மொத ராத்திரி திரைப்படம் மற்றும் ராம் இன் லீலா ஆகிய திரைப்படங்கள் வெளியாகி இருக்கிறது. இதில் மொத ராத்திரி படத்தில் ரிஷிகாந்தும், ராம் இன் லீலா திரைப்படத்தில் ரியோ ராஜும் கதாநாயகர்களாக நடித்துள்ளனர்.
மொத ராத்திரி திரைப்படம்:
‘மொத ராத்திரி’ படத்தை அறிமுக இயக்குநர் ராஜா கருப்பசாமி இயக்கியிருக்கிறார். ரிஷிகாந்த், அனிஷ்மா அனில்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்திருக்கிறது. குடும்பத்தோட இந்தப் படத்தை பார்க்கலாமா?
கதை என்ன?
ரிஷிகாந்த், காதலில் ஏற்பட்ட ஏமாற்றத்துக்குப் பிறகு துபாயில் பல வருடங்களாக வேலை பார்த்துக்கொண்டு இருக்கிறார். அவரை குடும்பத்தினர் ஒரு காரணத்துக்காக சொந்த ஊருக்கு வரவழைக்கிறார்கள். ஆனால் அங்கே வந்த பிறகுதான் அவருக்கு ஒரு பெரிய விஷயம் தெரிய வருகிறது.
அவருக்கே தெரியாமல் அவருடைய திருமணத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. மறுபக்கம், அனிஷ்மா அனில்குமார் நடிக்கும் முத்துச்செல்விக்கும் இந்தத் திருமணத்தில் முழு விருப்பம் கிடையாது.
அவருக்கும் ஏற்கனவே காதலன் இருக்கிறார்.திருமணம் நடக்கக்கூடாது... காதலனுடன் தப்பிச் சென்றுவிட வேண்டும் என்று நினைக்கிறார். ஆனால் அங்கே நடக்கும் சில எதிர்பாராத சம்பவங்களால் நிலைமை மொத்தமாக மாறுகிறது. கடைசியில் திருமணம் நடந்துவிடுகிறது.
அதற்குப் பிறகு...மொத ராத்திரிக்கு முன்பாக முத்துச்செல்வியை காதலன் வந்து அழைத்துச் சென்றாரா? அல்லது இந்தத் திருமண வாழ்க்கை இப்படியே தொடர்ந்ததா? இதுதான் படத்தின் கதை.
படத்தின் பலம்..
படத்தின் மிகப்பெரிய பலம் என்னவென்றால், ஒரே இரவில் நடக்கும் சம்பவங்களை வைத்து நிறைய விஷயங்களை இயக்குநர் சொல்ல முயற்சி செய்திருக்கிறார்.
பெண்களுக்கு இருக்கும் சமூக கட்டுப்பாடுகள், ஆணாதிக்க மனநிலை, காதல் மட்டுமே வாழ்க்கை கிடையாது என்ற கருத்து, திருமணத்தைச் சுற்றி இருக்கும் எதிர்பார்ப்புகள், சாதி சார்ந்த ஏற்றத்தாழ்வுகள், திருமண வீட்டில் நடக்கும் சின்னச் சின்ன சண்டைகள், வெளியில் சிரித்துக்கொண்டு பேசுற மனிதர்களுக்குப் பின்னாடி இருக்கும் இன்னொரு முகம், இப்படி பல விஷயங்களை கதைக்குள்ளேயே கொண்டு வந்திருக்கிறார் இயக்குநர்.
அதனால்தான் படம் வெறும் திருமணக் கதையாக மட்டும் இல்லாமல், சில சமூக விஷயங்களையும் பேசுகிறது. ரிஷிகாந்த் இந்தப் படத்தில் நல்ல மெச்சூரான நடிப்பை கொடுத்திருக்கிறார்.
நடிப்பு:
அதேபோல அனிஷ்மா அனில்குமாருக்கும் நல்ல ஸ்கோப் கொடுக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக திருமணக் காட்சிகளிலும், கிளைமேக்ஸ் பகுதியிலும் அவருடைய நடிப்பு கவனம் ஈர்க்கிறது.இவர்களைத் தவிர ஷெல்லி கிஷோர், சங்கீதா பாலன், வெங்கடேஷ், பக்ஸ், அப்துல் லீ உள்ளிட்ட துணை நடிகர்களும் கதாபாத்திரங்களுக்கு ஏற்ற மாதிரி நடித்திருக்கிறார்கள்.
படத்தில் சீரியஸ் விஷயங்கள் இருந்தாலும், இடையிடையே வரும் காமெடி காட்சிகள் நல்ல ரிலீஃப் கொடுக்கின்றன.
குறிப்பாக இயக்குநர் ராஜா கருப்பசாமி சம்பந்தப்பட்ட சில காட்சிகளும், அவருடைய நண்பர்கள் வரும் காட்சிகளும் தியேட்டரில் சிரிப்பை வரவழைக்கும் வகையில் இருக்கின்றன. இந்தப் படத்துக்கு பரத் சங்கர் இசையமைத்திருக்கிறார்.படத்தின் சூழ்நிலைக்கு ஏற்ற மாதிரி இசையை பயன்படுத்தியிருக்கிறார்.
படத்தின் பலவீனம்!
குறிப்பாக திருமண வீட்டின் மேளதாளம் போன்ற ஒலிகளை வைத்து பல காட்சிகளுக்கு எமோஷனை கொண்டு வந்திருக்கிறார்கள்.ஒளிப்பதிவையும் சுரேந்திரன் பிரபஞ்சோதி சிறப்பாக செய்திருக்கிறார். படத்தின் முதல் பாதியில் இருக்கும் வேகம் இரண்டாம் பாதியில் கொஞ்சம் குறைகிறது.
குறிப்பாக மழையை மையமாக வைத்து வரும் சில பகுதிகளில் கதை கொஞ்சம் மெதுவாக நகர்வது தெரிகிறது. இன்னும் கொஞ்சம் எடிட்டிங் செய்து சில காட்சிகளை குறைத்திருந்தால் படம் இன்னும் விறுவிறுப்பாக இருந்திருக்கும்.
மேலும் சில கதாபாத்திரங்கள் ஆரம்பத்தில் எப்படி காட்டப்படுகிறார்களோ, அதைப் பார்த்தே கிளைமேக்ஸ் ஓரளவுக்கு யூகிக்க முடிகிறது. அதை கொஞ்சம் மாற்றியிருந்தால் இன்னும் சுவாரஸ்யமாக இருந்திருக்கும்.
ரியோ ராஜ், வர்த்திகா நடிப்பில், ராமசந்திரன் கண்ணன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இந்தப் படம், காதல் கதையோட சேர்த்து கொஞ்சம் ஃபேண்டஸி, நிறைய காமெடி என வித்தியாசமான முயற்சியாக வந்திருக்கிறது.
இந்தப் படத்தில் ரியோ ராஜ், ரகுராம் என்ற கேரக்டரில் நடித்திருக்கிறார்.
ரகுராமுக்கு திருமணம் பண்ணிக்கணும்னு ரொம்ப ஆசை. ஆனால் பெண் பார்க்கிற ஒவ்வொரு இடத்துலயும் ஏதாவது ஒரு காரணத்துக்காக திருமணம் தட்டிப் போயிட்டே இருக்கு.
இந்த சூழ்நிலையில்தான் ஒரு நாள் ரயில்ல வர்த்திகாவை பார்க்கிறார். வர்த்திகா இந்தப் படத்தில் லீலா என்ற கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார். ரயிலில் தொடர்ந்து 25 நாட்கள் லீலாவை பார்த்துக்கிட்டே இருக்கிறார் ரகுராம்.
ஒரு கட்டத்துல காதலை சொல்லாம் என்று அவர் நினைக்கும்போது, லீலாவே முந்திக்கிட்டு அவரை "ராம்"ன்னு நினைச்சு பேச ஆரம்பிக்கிறார்.
அங்கிருந்து ரகுராமுக்கு லீலா மேல காதல் வந்து விடுகிறது. ஆனால்,
லீலா ஒரு கண்டிஷன் போடுகிறார்கள். மாலை 6 மணிக்கு மேல என்னை பார்க்கக்கூடாது... பேசக்கூடாது என்று. அதுக்கு ரகுராமும் ஓகே சொல்லிடுறார். காதல் ஆரம்பிச்சு, திருமணம் வரைக்கும் போகிறது. ஆனால் திருமணம் நிச்சயமான பிறகும் லீலா அதே கண்டிஷனை போடுறாங்க.
இங்கதான் ரகுராமுக்கு சந்தேகம் வருது. "அப்படி என்னதான் 6 மணிக்கு மேல நடக்குது?"
லீலா ஏன் இந்த கண்டிஷனை போடுறாங்க? 6 மணிக்கு மேல லீலாவுக்கு என்ன ஆகுது?
ராம் உண்மையிலேயே அந்த ரகசியத்தை கண்டுபிடிக்கிறாரா? இதைச் சுற்றிதான் மொத்தக் கதையும் நகருது. ரியோ ராஜுக்கு இந்த கேரக்டர் நன்றாகவே செட் செய்திருக்கிறது.
படம் முழுக்க ஒரு ஜாலியான பாடி லாங்குவேஜ், சிரிப்பு, காமெடி என ரொம்ப இயல்பாக நடித்திருக்கிறார். குறிப்பாக அவர் நேரடியாக கேமராவைப் பார்த்து ரசிகர்களிடம் பேசுவது மாதிரியான காட்சிகள் நல்லா வேலை செய்திருக்கிறது.
தன்னையே ஒரு "புரட்சியாளர்" மாதிரி நினைத்துக்கிட்டு அவர் செய்யும் விஷயங்கள் பல இடங்களில் நல்ல காமெடியை கொடுக்குது. ரகுராம் கதாபாத்திரத்தை இயக்குநர் கொஞ்சம் அப்பாவித்தனமாகவும், அதே நேரத்தில் காமெடியாகவும் உருவாக்கியிருக்கிறார். வர்த்திகா லீலா கதாபாத்திரத்தில் அழகாக இருக்கிறார். ஆனா இவருடைய கேரக்டர்லதான் படத்தோட முக்கியமான சஸ்பென்ஸ் இருக்கு.
ஆரம்பத்தில் ரொம்ப சாதாரணமான ஒரு பெண்ணா தெரியும் லீலா. இடைவேளைக்குப் பிறகு வேற மாதிரி மாறுவது படத்துக்கு முக்கியமான திருப்பமாக இருக்கிறது.
அந்த ட்விஸ்ட்தான் இரண்டாம் பாதியில் படத்தை அடுத்த கட்டத்துக்கு கொண்டு போகுது. இந்தப் படத்தோட மிகப்பெரிய பிளஸ் பாயிண்ட்டுல காமெடியும் ஒன்று.
படம் சீரியஸாக போகும் நேரத்திலும் காமெடி கலந்த காட்சிகள் வந்து ரசிகர்களை ரிலாக்ஸ் பண்ணுது. குறிப்பாக ரயில் சம்பந்தப்பட்ட சில காட்சிகள் நல்ல கலகலப்பாக இருக்கிறது.
இயக்குநர் பழைய காமெடி படங்களோட அந்த டைமிங் மற்றும் சூழ்நிலை நகைச்சுவையை சில இடங்களில் பயன்படுத்தியிருக்கிறார். அதனால் குடும்பமாக உட்கார்ந்து ஜாலியாக பார்க்கக்கூடிய ஒரு உணர்வு கிடைக்குது.
மல்லிகா அர்ஜுனின் ஒளிப்பதிவு படத்துக்கு நல்ல ரிச் லுக்கை கொடுத்திருக்கிறது. அதேபோல அன்கித் மேனனின் இசையில் வரும் காதல் பாடல்கள் ரசிக்கும்படியாக இருக்கிறது.
தீபா வெங்கட்டும் நீண்ட நாட்களுக்குப் பிறகு வெள்ளித்திரையில் நல்ல கவனம் ஈர்க்கும் நடிப்பை கொடுத்திருக்கிறார். படத்துல எல்லாமே பிளஸ் கிடையாது.
இரண்டாம் பாதியில் சமீபத்தில் வெளியான ஒரு படத்தின் சாயல் இருப்பது கொஞ்சம் மைனஸாக தெரிகிறது. அதோடு சில லாஜிக் மீறல்கள் இருக்கிறது.
சில காட்சிகள் மற்றும் இரட்டை அர்த்த வசனங்கள் படத்தின் வேகத்தை குறைக்கிறது. சேத்தன், மாளவிகா அவினாஷ் போன்ற நடிகர்களுக்கு இன்னும் கொஞ்சம் முக்கியத்துவம் கொடுத்திருக்கலாம் என்ற எண்ணமும் வருகிறது.
இரண்டு படங்களுமே, குடும்ப ரசிகர்களுக்கு பிடித்ததாக இருக்கிறது. எனவே, வீக்-எண்டில் கண்டிப்பாக இந்த இரு படங்களையும் பார்க்கலாம் என விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.