தடையை மீறி ஜந்தர் மந்தரில் போராட்டம்! சிஜேபி தலைவர்கள் கைது..5 நாட்கள் நீதிமன்ற காவல்
தேர்தல் தலைமை அதிகாரி ஞானேஷ் குமார் ராஜிநாமா செய்ய வேண்டும் என்று ஜந்தர் மந்தரில் தடையை மீறி போராட்டம் நடத்திய சிஜேபி தலைவர்கள் சௌரவ் மற்றும் ஆஷுதோஷ் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காக்ரோச் ஜனதா கட்சியின் (CJP) தேர்தல் தலைமை ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிரான போராட்டம் நாளுக்கு நாள் வலுப்பெற்று வருகிறது. இந்த கட்சியும், மாணவர் அமைப்பினர் பலரும் சேர்ந்து ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தியதை தொடர்ந்து, அந்த இடத்தை போராட்ட களங்களின் பட்டியலில் இருந்து மத்திய அரசு நீக்கியது. இந்த சமயத்தில், தடையை மீறி அவ்விடத்தில் போராட்டம் நடத்திய குற்றத்திற்காக சிஜேபி தலைவர்களான சௌரவ் தாஸ் மற்றும் ஆஷுதோஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அபிஜித் திப்கே காட்டம்:
சிஜேபி தலைவர்களன சௌரவ் தாஸ் மற்றும் ஆஷுதோஷ் ரங்கா ஆகிய இருவரும், ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்று கூறி ஜந்தர் மந்தரில் தடையை மீறி போராட்டம் நடத்தியதால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் பிணை நிபந்தனை மீறல் மற்றும் அரசு அதிகாரியின் கடமைக்கு இடையூறு விளைவித்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டனர். இவர்கள் இருவரையும் புதன்கிழமையான இன்று காலை 8 மணியளவில் டெல்லியில் உள்ள மந்திர் மார்க் எனும் இடத்தில் நீதிபதி முன்பு ஆஜர் படுத்தப்பட்டனர்.
சிஜேபி தலைவர்களின் இந்த கைது நடவடிக்கையை எதிர்த்து அக்கட்சியின் நிறுவனரும் தலைவருமான அபிஜித் திப்கே காட்டமான பதிவு ஒன்றை வெளியிட்டிருக்கிறார். இது குறித்த பதிவில் அவர், “ஆஷுவும் சௌரவும் 5 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் செய்த தவறு? ஜந்தர் மந்தரில் மூவர்ணக் கொடியை ஏற்றியதுதான். கொஞ்சம் தைரியத்தைக் காட்டுங்கள், நரேந்திரமோடி. எதிர்ப்புக் குரல்களை அடக்குவதில் நீங்கள் அவ்வளவு உறுதியாக இருந்தால், இந்த கோழைத்தனமான தந்திரங்களுக்குப் பின்னால் ஒளிந்துகொள்வதற்குப் பதிலாக, அதிகாரப்பூர்வமாக அவசரநிலையை (Emergency) அறிவிக்கும் தைரியம் உங்களுக்கு இருக்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
போலீசார் சொல்வது என்ன?
டெல்லி போலீசார் இது குறித்து பேசுகையில், சௌரவும், ஆஷுதோஷும் பாரதிய நாகரிக் சௌராக்ஷா சன்ஹிதா சட்டத்தை பிரிவு 163ன் கீழ் மீண்டும் ஒரு முறை மீறி இருப்பதாகவும், மீண்டும் மீண்டும் குற்றம் புரிந்தவர்கள் என்பதால், அவர்கள் தாங்கள் அளித்த பிணைப்பத்திரத்தின் நிபந்தனைகளை மீறியதாகக் கூறியிருக்கின்றனர். இந்த விதி மீறல்களைக் கருத்தில் கொண்டு, நீதிமன்றம் இருவரையும் நீதிமன்றக் காவலில் வைத்ததாக போலீசார் வட்டாரத்திலிருந்து தகவல் வெளியாகியுள்ளது.
போலீஸார் அராஜகம்?
ஞானேஷ் குமார் பதவி விலகக்கோரி, பல நாட்களாக டெல்லியில் போராட்டம் வலுப்பெற்று வருகிறது. சிஜேபி மற்றும் மாணவ அமைப்பினருடன் இணைந்து, இடதுசாரி தலைவர்களும் டெல்லியில் போராட்டம் நடத்தினர். அவர்களும், போலீசாரால் கைது செய்யப்பட்டனர். அது மட்டுமன்றி, போராட்டக்காரர்களுடன் சேர்ந்து பத்திரிகையாளர்கள் சிலரும் டெல்லி போலீசாரால் கைது செய்யப்பட்டது கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இது குறித்து சிபிஎம் தரப்பிலிருந்து மாநில செயலாளரான சண்முகம் சமீபத்தில் பேசியிருந்தார். அப்போது டெல்லி காவல்துறை வலுக்கட்டாயமாக கைது செய்வதாகவும் அராஜகத்தில் ஈடுபடுவதாகவும் தெரிவித்திருந்தார். அங்கு போராக்களத்தில் இருந்தவர்களும் அதையே தெரிவிக்கின்றனர். இதற்கு முந்தைய சம்பவமான நீட் தேர்வு முறைகேடுகளுக்கு எதிரான ஜந்தர் மந்தர் போராட்டத்தை எடுத்துக்கொண்டால், அப்போதும் போராட்டக்காரர்கள் மீது தடியடி நடத்தப்பட்டது. அப்போதும் டெல்லி போலீசாருக்கு கடும் கண்டனங்கள் எழுந்தன. அவர்கள் தங்களுடைய பெயர் பேட்ச் இல்லாமல் போராட்டக்காரர்களை குண்டுக்கட்டாக தூக்கி சிறைப்பிடித்ததும் காண முடிந்தது என்பது குறிப்பிடத்தக்கது.