DTEA School News: டெல்லி தமிழ் கல்விக் கழகத்தின் (DTEA) கீழ் செயல்படும் பள்ளிகளில் பணியமர்த்தப்பட்ட 100 ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய அரசு நிதியுதவி தொடர்பாக டெல்லி உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு பிறப்பித்துள்ளது. ஒட்டுமொத்தமாக நிதியுதவியை மறுத்த கல்வித்துறையின் உத்தரவை ரத்து செய்த நீதிமன்றம், ஒவ்வொரு ஊழியரின் நியமனத்தையும் தனித்தனியாக ஆய்வு செய்து 12 வாரங்களுக்குள் முடிவெடுக்க உத்தரவிட்டுள்ளது. அதே நேரத்தில், ஏற்கெனவே பணியாற்றிய காலத்திற்கான சம்பளத்தை கல்வி நிறுவனமே வழங்க வேண்டிய பொறுப்பிலிருந்து தப்பிக்க முடியாது என்றும் நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.
டெல்லி தமிழ் கல்விக் கழகம் (Delhi Tamil Education Association - DTEA) தலைநகர் டெல்லியில் ஏழு அரசு நிதியுதவி பெறும் சிறுபான்மையினர் பள்ளிகளை நடத்தி வருகிறது. இந்தப் பள்ளிகளில் காலியாக இருந்த 107 பணியிடங்களுக்கு 2024 ஜூன் மாதம் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியிடங்கள் என மொத்தம் 100 பேர் நியமிக்கப்பட்டனர்.
ஆனால் இந்த நியமனங்களுக்கு அரசு நிதியுதவி வழங்குவது தொடர்பாக டெல்லி கல்வி இயக்குநரகம் (Directorate of Education) பல்வேறு ஆட்சேபனைகளை எழுப்பியது. கல்வித்தகுதி, வயது வரம்பு, முன் அனுபவம், அங்கீகரிக்கப்பட்ட காலிப்பணியிடங்கள், தேர்வு நடைமுறை உள்ளிட்ட பல்வேறு காரணங்களைக் குறிப்பிட்டு 100 பேருக்கும் நிதியுதவி வழங்க மறுத்தது.
இதனால் பணியில் சேர்ந்தும் சம்பளம் கிடைக்காமல் தவித்து வந்த ஊழியர்கள் நீதிமன்றத்தை நாடினர். டெல்லி தமிழ் கல்விக் கழகமும் கல்வித்துறையின் முடிவை எதிர்த்து வழக்குத் தொடர்ந்தது.
இந்த வழக்குகளை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி சஞ்சீவ் நருலா, 2026 நவம்பர் 17-ம் தேதி முக்கிய தீர்ப்பை வழங்கினார். இதில் 2025 நவம்பர் 4-ம் தேதி கல்வித்துறை பிறப்பித்த ஒட்டுமொத்த நிதியுதவி மறுப்பு உத்தரவை ரத்து செய்தார்.
ஒரு சில ஊழியர்களின் நியமனங்களில் குறைபாடுகள் இருப்பதாகக் கூறி, 100 பேருக்குமான அரசு நிதியுதவியையும் ஒட்டுமொத்தமாக மறுக்க முடியாது என்று நீதிமன்றம் தெரிவித்தது. ஒவ்வொரு ஊழியரின் கல்வித்தகுதி, நியமன நடைமுறை மற்றும் பணியிட விவரங்களைத் தனித்தனியாக ஆய்வு செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டது.
மேலும் சம்பந்தப்பட்ட ஊழியர்கள் தங்கள் தரப்பு விளக்கத்தை அளிக்க உரிய வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். குறிப்பிட்ட நபரின் நியமனத்தில் ஆட்சேபனை இருந்தால், அதற்கான காரணங்களையும் தனித்தனியாக விளக்க வேண்டும் என நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
இந்த வழக்கில் ஆசிரியர்களின் கல்வித்தகுதி தொடர்பான விவகாரத்திலும் நீதிமன்றம் முக்கிய விளக்கத்தை அளித்துள்ளது.
அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் உதவி ஆசிரியர் (Assistant Teacher) பணிக்கு 1989-ம் ஆண்டு ஆட்சேர்ப்பு விதிகளின்படி நிர்ணயிக்கப்பட்ட கல்வித்தகுதிகள் பொருந்தும் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
அதன்படி, B.Ed. பட்டம் மட்டும் பெற்றிருப்பது உதவி ஆசிரியர் பணிக்கான அடிப்படைத் தகுதியை பூர்த்தி செய்யாது. அதற்குப் பதிலாக விதிகளில் குறிப்பிடப்பட்டுள்ள JBT/BTC போன்ற ஆசிரியர் பயிற்சித் தகுதிகள் அவசியம். B.Ed. உயர்ந்த ஆசிரியர் பயிற்சிப் படிப்பு என்பதற்காக மட்டும் அதனை மாற்றுத் தகுதியாகக் கருத முடியாது என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.
DTEA தரப்பில் முன்வைக்கப்பட்ட 2022-ம் ஆண்டு அறிவிப்பு, டெல்லி கல்வி இயக்குநரகத்தின் சொந்தப் பணியிடங்களுக்கானது. தனியார் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளுக்கு அந்த விதியைப் பொருத்த முடியாது என்றும் தீர்ப்பில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
அரசியலமைப்புச் சட்டத்தின் 30(1) பிரிவின்படி, சிறுபான்மையினர் கல்வி நிறுவனங்களுக்கு தங்களுக்கான கல்வி நிறுவனங்களை நிர்வகிக்கவும், பணியாளர்களைத் தேர்வு செய்யவும் உரிமை உள்ளது.
ஆனால் இந்த நிர்வாக உரிமையும் அரசிடமிருந்து நிதியுதவி பெறுவதற்கான தகுதியும் வெவ்வேறானவை என்று நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.
அதாவது, தகுதியான விண்ணப்பதாரர்களில் யாரைத் தேர்வு செய்ய வேண்டும் என்பதை பள்ளி நிர்வாகமே முடிவு செய்யலாம். அதேநேரத்தில் அரசு நிதியுதவி வழங்குவதற்கு சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள கல்வித்தகுதி மற்றும் பிற நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதா என்பதை கல்வித்துறை ஆய்வு செய்யலாம்.
மேலும், தேர்வுக்குழுவில் துறை சார்பில் பிரதிநிதிகளை நியமிக்கக் கோரி டி.டி.இ.ஏ. உரிய நடவடிக்கை எடுத்தும், கல்வித்துறை பிரதிநிதிகளை நியமிக்கத் தவறியிருந்தால், அந்த ஒரு காரணத்திற்காக மட்டும் தேர்வு நடைமுறையைச் செல்லாது என அறிவிக்க முடியாது என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மாற்றுத்திறனாளிகளுக்கான இடஒதுக்கீடு தொடர்பான சட்ட விதிகளிலிருந்தும் சிறுபான்மையினர் பள்ளிகளுக்கு தானாகவே விலக்கு கிடையாது. இதுதொடர்பாகவும் ஒவ்வொரு பணியிடத்தின் விவரங்களையும் ஆய்வு செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்தத் தீர்ப்பில் ஊழியர்களுக்கு முக்கியமான நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. அரசு நிதியுதவி கிடைக்கவில்லை என்பதற்காக, ஏற்கெனவே பணியாற்றிய ஊழியர்களுக்கான சம்பளப் பொறுப்பை பள்ளி நிர்வாகம் தவிர்க்க முடியாது என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
அதாவது, அரசு நிதியுதவி பெறுவதற்கான தகுதி இல்லாத நியமனங்களுக்கு அரசே சம்பளம் வழங்க வேண்டும் என்று கட்டாயப்படுத்த முடியாது. ஆனால் ஊழியர்களின் சேவையைப் பயன்படுத்திக்கொண்ட கல்வி நிறுவனம், அவர்கள் செய்த பணிக்கான ஊதியத்தை வழங்க வேண்டிய சட்டப்பூர்வப் பொறுப்பிலிருந்து விலக முடியாது.
பணிக்காலத்தில் ஊழியர்கள் ராஜினாமா செய்திருந்தாலும், ஏற்கெனவே சம்பாதித்த ஊதியத்தை இழக்க முடியாது என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.
இருப்பினும், அனைத்து ஊழியர்களுக்கும் ஒட்டுமொத்தமாக நிலுவைச் சம்பளம் அல்லது வட்டி வழங்க நீதிமன்றம் உத்தரவிடவில்லை. ஒவ்வொருவரின் பணிக்காலம், சம்பள விவரம் மற்றும் உரிய ஆவணங்களை ஆய்வு செய்த பின்னரே இதுகுறித்து முடிவெடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளது.
இந்த விவகாரத்தை விரைந்து முடிப்பதற்காக டெல்லி உயர் நீதிமன்றம் தெளிவான காலக்கெடுவையும் நிர்ணயித்துள்ளது.
நீதிமன்றத் தீர்ப்பு வெளியான ஒரு வாரத்திற்குள், ஏற்கெனவே இந்த விவகாரத்தில் முடிவெடுத்த அதிகாரியுடன் தொடர்பில்லாத கூடுதல் இயக்குநர் (Additional Director) அந்தஸ்துக்குக் குறையாத அதிகாரி ஒருவரை கல்வித்துறை நியமிக்க வேண்டும்.
DTEA நிர்வாகம் இரண்டு வாரங்களுக்குள் 100 ஊழியர்களின் நியமனம், கல்வித்தகுதி, பணியிட விவரங்கள் உள்ளிட்ட ஆவணங்களைத் தனித்தனியாகத் தொகுத்து வழங்க வேண்டும்.
அதன்பிறகு, ஒவ்வொரு ஊழியரின் ஆவணங்களையும் ஆய்வு செய்து, ஏதேனும் குறைபாடுகள் இருந்தால் அதற்கான விளக்கத்தை அளிக்க வாய்ப்பு வழங்க வேண்டும். தேவைப்பட்டால் நேரடி விசாரணையும் நடத்தப்பட வேண்டும்.
இந்த முழு ஆய்வையும் தீர்ப்பு வெளியான நாளிலிருந்து 12 வாரங்களுக்குள் முடித்து, ஒவ்வொரு ஊழியருக்கும் தனித்தனியாகக் காரணங்களுடன் கூடிய உத்தரவைப் பிறப்பிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆய்வுக்குப் பிறகு அரசு நிதியுதவி பெறுவதற்குத் தகுதியானவர்கள் எனக் கண்டறியப்படும் ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய சம்பளம், படிகள் மற்றும் நிலுவைத் தொகைகளை கல்வித்துறை கணக்கிட வேண்டும்.
தனிப்பட்ட முடிவு வெளியான நான்கு வாரங்களுக்குள், அரசு வழங்க வேண்டிய 95 சதவீத நிதிப் பங்கை விடுவிக்க வேண்டும். மீதமுள்ள பங்கை DTEA நிர்வாகம் செலுத்த வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தொடர்ந்து பணியில் இருக்கும் தகுதியான ஊழியர்களுக்கு எதிர்காலத்தில் சம்பளம் முறையாக வழங்கப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஒருவேளை குறிப்பிட்ட ஊழியருக்கு அரசு நிதியுதவி மறுக்கப்பட்டாலும், அதனால் அவரது வேலை தானாகவே முடிவுக்கு வந்துவிடாது. ஏற்கெனவே பணியாற்றியதற்கான ஊதியத்தைப் பெறுவதற்கான உரிமையும் பறிபோகாது. அத்தகைய ஊழியர்களுக்கு நான்கு வாரங்களுக்குள் பணிக்காலம், வழங்கப்பட்ட தொகை மற்றும் நிலுவையில் உள்ள சம்பளம் குறித்த அங்கீகரிக்கப்பட்ட அறிக்கையை DTEA வழங்க வேண்டும். மறுக்க முடியாத நிலுவைத் தொகைகளையும் செலுத்த வேண்டும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
டெல்லி தமிழ் கல்விக் கழகம் மற்றும் ஊழியர்கள் தாக்கல் செய்த இரண்டு வழக்குகளையும் பகுதியளவில் ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், அரசு நிதியுதவியை ஒட்டுமொத்தமாக மறுத்த உத்தரவை ரத்து செய்துள்ளது.
இருப்பினும், 100 பேருக்கும் நிபந்தனையின்றி அரசு சம்பளம் வழங்க வேண்டும் என்று தீர்ப்பளிக்கவில்லை. ஒவ்வொரு ஊழியரின் நியமனமும் விதிகளுக்கு உட்பட்டதா என்பதை ஆய்வு செய்து, தகுதியானவர்களுக்கு நிதியுதவி வழங்க வேண்டும் என்பதே இந்தத் தீர்ப்பின் முக்கிய அம்சமாகும்.
இதனால் டெல்லி தமிழ் கல்விக் கழகத்தின் கீழ் பணியாற்றும் 100 ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களின் சம்பள விவகாரத்தில் அடுத்த 12 வாரங்கள் முக்கியமானதாக இருக்கும். தனிப்பட்ட ஆய்வின் முடிவைப் பொறுத்தே யாருக்கு அரசு நிதியுதவி கிடைக்கும், யாருக்கான சம்பளப் பொறுப்பை பள்ளி நிர்வாகம் ஏற்க வேண்டும் என்பது இறுதி செய்யப்படும்.
இந்தத் தீர்ப்பு குறித்து DTEA பள்ளியின் செயலாளரிடம் (ராஜு ராமசாமி) தொலைபேசி வாயிலாகக் கேட்டபோது, "இது நீண்டகால சட்டப் போராட்டத்திற்குக் கிடைத்த வெற்றியாகப் பார்ப்பதாகத் தெரிவித்தார். மேலும், DTEA நிர்வாகத்தின் மீது அவதூறு மற்றும் பொய்யான குற்றச்சாட்டுகளைப் பரப்பியவர்களுக்கு நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு தகுந்த பதிலடி கொடுத்துள்ளதாகவும் அவர் கூறினார்.
அதேநேரத்தில், உதவி ஆசிரியர் (Assistant Teacher) பணிக்கு B.Ed. தகுதி மட்டும் போதாது என டெல்லி உயர் நீதிமன்றம் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ள விவகாரம் குறித்தும் அவர் கருத்து தெரிவித்தார். இந்த அம்சத்தை எதிர்த்து மேல்முறையீடு செய்வது குறித்து நிர்வாகம் ஆலோசித்து வருவதாகவும் DTEA பள்ளியின் செயலாளர் ராஜு ராமசாமி தெரிவித்தார்.
DTEA ஊழியர்களின் சம்பள வழக்கு விவரங்கள்