இந்தியாவின் பிரபலமான பாடகிகளுள் ஒருவராக இருக்கிறார், சுனிதா சாரதி. இவர் வெஸ்டர்ன் பாடல்கள், க்ளாசிக் பாடல்கள் என அனைத்தையும் பாடியிருக்கிறார். 25 ஆண்டுகளாக பாடகியாக இருக்கும் இவர், 2002ஆம் ஆண்டு சினிமாவிற்குள் பாடல் பாடி வருகிறார். இவர் சமீபத்தில், மியூசிக் ஸ்டுடியோவில் பெண்களுக்கு ஏற்படும் அசௌகரியங்கள் குறித்து பேசியிருக்கிறார்.
பாடகி சுனிதா சாரதி, தமிழ் மட்டுமன்றி தெலுங்கு, மலையாளம், இந்தி உள்பட பல்வேறு மொழிகளில் பிரபமான பாடல்களை பாடியவராக இருக்கிறார். குறிப்பாக அவர் பாடிய ‘ஹே நீ ரொம்ப அழகா இருக்க’ படத்தில் அவர் பாடிய ‘இனி நானும் நானில்லை’ பாடல் செம ஹிட் ஆனது. மேலும், கண்ணாலே கல்மிஷம், சுத்துதோ சுத்துதோ பூமி, எங்கேயும் எப்போதும், யாக்கை திரி உள்பட பல்வேறு பிரபலமான பாடல்களை இவர் பாடியிருக்கிறார்.
பாடகி சுனிதா சாரதி, சமீபத்தில் தான் ரெக்கார்டிங் ஸ்டுடியோவில் பாடலை பதிவு செய்து கொண்டிருக்கும் போது, இயக்குநர் மூட் ஆக பாடச்சொன்னதாகவும் அந்த சூழல், தனக்கு மிகுந்த சங்கடத்தை ஏற்படுத்தியதாகவும் தெரிவித்திருக்கிறார்.
அந்த இடத்தில் ஆண்கள் மட்டுமே இருந்த சூழலில், அந்த இயக்குநர் அப்படி கூறியது தனக்கு சங்கடத்தை ஏற்படுத்தியதாக அவர் தெரிவித்திருக்கிறார்.
தொடர்ந்து பேசிய அவர், பதிவு செய்யும் போது பயன்படுத்தப்பட்ட வார்த்தைகள் குறித்து அவர் குறிப்பிட்டார். அப்போது ஆங்கில வார்த்தைகளான Sensuality, Sexuality போன்ற வார்த்தைகளுக்கு பதிலாக, பெண் கலைஞர்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தாத வகையில், மரியாதைக்குரிய கலைச்சொற்களை பயன்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி இருக்கிறார்.
பெண் பாடகர்கள் குறித்து பேசிய அவர், அந்த சூழல் பாதுகாப்பானதாகவும் மரியாதைக்குரியதாகவும் இருக்க வேண்டும் என்பதையும் அவர் தெரிவித்தார். இவர் கூறிய இந்த விஷயங்கள் தற்போது வைரலாகி வருகின்றன.
சினிமா துறையில், திரைக்கு முன்னாள் இருப்பவர்கள் மட்டுமன்றி திரைக்கு மறைவில் இருப்பவர்களுக்கும் பாதுகாப்பு இருக்கிறதா என்கிற கேள்வி எழுகிறது. கேரளா மட்டுமன்றி வட இந்தியாவில் இருந்தும் ‘காஸ்டிங் கவுச்’ கலாச்சாரம் குறித்து பேசி, பெரும் பேசு பொருளாக மாறி இருக்கின்றனர். சில மாதங்களுக்கு முன்னதாக, தமிழ் திரையுலகின் முன்னணி பாடகியாக இருந்த ஸ்வாகதா, சமீபத்தில் தெரிவித்திருந்த விஷயங்கள் புயலை கிளப்பின.
தான், ஒரு பிரபலமான இசையமைப்பாளரிடம் வேலை பார்த்தாகவும் அவர் தன்னை பாலியல் வன்புணர்வு செய்ததாகவும் ஒரு நேர்காணலில் கூறியிருந்தார். அந்த இசையமைப்பாளர் யார் என்பதை கூற மறுத்த அவர், தன்னைப்போல பலர் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், உரிய ஆதாரங்களை கலெக்ட் செய்த பின்னர் அவர் யார் என்பதை தெரிவிப்பேன் என்றும் கூறியிருந்தார்.
இந்த சம்பவத்தால்தான், தான் உயிராக நினைத்த பாடல் பாடுவதையும் இசையையும் விட்டு வந்து, இப்போது வட இந்தியாவில் தொழில் செய்து வருவதாகவும் தெரிவித்திருந்தார். இவரைப்போல பல பாடகிகள் தங்களுக்கு ஏற்பட்ட அசெளகரியம் என்ன என்பதை தெரிவிக்கவில்லை என்றாலும், எந்த பெண்ணாவது “சினிமாவில் பணிபுரிய ஆசை” என்று கூறும் போது, “அதெல்லாம் பாதுகாப்பே கிடையாது, அங்கே போகாதே” எனக்கூறும் குடும்பத்தினரும் நண்பர்களும் இருக்கத்தான் செய்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.