி அறிந்துகொள்வதற்காக அதே வழித்தடத்தில் ஏற்கனவே இரண்டு முறை பயணம் செய்ததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
செப்டம்பர் 30 ஆம் தேதி விமானம் புறப்பட்ட பின்னர், விமானத்தின் காக்பிட்டில் இருந்த கேப்டனை அவசரகால கோடரியால் தாக்கியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. அப்போது மற்றொரு விமானத்தின் பயணத்தை முடித்துவிட்டு வந்த கேப்டன், விமான பணியாளர் மற்றும் சில பயணிகள் தலையிட்டு, காயமடைந்த கேப்டனை காப்பாற்றியதுடன் தாக்குதல் நடத்தியவரையும் கட்டுப்படுத்தினர்.
கேப்டன் தலையில் ஏற்பட்ட காயங்கள் தீவிரமானவை என்றும், அவரை அவசரகால கோடரியால் தாக்கப்பட்டதற்கான அறிகுறிகளுடன் ஒத்துப்போவதாகவும் மருத்துவ தடயவியல் அறிக்கை தெரிவித்துள்ளது. கேப்டன், சந்தேக நபர் மற்றும் சம்பவத்தை நேரில் பார்த்தவர்களின் வாக்குமூலங்களும் இந்த அறிக்கையுடன் பொருந்துவதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
சந்தேகத்திற்குரிய நபரின் முந்தைய பணி அனுபவம் குறித்தும் அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர். அவர் 2020 முதல் 2024 வரை ஓமன் ஏர் நிறுவனத்தில் பயணியாற்றி உள்ளார். பின்னர் 2025 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ராயல் ஏர் மரோக் நிறுவனத்தில் சேர்ந்த அவர், சில மாதங்களுக்கு பிறகு 2026 ஜனவரியில் ஃப்ளைதுபாய் நிறுவனத்தில் பணியில் இணைந்துள்ளார்.
ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் படித்தபோது அவர் தொடர்பில் இருந்தவர்கள் குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது. ராயல் மெல்போர்ன் தொழில்நுட்பக் கல்லூரியுடன் தொடர்புடைய மசூதிக்கு சென்று வந்ததாகவும், அங்கு 'மை சென்டர்' எனப்படும் அமைப்புடன் தொடர்புடைய சிலரை சந்தித்ததாகவும் அவர் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
அந்த மையம் 'அபு ஹம்சா' என்று அழைக்கப்படும் லெபனான் நாட்டைச் சேர்ந்த ஒருவரால் நிர்வகிக்கப்பட்டதாகவும், முஸ்லிம் சகோதரத்துவ அமைப்புடன் தொடர்புடைய ஓர் அமைப்பின் ஆதரவு அதற்கு கிடைத்ததாகவும் சந்தேக நபர் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. எனினும், இவை விசாரணையில் சரிபார்க்கப்பட்டு வரும் தகவல்கள் மட்டுமே.
தாக்குதலுக்கு தயாராகும் வகையில், பயங்கரவாதத்தை ஆதரிக்கும் உள்ளடக்கங்களை அதிகமாக பார்த்ததுடன், தனிப்பட்ட பயிற்சியாளர் மூலம் குத்துச்சண்டைப் பயிற்சியும் மேற்கொண்டதாக சந்தேக நபர் வாக்குமூலம் அளித்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையில், ஃப்ளைதுபாய் நிறுவனம் அவரைப் பணியில் சேர்த்தபோது பின்பற்றிய நடைமுறைகளும் ஆய்வு செய்யப்பட்டன. விமானி உரிமம், நன்னடத்தை சான்றிதழ் மற்றும் வழக்கமான பாதுகாப்புச் சரிபார்ப்புகள் உள்ளிட்ட தேவைகளை அவர் பூர்த்தி செய்திருந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது. இருப்பினும், அந்தச் சோதனைகளில் அவருக்கு தீவிரவாத சிந்தனைகள் இருந்ததற்கான அறிகுறிகளோ, தாக்குதல் நடத்தும் நோக்கமோ கண்டறியப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வழக்கறிஞர் முன்னிலையில் அளித்த வாக்குமூலத்தில், தான் தனியாகவே செயல்பட்டதாக சந்தேக நபர் தெரிவித்ததாக UAE அரசு தரப்பு கூறியுள்ளது. இருப்பினும், இந்தத் தாக்குதலில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா, அவருக்கு உதவியவர்கள் இருந்தார்களா என்பது குறித்து விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
விமானத்தின் பதிவுகள், தொழில்நுட்ப அறிக்கைகள் மற்றும் சாட்சிகளின் வாக்குமூலங்கள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. விசாரணை முடிவுகளின் அடிப்படையில், அடுத்தகட்ட தகவல்கள் வெளியிடப்படும் என்று UAE தலைமை அரசு வழக்கறிஞர் ஹமத் சைஃப் அல் ஷம்சி தெரிவித்துள்ளார்.