மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் கட்சியின் முன்னணி தலைவர்களுள் ஒருவருமான ராகுல் காந்தி பாஜக - ஆர்எஸ்எஸ் அமைப்புகளை கடுமையாக சாடுவதும், விமர்சிப்பதும் புதிதல்ல. இருப்பினும் அர்த்தநாரீஸ்வரர் புகைப்படத்தை பகிர்ந்து பாஜக - ஆர்எஸ்எஸ் அமைப்புகளை ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
ராகுல் காந்தியின் இன்றைய சமூக வலைதளப் பதிவின் பின்னணி என்ன?, அர்த்தநாரீஸ்வரர் தத்துவம் மூலம் அவர் விளக்க விரும்புவது என்ன?, இந்த விவகாரத்தின் அரசியல் பின்னணி என்ன? உள்ளிட்டவற்றை இங்கு விரிவாக காணலாம்.
சோனியா காந்தியின் Belonging: A Journey Of Love என்ற சுயசரிதை புத்தகம் சமீபத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. நாடு முழுவதும் அந்த புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சம்பவங்கள், அரசியல் நிகழ்வுகள், தகவல்களை சுட்டிக்காட்டி கடும் விமர்சனங்களும், கண்டனங்களும் எழுந்தன.
அதேநேரத்தில் பல்வேறு தரப்பினர் வரவேற்கவும் செய்தனர். சோனியா காந்தியின் புத்தகம் விற்பனையிலும் அசத்தி வருவதாக தகவல்கள் வருகின்றன.
இந்தச் சூழலில், கடந்த வாரம் இந்த புத்தக வெளியீட்டு விழா டெல்லியில் நடைபெற்றது. இதில் ராகுல் காந்தி அவரது தந்தை ராஜீவ் காந்தி மற்றும் தாயார் சோனியா காந்தி இடையேயான அன்பு, நெருக்கம் குறித்து பகிர்ந்திருந்தார்.
உணவு சாப்பிடும்போது தனது தந்தையின் மடியில் தாய் அமர்ந்திருப்பார் என்றும் சிறுவயதில் இதை சாதாரணமான விஷயமாக நினைத்ததாகவும் அவர் கூறியிருந்தார். நண்பர்களின் வீடுகளில் பெற்றோர் இவ்வாறு நடந்துகொள்ளாததைப் பார்த்து ஆச்சரியப்பட்டதாகவும் பகிர்ந்திருந்தார்.
இந்தப் பேச்சுக்கு அசாம் முதலமைச்சர் ஹிமந்த் பிஸ்வா சர்மா உள்ளிட்ட பாஜக தலைவர்கள் விமர்சனம் தெரிவித்தனர். சமூக வலைதளங்களிலும் ராகுலுக்கு ஆதரவாகவும் எதிராகவும் கருத்துகள் எழுந்தன. அதேசமயம் அன்பையும் பாசத்தையும் வெளிப்படுத்துவது தவறல்ல என்றும், உறவுகளில் சமத்துவம் முக்கியம் என்றும் காங்கிரஸ் தரப்பில் ராகுல் காந்திக்கு ஆதரவாகப் பேசியது.
The deeper I go into Indian spiritual and religious traditions, the clearer it becomes. The BJP and RSS are uncouth, greedy, casteist male chauvinists with absolutely no understanding of our spiritual and religious traditions. https://t.co/CrJxkEXNgI
— Rahul Gandhi (@RahulGandhi) November 22, 2026
அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா: மன்னிக்கவும் மேடம் (சோனியா), உங்களின் சிறப்பான நாளில் கூட, உங்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தாமல் அவரால் (ராகுலால்) இருக்க முடியவில்லை. இந்த நாட்டுக்கு இது ஏற்கெனவே தெரிந்துவிட்டது. நீங்களும் இப்போது புரிந்துகொள்வீர்கள் என நம்புகிறேன். இந்த பிராடக்டை மீண்டும் மீண்டும் அறிமுகப்படுத்தினாலும் பலனில்லை.
உத்தர பிரதேச பாஜக தலைவர்: தாயாருக்கு அளிக்க வேண்டிய மரியாதை பற்றிய புரிதல் இல்லை. பெண்களின் கண்ணியம் குறித்த அக்கறை இல்லை. தாய்நாட்டின் மரியாதை குறித்தும் கவலை இல்லை.
Fear, anger and hatred have woven a web in the hearts of BJP and RSS supporters that stops them from experiencing and expressing love. As a true Hindu, it is my duty to free them from this web, so that they too can start to experience the breathtaking beauty and joy of love and belonging in their lives. Satyam Shivam Sundaram.
— Rahul Gandhi (@RahulGandhi) November 17, 2026
ராகுல் காந்தியின் இந்த பதிவுகளை வெறும் பாஜக - ஆர்எஸ்எஸ் மீதான அரசியல் விமர்சனமாக மட்டும் பார்க்க முடியாது. இந்து மத மரபுகளின் அடிப்படையில் அன்பு, சமத்துவம், ஆண் - பெண் இணைவு போன்ற கருத்துகலை அரசியல் விவாதத்திற்குள் கொண்டுவரும் முயற்சியாகவும் நாம் பார்க்க முடிகிறது.
ராஜீவ் - சோனியா குறித்த ராகுல் காந்தியின் பேச்சைத் தொடர்ந்து எழுந்த விமர்சனங்களு்ககு மத்தியில், இந்து ஆன்மீக மரபுகளை முன்வைத்து அவர் வெளியிட்டிருக்கும் பதிவுகள், பாஜக மற்றும் காங்கிரஸ் இடையேயான கருத்தியல் மோதலுக்கு மேலும் ஒரு புதிய பரிமாணத்தைச் சேர்த்திருக்கிறது.