மதுரை தனிஷ்க் நகைக்கடையில் கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகளில் ஏற்கனவே 5 கிலோ மீட்கப்பட்ட நிலையில், தற்போது எஞ்சிய 6.2 கிலோ நகைகளையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட நிஷாந்திடம் நடத்திய விசாரணையில், நகைகளை பதுக்கி வைத்திருந்த இடங்கள் குறித்த தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, மாடக்குளம் பகுதியில் ஏற்கனவே நகைகள் மீட்கப்பட்ட இடத்தின் அருகிலும், கபாலீஸ்வரர் மலையிலும் மறைத்து வைக்கப்பட்டிருந்த நகைகளை போலீசார் மீட்டுள்ளனர்.
மதுரை பழங்காநத்தம் பகுதியில் அமைக்கப்பட்ட தனிஷ்க் தங்க நகைக்கடை கடந்த அக்டோபர் 14ஆம் தேதி திறக்கப்பட்டது. கடையின் மேல் தளங்களில் கட்டுமானப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வந்தன. இந்த நிலையில், கடந்த வியாழக்கிழமை அதிகாலை சுமார் 3 மணியளவில் முகமூடி அணிந்து வந்த மர்ம நபர்கள் கடைக்குள் புகுந்து ஏராளமான தங்க நகைகளை கொள்ளையடித்துவிட்டு தப்பினர்.
இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், கொள்ளையர்களை பிடிக்க தனிப்படைகளை அமைத்து விசாரணையை தீவிரப்படுத்தினர். கடையின் உள்ளேயும், அதை சுற்றியுள்ள பகுதிகளிலும் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது, கொள்ளைக்கு முன்னதாக வாடிக்கையாளரை போல ஒருவர் பலமுறை கடைக்கு வந்து சென்றது தெரியவந்தது. அந்த நபர் மதுரையை சேர்ந்த நிஷாந்த் என்பதும் போலீசாரின் விசாரணையில் கண்டறியப்பட்டது.
இதற்கிடையே, இந்த வழக்கு தொடர்பாக இன்ஸ்டாகிராம் இன்ப்ளூயன்சர் மீனாட்சி மற்றும் நிஷாந்தின் தந்தை சுரேஷ் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் அடிப்படையில், மாடக்குளம் பகுதியில் உள்ள நிஷாந்தின் குடும்பத்தினருக்கு சொந்தமான இடத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ தங்க நகைகள் மீட்கப்பட்டன.
இதற்கிடையில் தலைமறைவாக இருந்த நிஷாந்தைத் தேடி தனிப்படையினர் பல்வேறு இடங்களில் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், பெங்களூருவில் இருந்து சேலம் நோக்கிச் சென்ற தனியார் சொகுசுப் பேருந்தில் நிஷாந்த் பயணம் செய்வதாக போலீசாருக்குத் தகவல் கிடைத்தது. அவரது நடவடிக்கைகளில் சந்தேகமடைந்த பேருந்து நடத்துநர் இதுகுறித்து காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தார்.
இதையடுத்து, பெங்களூரு - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த தருமபுரி அதியமான் கோட்டை போலீசார், சேஷம்பட்டி பகுதியில் அந்த பேருந்தை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது போலீசாரிடம் இருந்து தப்பிக்க முயன்ற நிஷாந்தை மடக்கி பிடித்து கைது செய்தனர்.
தொடர்ந்து, அதியமான் கோட்டை காவல் நிலையத்தில் அவரிடம் சுமார் 4 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் எங்கு பதுக்கி வைக்கப்பட்டுள்ளன, இந்த சம்பவத்தில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா என்பது குறித்து போலீசார் விசாரித்தனர். பின்னர் நிஷாந்தை மதுரைக்கு அழைத்து சென்று தொடர்ந்து விசாரணை மேற்கொண்டனர்.
கொள்ளையடிக்க எப்போது திட்டம் போடப்பட்டது, திருடப்பட்ட நகைகளை விற்பனை செய்ய ஏதேனும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டனவா என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் நிஷாந்திடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது, கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை பல்வேறு இடங்களில் பிரித்து மறைத்து வைத்திருந்ததாக அவர் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
அவர் அளித்த தகவலின் அடிப்படையில், ஏற்கனவே 5 கிலோ நகைகள் மீட்கப்பட்ட மாடக்குளம் பகுதியின் அருகிலும், கபாலீஸ்வரர் மலையிலும் பதுக்கி வைக்கப்பட்டிருந்த எஞ்சிய 6.2 கிலோ தங்க நகைகளை போலீசார் மீட்டுள்ளனர். இதன் மூலம் தனிஷ்க் நகைக்கடை கொள்ளை வழக்கில் கொள்ளையடிக்கப்பட்ட நகைகளில் இதுவரை 11.2 கிலோ நகைகள் மீட்கப்பட்டுள்ளன.