SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

ChatGPT செய்த மேஜிக்! 2.5 ஆண்டுகளுக்குப் பிறகு குடும்பத்துடன் இணைந்த மகாராஷ்டிரா பெண்!

மகாராஷ்டிராவில் மனநலம் பாதிக்கப்பட்டு இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு குடும்பத்தைப் பிரிந்த 45 வயதுப் பெண்ணை, தன்னார்வலர்கள் ChatGPT மற்றும் கூகுள் தேடல் உதவியுடன் மீட்டு மீண்டும் குடும்பத்துடன் சேர்த்து வைத்துள்ளனர்.

Written By R Balaji
Published: Nov 15, 2026, 07:20 IST | Updated: Nov 15, 2026, 07:24 IST
Join

மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் வீட்டை விட்டு வெளியேறி, இரண்டரை ஆண்டுகளாக குடும்பத்தை பிரிந்து வாழ்ந்து வந்த 45 வயது பெண்ணை, AI உதவியுடன் மீண்டும் அவரது குடும்பத்தினருடன் இணைத்துள்ளனர். மகாராஷ்டிராவில் நடைபெற்ற இந்த நெகிழ்ச்சி சம்பவம் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

மகாராஷ்டிராவின் பர்பானி மாவட்டத்தை சேர்ந்தவர் ஜுலேகா முகீத் ஷேக் (45). மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் வீட்டை விட்டு வெளியேறிய இவர், குடும்பத்தினரை பிரிந்து தவித்து வந்துள்ளார். இதற்கிடையே, மும்பை கொலாபா காவல்துறை மற்றும் செம்பூரில் உள்ள அரசு பெண்கள் காப்பகத்தின் அதிகாரிகள் அளித்த கோரிக்கையின் அடிப்படையில், மும்பை குர்லா பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றம் உத்தரவிட்டதன் பேரில், கடந்த 2024 ஏப்ரல் 3ஆம் தேதி சிந்துதுர்க் மாவட்டம் பாண்டூரில் உள்ள சன்விதா ஆசிரமத்தில் ஜுலேகா அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு தேவையான சிகிச்சை வழங்கப்பட்டு வந்த நிலையில், அவரது குடும்பத்தினரை கண்டறியும் முயற்சிகளும் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டன. இதற்காக ஜீவன் ஆனந்த் சன்ஸ்தா (Jeevan Aanand Sanstha) என்ற சமூக அமைப்பின் அறங்காவலர் கிசான் சவுரே மற்றும் அவரது குழுவினர் ஜுலேகாவிடம் தொடர்ந்து பேசிய நிலையில், அவரது சொந்த ஊர் மற்றும் குடும்பத்தினர் குறித்த தகவல்களை சேகரித்தனர்.

அவர் அளித்த தகவல்களின் அடிப்படையில், Google Search மற்றும் ChatGPT உள்ளிட்ட டிஜிட்டல் தொழில்நுட்ப கருவிகளை பயன்படுத்தி அவரது சொந்த ஊரை கண்டறிந்தனர். தொடர்ந்து, பர்பானி மாவட்ட நிர்பயா காவல் குழுவினரின் உதவியுடன் அவரது உறவினர்களை தொடர்புகொண்டனர்.

இதையடுத்து, இரண்டரை ஆண்டுகளுக்கு பிறகு ஜுலேகா தனது குடும்பத்தினருடன் தொலைபேசியில் பேசினார். இந்த தகவலை அறிந்த அவரது கணவர் முகீத் ஷேக், கடந்த நவம்பர் 9ஆம் தேதி சன்விதா ஆசிரமத்திற்கு சென்று மனைவியை மீண்டும் தனது வீட்டிற்கு அழைத்து சென்றார். Chatgpt போன்ற நவீன தொழில்நுட்பத்தின் மூலம் தன்னார்வலர்கள் பிரிந்த குடும்பத்தை சுமார் இரண்டரை ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சேர்த்து வைத்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.  
 

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

நான் ஊடகத் துறையில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறேன். தற்போது ஜீ நியூஸ் தமிழில் Content Writer ஆக வேலை பார்க்கும் எனக்கு விளையாட்டு, அரசியல் மற்றும் க்ரைம் சார்ந்த செய்திகளை எழுதுவதில் அதிக ஆர்வம் உண்டு.
Read More

ZEENEWS TRENDING STORIES