மத்திய அரசு ஊழியர்களுக்கு 3% டிஏ உயர்வு: மத்திய அமைச்சரவை ஒப்புதல், சம்பளம் எவ்வளவு உயரும்?
DA Hike: மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை (DA) 3 சதவீத புள்ளிகள் உயர்த்தவும், ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலை நிவாரணத்தை (DR) அதே அளவில் அதிகரிக்கவும் மத்திய அமைச்சரவை புதன்கிழமை ஒப்புதல் அளித்துள்ளது.
DA Hike: மத்திய அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!! மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை (DA) 3 சதவீதம் உயர்த்துவதற்கு அமைச்சரவை புதன்கிழமை ஒப்புதல் அளித்தது.
மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை (DA) 3 சதவீத புள்ளிகள் உயர்த்தவும், ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலை நிவாரணத்தை (DR) அதே அளவில் அதிகரிக்கவும் மத்திய அமைச்சரவை புதன்கிழமை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த முடிவின் மூலம் 1.16 கோடிக்கும் அதிகமானோர் பயனடைவார்கள் என்று மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.
டிஏ உயர்வு: முக்கிய அம்சங்கள்
- இந்த உயர்வு ஜூலை 1, 2026 முதல் அமலுக்கு வரும்.
- இதன்படி, அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணம் ஆகியவை அடிப்படை ஊதியம் மற்றும் ஓய்வூதியத்தில் தலா 60 சதவீதத்திலிருந்து 63 சதவீதமாக உயரும்.
- அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் வழங்கிய புள்ளிவிவரங்களின்படி, இந்த உயர்வால் அரசுக்கு ஆண்டுக்கு மொத்தம் ₹10,016 கோடி கூடுதல் செலவு ஏற்படும்.
- இந்த திருத்தமானது, 7-வது மத்திய ஊதியக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் அமைந்த சூத்திரத்தைப் பின்பற்றி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அகவிலைப்படி அதிகரிப்பு
மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் பணவீக்கத்தைச் சமாளிக்க உதவும் வகையில், அரசு ஆண்டுக்கு இருமுறை, பொதுவாக ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் அகவிலைப்படி (Dearness Allowance) மற்றும் அகவிலை நிவாரணத்தை மாற்றியமைக்கிறது.
அகவிலைப்படி என்றால் என்ன?
அகவிலைப்படி என்பது பணியில் உள்ள ஊழியர்களுக்கு அடிப்படை ஊதியத்தின் சதவீதமாக வழங்கப்படுகிறது; ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்படும் அதே சலுகை அகவிலை நிவாரணம் என்று அழைக்கப்படுகிறது. இவை இரண்டும் விலைவாசி உயர்வால் ஏற்படும் பாதிப்புகளை ஈடுகட்ட வழங்கப்படுகின்றன.
சம்பள உயர்வு எவ்வளவு இருக்கும்?
மத்திய அரசு 3% டிஏ உயர்வுக்கு (DA Hike) ஒப்புதல் அளித்ததை அடுத்து மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் கணிசமாக அதிகரிக்கவுள்ளது. இதை சில உதாரணங்களின் மூலம் புரிந்துகொள்ளலாம்.
அடிப்படை ஊதியம் ₹18,000 முதல் ₹50,000 வரை உள்ள ஊழியர்களுக்கு, 3% அகவிலைப்படி உயர்வால் மாதாந்திர ஊதியத்தில் எவ்வளவு கூடுதல் தொகை கிடைக்கும் என்பதை இங்கே காணலாம்.
| அடிப்படை ஊதியம் | தற்போதைய அகவிலைப்படி (60%) | 63% அகவிலைப்படி | மாதாந்திர ஊதிய உயர்வு |
| ரூ.18,000 | ரூ.10,800 | ரூ.11,340 | ரூ.540 |
| ரூ.25,000 | ரூ.15,000 | ரூ.15,750 | ரூ.750 |
| ரூ.30,000 | ரூ.18,000 | ரூ.18,900 | ரூ.900 |
| ரூ.50,000 | ரூ.30,000 | ரூ.31,500 | ரூ.1,500 |
| 60,000 | 36,000 | 37,800 | 1,800 |
இதற்கு முந்தைய திருத்தம் ஏப்ரல் 2026-ல் மேற்கொள்ளப்பட்டது. அப்போது அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணம் தலா 2 சதவீத புள்ளிகள் உயர்த்தப்பட்டு, அடிப்படை ஊதியம் மற்றும் ஓய்வூதியத்தில் 60 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டது.
டிஏ அரியர் தொகை
அகவிலைப்படி அதிகரிப்புக்கு அரசின் ஒப்புதல் கிடைத்ததைத் தொடர்ந்து, ஜூலை முதல் அக்டோபர் வரையிலான காலத்திற்கான நிலுவைத் தொகையும், அதாவது டிஏ அரியர் தொகையும் (DA Arrears) மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு கிடைக்கும். இதன் மூலம் நவம்பர் மாத ஊதியத்தில் ஊழியர்கள் மிகப்பெரிய ஏற்றத்தை காண்பார்கள்.