CJP Protest: இன்று காக்ரோச் ஜனதா பார்ட்டி (CJP) அறிவித்திருக்கும் ‘லேஹ்ரா தோ திரங்கா’ (தேசியக் கொடியை ஏற்றுவோம்) பேரணியை முன்னிட்டு, புது தில்லி மற்றும் அதன் அருகிலுள்ள பகுதிகளில் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கன்னாட் பிளேஸில் உள்ள சென்ட்ரல் பார்க் மற்றும் ராஜீவ் சௌக் மெட்ரோ நிலையத்தில் புதிய சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
அசம்பாவிதங்களை தடுக்க 25,000-க்கும் மேற்பட்ட காவல்துறை மற்றும் துணை ராணுவப் படையினர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அத்துடன், பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதாவின் (BNSS) பிரிவு 163-ன் கீழ் தடை உத்தரவுகளும் அமல்படுத்தப்பட்டுள்ளன.
வாக்காளர் பட்டியலைச் சிறப்புத் தீவிர மறுஆய்வு (SIR) செய்ததில் முறைகேடுகள் நடந்ததாகக் குற்றம் சாட்டி, தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்று ‘காக்ரோச் ஜனதா பார்ட்டி’ (CJP) வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில், இந்த வாரத் தொடக்கத்தில் தங்கள் கட்சியின் தலைவர்களான சௌரவ் தாஸ் மற்றும் அசுதோஷ் ரன்கா ஆகியோர் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, மீண்டும் ஒரு போராட்டத்திற்கு அந்த அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.
ஜந்தர் மந்தர் பகுதி போராட்டங்களுக்கான இடமாக அங்கீகரிக்கப்படாத நிலையில், சென்ட்ரல் பார்க்கில் போராட்டம் நடத்தப்போவதாக இந்த அமைப்பு அறிவித்துள்ளது. இதில் ‘ஆல் இந்தியா ஸ்டூடண்ட்ஸ் அசோசியேஷன்’ (AISA) அமைப்பைச் சேர்ந்த நேஹா போரா மற்றும் ‘ஆம் ஆத்மி கட்சி’ (AAP) ஆகியவையும் பங்கேற்க உள்ளன.
இந்தப் புதிய போராட்டத்திற்கு முன்னதாக, சென்ட்ரல் பார்க்கில் மக்கள் கூட வேண்டாம் என்று தில்லி காவல்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது. இதற்கிடையில், CJP பேரணியைக் கருத்தில் கொண்டு, “நிர்வாகக் காரணங்களுக்காக” வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமை ஆகிய நாட்களில் சென்ட்ரல் பார்க் பொதுமக்களுக்காக மூடப்பட்டிருக்கும் என்று புது தில்லி மாநகராட்சி (NDMC) அறிவித்துள்ளது.
போராட்டத்திற்கு முன்னதாக, தில்லி காவல் ஆணையர் அனுராக் குமார் தலைமையில், புது தில்லி பகுதிக்கான இணை காவல் ஆணையர் மற்றும் துணை காவல் ஆணையர் (DCP) உள்ளிட்ட மூத்த காவல் அதிகாரிகள் பங்கேற்ற உயர்மட்டக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. மெட்ரோ சேவைகளை நிறுத்துவது தற்போதைய நிலையில் பரிசீலனையில் இல்லை என்றும், அது மிக இறுதிக்கட்ட நடவடிக்கையாக மட்டுமே வைக்கப்பட்டுள்ளதாகவும் மூத்த காவல் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
துணை காவல் ஆணையரும் (DCP) மக்கள் தொடர்பு அதிகாரியுமான (PRO) நேஹா யாதவ், வியாழக்கிழமை மாலை ஊடகங்களுக்கு அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில் அவர் கூறியதாவது:
“அமைதியைப் பேணவும், மக்களின் உயிரையும் பொது மற்றும் தனியார் சொத்துக்களையும் பாதுகாக்கவும், கன்னாட் பிளேஸ் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஏற்கனவே தடை உத்தரவுகள் அமலில் உள்ளன.”
இருப்பினும், ஒரு குறிப்பிட்ட குழுவினர் மட்டும் தேசியக் கொடியை ஏந்தி, தேசிய கீதத்தைப் பாடுவதற்குத் தகுந்த இடத்தில் காவல்துறை அனுமதி வழங்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்ட்ரல் பார்க்கில் இதுவரை சிசிடிவி (CCTV) கேமராக்கள் இல்லாத நிலையில், வியாழக்கிழமை அதன் நுழைவாயில்களில் கேமராக்கள் பொருத்தும் பணிகள் நடைபெற்று வந்தன. ராஜீவ் சௌக் மெட்ரோ நிலையத்தின் 1 மற்றும் 3-வது நுழைவாயில்களிலும் கூடுதல் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகின்றன.
வெள்ளிக்கிழமையன்று புது தில்லி முழுவதும் சுமார் 25,000 பாதுகாப்புப் பணியாளர்கள் நிறுத்தப்பட உள்ளனர். மேலும், பேரணிக்காக கூடுதலாக 5,000 பேர் வரவழைக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கன்னாட் பிளேஸின் (CP) முக்கிய வணிக மையங்களில் ஒன்றான பாலிகா பஜார் பகுதியில், போராட்டக்காரர்களைக் கைது செய்து அழைத்துச் செல்வதற்கான பேருந்துகள் வரிசையாக நிறுத்தப்பட்டிருந்தன. வியாழக்கிழமையன்று சன்சத் மார்க் மற்றும் டால்ஸ்டாய் சாலைக்கு இடைப்பட்ட பகுதியில் சுமார் 16 பேருந்துகள் நிறுத்தப்பட்டிருந்தன.
கடந்த வாரம் இதேபோன்ற போராட்டத்திற்கு சிஜேபி (CJP) அழைப்பு விடுத்தபோதும், கன்னாட் பிளேஸ் ஒரு கோட்டை போல மாற்றப்பட்டிருந்தது.
இதற்கிடையில், அரை நூற்றாண்டு பழமையான டெல்லியின் பிரபலமான மார்கெட்டான பாலிகா பஜாரில் உள்ள வணிகர்களுக்கு, இந்த பண்டிகைக் காலம் ஒரு மோசமான அனுபவமாக மாறியுள்ளது. கட்டுப்பாடுகள் காரணமாகக் கடைகளை மூட வேண்டி வருவதால், இது வணிகத்தைப் பெருமளவில் பாதித்துள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.
ஜூலை மாதம் நடைபெற்ற போராட்டங்களிலிருந்தே (நீட் தேர்வு வினாத்தாள் கசிவுக்கு எதிரான போராட்டம்) இன்னும் மீண்டு வராத நிலையில், அதற்குள் இப்போது அடுத்த போராட்டங்கள் தொடங்கிவிட்டதால், வணிகர்கள் மிகுந்த கோவத்தில் உள்ளனர். பண்டிகைக் காலமாக இருந்தாலும், இந்த மாதத்தின் தொடக்கத்திலேயே நான்கு நாட்கள் கடைகளை மூடி வைத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது வணிகர்களை பெரிய அளவில் பாதித்துள்ளது.
கன்னாட் பிளேஸில் உள்ள வணிகர் சங்கங்கள், பண்டிகைக் காலங்களில் ஏற்படக்கூடிய குழப்பங்கள் மற்றும் சட்டவிரோதமான கூட்டங்களிலிருந்து தங்களுக்குப் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்ததாகக் காவல்துறை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.