உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூரில் சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் பங்கேற்ற பேரணியில், புல்டோசர் மோதி 12 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மலர் தூவுவதற்காக பேரணியில் சென்ற புல்டோசர் சிறுவன் மீது மோதியதாக கூறப்படுகிறது.
உயிரிழந்த சிறுவன் ஆர்யவர்தன் சிங் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் செளரி செளரா பகுதியில் உள்ள ராஜ்தானி கிராமத்தை சேர்ந்தவர். அவரது தந்தை ஓம்கர் சிங், பாஜக நிர்வாகியாக உள்ளார். கோரக்பூரின் கூடாகாட் பகுதியில் சமாஜ்வாதி கட்சியின் PDA ரத யாத்திரை நடைபெற்றபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
சிறுவனின் தந்தை ஓம்கர் சிங் கூறுகையில், பேரணியில் புல்டோசர் மூலம் மலர் தூவப்பட்டது. அப்போது அகிலேஷ் யாதவின் வாகன அணிவகுப்பு ஏற்கனவே முன்னே சென்றைவிட்டதாக தெரிவித்தார். இதற்கிடையே அதிவேகமாக வந்த புல்டோசர் பின்னாள் இருந்து தனது மகன் மீது மோதியதாக கண்ணீர்மல்க கூறினார்.
புல்டோசர் மோதியதில் சிறுவன் சாலையில் நடுவில் இருந்த தடுப்பு சுவரில் தூக்கி வீசப்பட்டதாக கூறப்படுகிறது. இதில் தலையின் பின் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டு சிறுவன் உயிரிழந்தார். இந்த நிலையில், அரசியல் பேரணிகளில் கனரக வாகனங்கள் பொதுமக்கள் கூட்டத்துக்குள் அனுமதிக்கபப்ட்டது ஏன் என கேள்வி எழுந்துள்ளது.
இந்த சம்பவத்தை தொடர்ந்து கோரக்பூர் எம்எல்ஏ சர்வன் நிஷாத் சிறுவனின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். மேலும், அமைச்சர் சஞ்சய் நிஷாத், தொலைபேசி மூலம் எம்எல்ஏ-வை தொடர்புகொண்டு, பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்யமாறு தெரிவித்துள்ளார். இதற்கிடையே, சிறுவனின் மரணத்துக்கு சமாஜ்வாதி கட்சியினரின் அராஜமே காரணம் என உத்தர பிரதேச பாஜக குற்றம்சாட்டியுள்ளது.
இந்த சம்பவம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய நிலையில், சிறுவனம் உயிரிழந்தது குறித்து தனக்கு எந்த தகவலும் வரவில்லை என அகிலேஷ் யாதவ் தெரிவித்தார். தொடர்ந்து, பேரணிக்குத் தேவையான ஏற்பாடுகளைச் செய்யத் தவறியதாக நிர்வாகத்தின் மீது அவர் குற்றம்சாட்டினார். பாஜகவினர் மற்றவர்கள் மீது பொய் வழக்குகளைப் போடுவதாகவும் அவர் விமர்சித்தார். இதற்கிடையே, விபத்தை ஏற்படுத்திய புல்டோசரை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
அகிலேஷ் யாதவின் பேரணி நேற்று (நவம்பர் 18) கோரக்பூர் விமான நிலையத்தில் தொடங்கி, சௌரி சௌரா பகுதியில் உள்ள தேவகாஹி கிராமத்தில் நிறைவடைந்தது. மாவட்டத்தின் ஒன்பது சட்டமன்ற தொகுதிகள் மற்றும் கிழக்கு உத்தரப் பிரதேசத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான கட்சி தொண்டர்கள் இதில் பங்கேற்றனர்.
உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் அரசியல் செல்வாக்கு மிக்க பகுதியாக கோரக்பூர் கருதப்படுகிறது. அவர் இத்தொகுதியில் இருந்து ஐந்து முறை மக்களவை உறுப்பினராகவும், ஒருமுறை சட்டமன்ற உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.