SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

‘அசுத்தம்..அழுக்கு’ கரப்பான் பூச்சி உருவ பொம்மை எரிக்க முடிவு! பாஜக எம்.எல்.ஏ அறிவிப்பு..

தசரா விழா வட இந்தியாவில் விமரிசையாக நடைபெற இருப்பதையடுத்து, அந்த விழாவில் கரப்பான்பூச்சி பொம்மையை எரிக்க ஸ்ரீ கேசவ் ராம்லீலா குழு முடிவெடுத்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இது குறித்த முழு தகவலை இங்கு தெரிந்து கொள்வோம்.

Written By Yuvashree M
Published: Oct 16, 2026, 12:05 PM IST | Updated: Oct 16, 2026, 12:17 PM IST
Join

கடந்த சில வாரங்களாகவே, தேர்தல் தலைமை ஆணையர் ஞானேஷ்குமாரின் பதவி விலகளை வலியுறுத்தி, காக்ரோச் ஜனதா கட்சி, மாணவர் அமைப்பினர், காங்கிரஸ் கட்சி உள்ளிட்டோர் மும்பை-டெல்லி உள்ளிட்ட இடங்களில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இவர்கள் போராட்டம் நடத்தி வந்த ஜந்தர் மந்தர் களத்தை, அதிகாரப்பூர்வ போராட்டக்களங்களின் பட்டியலில் இருந்து மத்திய அரசு நீக்கியிருக்கிறது. இதைத்தொடர்ந்து, ராம்லீலா மைதானம் உள்ளிட்ட சில தளங்களை போராட்ட களங்களாக அறிவித்திருக்கிறது. இந்த சமயத்தில், டெல்லியில் தசரா விழாவும் நடைபெற உள்ளது. அதில், 30 அடி உயரமுள்ள கரப்பான்பூச்சியின் உருவ பொம்மையை எரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

கரப்பான்பூச்சி உருவ பொம்மையை எரிக்க திட்டம்!

டெல்லியில் உள்ள பிதம்பூரா பகுதியில், ‘ஸ்ரீ கேசவ் ராம் லீலா கமிட்டி’ தசராவை முன்னிட்டு ராம்லீலா விழாவை நடத்த ஏற்பாடு செய்து வருகிறது. இந்த குழுமத்திற்கு பாஜக கட்சியின் சட்டமன்ற உறுப்பினரான அசோக் கோயல் தலைவராக இருக்கிறார்.

இந்த ஆண்டு தசரா விழா நடைபெற இருப்பதையொட்டி, ‘தூய்மை இந்தியா, தூய்மை டெல்லி’ போன்ற பிரச்சாரங்களை மேற்கொள்ளும் வகையில், ‘அசுத்தம் மற்றும் அழுக்கை’ குறிக்கும் கரப்பான்பூச்சியின் உருவ பொம்மையை எரிக்க இருப்பதாக இந்த கமிட்டியானது தெரிவித்திருக்கிறது.

இக்குழுவின் தலைவர் அசோக் கோயல், இது குறித்து பேசினார். அப்போது, இது அரசியல் உள்நோக்கம் கொண்டதல்ல என தெரிவித்தார். மேலும், கரப்பான்பூச்சி உருவ பொம்மையை எரிப்பது என்பது தீமைக்கு எதிரான நன்மையின் வெற்றி மற்றும் தூய்மையை வலியுறுத்துவதகாக இந்த ஏற்பாடு செய்யப்படுவதாக கூறினார்.

வழக்கமாக ராம்லீலா விழாவில் ராவணன் படையில் இருக்கும் அசுரர்களான கும்பகர்ணன், மேகநாதன் உள்ளிட்டோரின் உருவ பொம்மைதான் எரிக்கப்படும். ஆனால், இந்த வருடம் கரப்பான்பூச்சியின் உருவ பொம்மையும் சேர்ந்து எரிக்கப்படும் என அவர் தெரிவித்திருக்கிறார்.

மேலும் படிக்க | டெல்லியில் மீண்டும் CJP போராட்டம்: தயார் நிலையில் 25,000 காவலர்கள், பலத்த பாதுகாப்பு நடவடிக்கைகள்

இந்த விழாவில், ராவணனின் உருவ பொம்மை 40 அடி உயரத்துக்கும், கும்பகர்ணனின் உருவ பொம்மை 30 அடி உயரத்துக்கும், மேக்நாத்தின் உருவ பொம்மை 30 அடி உயரத்துக்கும் அமைக்கப்படுமாம். கூடவே, கரப்பான்பூச்சியின் உருவ பொம்மை 30 அடி உயரத்திற்கு அமைக்கப்படுமாம்.

எப்படி அரசியல் அல்லாமல் போகும்?

காக்ரோச் ஜனதா கட்சியின் எழுச்சி ஆரம்பித்ததே சில மாதங்களுக்கு முன்பிருந்துதான். அந்த கட்சியை சேர்ந்தவர்கள், இப்போது வரை தங்களுக்கும் பிற அரசியல் கட்சிகளுக்கும் தொடர்பில்லை என்று கூறி வருகின்றனர். தொடர்ந்து பாஜக அரசாங்கத்தின் மீதிருக்கும் குற்றச்சாட்டுகளை சுட்டிக்காட்டி அரசை கேள்வி கேட்பவர்களாகவும் இருக்கின்றனர். நீட் தேர்வுக்கு எதிராக நடந்த இவர்களின் போராட்டம், மத்திய கல்வி அமைச்சராக இருந்த தர்மேந்திர பிரதானின் பதவி விலகில் முடிந்தது. அதே முயற்சியைத்தான், தற்போது SIR விஷயத்தில் தணித்து செயல்பட்டதாக குற்றம் சாட்டப்படும் ஞானேஷ் குமாருக்கு எதிரான போராட்டத்திலும் மேற்கொண்டு வருகின்றனர்.

காக்ரோச் ஜனதா கட்சி, அரசியல் நோக்கத்தோடுதான் செயல்படுவதாகவும், நாட்டின் அமைதியை குலைக்க சில அமைப்பினர் இவர்களுக்கு நிதி வழங்குவதாகவும் பாஜக கட்சி மற்றும் அதன் ஆதரவாளர்கள் ஆதாரமற்ற குற்றச்சாட்டை முன்வைத்து வருகின்றனர். ஒரு கட்டத்தில், இந்த போராட்டத்தில் பங்கேற்பவர்களை “நாட்டிற்கு எதிரானவர்கள்” என்று கூட கூறி வருகின்றனர். இவர்களுக்கு ஆதரவாக டெல்லி போலீஸாரும் செயல்பட்டு வருவதாக போராட்டக்காரர்கள் தெரிவிக்கின்றனர். இப்படி பல அரசியல் சிக்கல்கள் இந்த போராட்டம் மற்றும் போராட்டக்காரர்களை சுற்றி இருக்கும் போது, தசராவில் கரப்பான்பூச்சியின் உருவ பொம்மையை எரிப்பதை, எப்படி அரசியல் இல்லை என ஏற்றுக்கொள்ள முடியும்? என சிஜேபியின் ஆதரவாளர்கள் கேட்கின்றனர். இந்த விஷயத்தில் அடுத்து என்ன ஆகும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

மேலும் படிக்க | DA Hike: அக்டோபர் 21 அகவிலைப்படி உயர்வு அறிவிப்பா? அரசு ஊழியர்களின் டிஏ, சம்பளம் எவ்வளவு உயரும்?

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

யுவஸ்ரீ, 3 ஆண்டுகளுக்கும் மேல் டிஜிட்டல் மீடியாவில் பணியாற்றி வருகிறேன். சினிமா, வைரல், குற்றம் மற்றும் உள்ளூர் சம்பந்தப்பட்ட செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உள்ளது. கதை மற்றும் கவிதைகளை எழுதுவதும், அவற்றை சில மேடைகளில் பகிர்வதும் எனக்கு பிடித்த விஷயங்கள்.

ZEENEWS TRENDING STORIES