SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

எரிந்த காரில் இந்திய இளைஞரின் உடல்: குறிவைத்து தாக்கப்பட்டாரா?... கனடாவில் பரபரப்பு

காவல்துறையின் தகவல்படி, அக்டோபர் 29 அன்று இரவு சுமார் 10:30 மணியளவில், லாங்லியின் ராலின்சன் கிரசண்ட் பகுதியில் வாகனம் ஒன்று எரிந்து கொண்டிருப்பதாகத் தகவல் கிடைத்தது. உடனடியாக லாங்லி காவல்துறையினரும் தீயணைப்புப் படையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். தீயை அணைக்கும் முயற்சியின் போது, ​​வாகனத்திற்குள் மனித எச்சங்கள் இருப்பதைக் கண்டறிந்தனர்.

Written By Sripriya Sambathkumar
Published: Nov 19, 2026, 11:51 IST | Updated: Nov 19, 2026, 11:58 IST
Image Credit: Social Media / Tushar Sharma Murdered in Canada
Join

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் உள்ள லாங்லி பகுதியில், எரியும் கார் ஒன்றிற்குள் 25 வயது இந்திய இளைஞர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, இது குறித்து கொலை வழக்கு விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. இந்த நபர் திட்டமிட்டே குறிவைக்கப்பட்டிருக்கலாம் என்று கனடியக் காவல்துறை சந்தேகிக்கிறது. இருப்பினும், இந்தக்கொலைக்கான நோக்கம் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.

உயிரிழந்தவர் பிரிட்டிஷ் கொலம்பியாவின் சர்ரே நகரில் வசித்து வந்த துஷார் சர்மா என்று அடையாளம் காணப்பட்டுள்ளார். இவரது அடையாளத்தை கனடாவின் ஒருங்கிணைந்த கொலை விசாரணை குழு (IHIT) நவம்பர் 17 அன்று உறுதிப்படுத்தியது.

அக்டோபர் 29 அன்று நடந்த சம்பவம்

காவல்துறையின் தகவல்படி, அக்டோபர் 29 அன்று இரவு சுமார் 10:30 மணியளவில், லாங்லியின் ராலின்சன் கிரசண்ட் பகுதியில் வாகனம் ஒன்று எரிந்து கொண்டிருப்பதாகத் தகவல் கிடைத்தது. உடனடியாக லாங்லி காவல்துறையினரும் தீயணைப்புப் படையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். தீயை அணைக்கும் முயற்சியின் போது, ​​வாகனத்திற்குள் மனித எச்சங்கள் இருப்பதைக் கண்டறிந்தனர்.

இதனைத் தொடர்ந்து, காவல்துறை கொலை வழக்கு தொடர்பான விசாரணையைத் தொடங்கியது. வழக்கின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு, கனடாவின் ஒருங்கிணைந்த கொலை விசாரணை குழு (IHIT) இந்த விசாரணையைத் தன் பொறுப்பில் எடுத்துள்ளது. லாங்லி ஆர்.சி.எம்.பி (RCMP), தடயவியல் நிபுணர்கள் மற்றும் பிரிட்டிஷ் கொலம்பியா மரண விசாரணை சேவை (BC Coroners Service) ஆகிய அமைப்புகளும் இந்த விசாரணையில் இணைந்து செயல்படுகின்றன.

மேலும் படிக்க | Explained: 60,000 ஊழியர்களுக்கு தன்னார்வ பணி விலகலுக்கான ஆஃபரை அளித்தது ஏன்? Microsoft CEO சத்யா நாதெல்லா விளக்கம்

துஷார் சர்மா கொலை வழக்கு

துஷார் சர்மாவின் மரணம் தொடர்பான சூழல்களைக் கண்டறியவும், அவருக்கு நேர்ந்த சம்பவங்களின் வரிசையை மீண்டும் கட்டமைக்கவும் புலனாய்வாளர்கள் பணியாற்றி வருகின்றனர். மேலும், அவர் இறப்பதற்கு முன்பு எங்கிருந்தார், யாருடனெல்லாம் தொடர்பில் இருந்தார் என்பதைக் கண்டறியும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளனர்.

துஷார் சர்மா மீது எந்தக் குற்றப் பின்னணியும் இல்லை என்றும், கனடாவில் அவருக்குப் பெரிய அளவிலான நண்பர்கள் வட்டமும் இல்லை என்றும் கனடா போலீசார் தெரிவித்துள்ளனர்.

குடும்பத்தாரிடம் விசாரணை

ஐ.எச்.ஐ.டி (IHIT) அமைப்பின் சார்ஜென்ட் ஃபிரெடா ஃபாங் கூறுகையில், காவல்துறை அதிகாரிகள் சர்மாவின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களிடம் விசாரணை நடத்தி வருவதாகத் தெரிவித்தார். அவரது தனிப்பட்ட வாழ்க்கை, அன்றாட நடவடிக்கைகள் மற்றும் இறப்பதற்கு முந்தைய நிகழ்வுகள் குறித்த தகவல்களைச் சேகரிக்க, வெளிநாடுகளில் வசிக்கும் அவரது உறவினர்கள் மற்றும் அறிமுகமானவர்களையும் தொடர்பு கொள்ள முயற்சிப்பதாக அவர் கூறினார்.

கொலைக்கான காரணம் என்ன?

துஷார் சர்மாவின் கொலைக்கான நோக்கம் இன்னும் தெரியவில்லை. இருப்பினும், துஷார் சர்மா திட்டமிட்டே குறிவைக்கப்பட்டிருக்கலாம் என்று கனடா போலீஸ் சந்தேகிக்கின்றனர். அவருக்கு யாருடனாவது தனிப்பட்ட பகை இருந்ததா அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் இருந்தனவா என்பது குறித்து காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.

இந்தக் குற்றச் செயலில் எத்தனை பேர் ஈடுபட்டனர் மற்றும் வாகனம் ஏன் தீவைத்துக் கொளுத்தப்பட்டது என்பது குறித்தும் காவல்துறை அதிகாரிகள் கண்டறிய முயன்று வருகின்றனர்.

மேலும் படிக்க | Nvidia-வை உருவாக்கியவருக்கே No? ஜென்சன் ஹுவாங்கை மீண்டும் CEO ஆக நியமிக்க முடியாது

பொதுமக்களிடம் உதவியை கோரும் காவல்துறை

விசாரணையின் ஒரு பகுதியாக, காவல்துறை ஷர்மாவின் புகைப்படத்தை வெளியிட்டு, இது குறித்த தகவல்களை வழங்குமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது. ஷர்மாவை அறிந்தவர்கள் அல்லது அக்டோபர் 29-ஆம் தேதி இரவு 'ராலிசன் கிரசண்ட்' (Rawlison Crescent) பகுதியில் சந்தேகத்திற்கிடமான நடவடிக்கைகளை பார்த்தவர்கள், காவல்துறையிடம் தகவல்களைப் பகிர்ந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இந்தச் சம்பவம் தொடர்பாக ஏதேனும் தகவல் தெரிந்தாலோ, அவரது நடமாட்டங்கள், அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் அல்லது அந்த வாகன எரிப்புச் சம்பவம் குறித்து ஏதேனும் தகவல் தெரிந்தாலோ, அல்லது அந்தப் பகுதியில் சந்தேகத்திற்கிடமான நடமாட்டத்தைக் கவனித்திருந்தாலோ, அல்லது சிசிடிவி (CCTV) காட்சிகள் ஏதேனும் இருந்தாலோ, முன்வந்து அவற்றை பற்றிய தகவல்களை காவல்துறையிடம் பகிர்ந்து கொள்ளுமாறு பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

விசாரணைக்கு உதவக்கூடியவர்கள், IHIT-ஐ 1-877-551-4448 என்ற எண்ணிலோ அல்லது ihitinfo@rcmp-grc.gc.ca என்ற மின்னஞ்சல் முகவரியிலோ தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வசக்கு குறித்த விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது; இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை, சந்தேகத்திற்குரிய நபர் எவரும் அடையாளம் காணப்படவில்லை என்று காவல்துறை தெரிவித்துள்ளது.

இந்தியர் ஒருவர் கொடூரமாக தீ வைத்து கொல்லப்பட்டுள்ள சம்பவம் கனடா வாழ் இந்தியர்களிடையே பெரும் அதிர்ச்சியை எற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க | Explained : மெட்டாவுக்கு இத்தாலி ரூ.8359 கோடி அபராதம் விதித்தது ஏன்? பெரிய காரணம் இதுதான்..

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

ஸ்ரீப்ரியா சம்பத், 6 ஆண்டுகளுக்கும் மேல் மீடியாவில் பணியாற்றி வருகிறார். இவர், வணிகம் மற்றும் தனிநபர் நிதி (Personal Finance) சார்ந்த கட்டுரைகளை எழுதுவதில் நிபுணத்துவம் பெற்றவர். மத்திய பட்ஜெட்டுகள், வங்கித் துறை, வருமான வரி, பங்குச் சந்தைகள் மற்றும் நாட்டின் ஒட்டுமொத்தப் பொருளாதாரம், மத்திய அரசு ஊழியர்கள், ஊதியக் குழுக்கள் (Pay Commissions), ஓய்வூதியத் திட்டங்கள், ஓய்வூதியதாரர்கள், அரசின் முக்கியக் கொள்கைகள் மற்றும் சர்வதேச விவகாரங்களில் பல கட்டுரைகளை எழுதியுள்ளார்.எழுத்தை வாசகர்களோடு இணைவதற்கான ஒரு சிறந்த பாலமாகக் கருதும் இவர், அவர்களின் தேவைகளுக்கும் ஆர்வங்களுக்கும் முன்னுரிமை அளிக்கிறார். வாசகர்களுடன் இயல்பான, உண்மையான மற்றும் நேர்மையான தொடர்பைக் கொண்டிருப்பதே இவரின் முதன்மை இலக்காகும். பணி நேரத்தைத் தாண்டி, புத்தகங்கள் வாசிப்பது, புதிய இடங்களுக்குப் பயணம் செய்வது மற்றும் அறிவுசார் விவாதங்களில் பங்கேற்பது இவருக்கு மிகவும் பிடித்தமானவை.
Read More

ZEENEWS TRENDING STORIES