Parliament Special Session: நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் அடுத்த வாரம் கூட இருக்கிறது. மக்களவை வரும் நவம்பர் 30ஆம் தேதி முதல் நவம்பர் 3ஆம் தேதிவரையும், மாநிலங்களை டிசம்பர் 2, 3 ஆகிய தேதிகளிலும் கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தொகுதி மறுவரையறை சட்டத்திருத்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இதைத் தொடர்ந்து, கடந்த ஏப்ரல் மாதம் மக்களவையில் தோற்கடிக்கப்பட்ட தொகுதி மறுவரையறை சட்டத்திருத்த மசோதா இந்த சிறப்பு கூட்டத்தொடரில் மீண்டும் தாக்கல் செய்யப்படும் என தெரிகிறது. இந்த முறை எப்படியாவது இந்த மசோதாவை நிறைவேற்றிவிட வேண்டும் என மத்திய பாஜக தலைமையிலான என்டிஏ அரசு முனைப்பு காட்டி வருகிறது.
அந்த வகையில், இந்தியா கூட்டணியில் இருந்து பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு மாறியிருக்கும் சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி, தொகுதி மறுவரையறை சட்டத்திருத்த மசோதாவை ஆதரிக்க முடிவெடுத்துள்ளது. மக்களவையில் 8 உறுப்பினர்களை கொண்டிருக்கும் இக்கட்சி கடந்த முறை மக்களவையில் இந்த மசோதாவுக்கு எதிராக வாக்களித்த இந்தியா கூட்டணியில் இடம்பெற்றிருந்தது.
அதேநேரத்தில், இந்த மசோதாவை ஆதரிப்பதற்கு ஈடாக, மத்தியிலும், மாநில அளவிலும் அதிகாரப் பகிர்வுக்காக சரத் பவார் கடுமை பேரத்தை நடத்தி வருவதாக அக்கட்சியின் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
குறிப்பாக, சரத் பவார் தேசியவாத கட்சியின் செயல் தலைவரும், மக்களவை உறுப்பினருமான சுப்ரியா சுலேவுக்கு மத்திய அமைச்சரவையில் இடம் கேட்டு வலியுறுத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
சரத் பவாரின் மகளான சுப்ரியா சுலே கடந்த சில மாதங்களாக தேர்தல் முறைகேடு சார்ந்த இந்தியா கூட்டணியின் போராட்டத்தில் முன்னின்று போராடியிருந்தார். ஆனால் கடந்த சில நாட்களாக இவர் தொகுதி மறுசீரமைப்புக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருவதும் கவனிக்கத்தக்கது.
மத்திய அமைச்சரவையில் மட்டுமின்றி மகாராஷ்டிராவில் பாஜக தலைமையிலான கூட்டணி அரசில் இரண்டு அமைச்சர் பொறுப்புகளை பெற சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி முயற்சித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஏற்கெனவே பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணியில் அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியும் இடம்பெற்றிருப்பது கவனிக்கத்தக்கது.
குறிப்பாக சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் ஜெயந்த் பாட்டீல் மகாராஷ்டிராவின் நிதி அமைச்சர் பொறுப்பை பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. மற்றொரு அமைச்சர் பொறுப்பை அக்கட்சியின் மூத்த தலைவர் ஜிதேந்திர அவாத் பெறுவார் என்றும் கூறப்படுகிறது. இன்னும் சில மூத்த தலைவர்களுக்கு பதவி கொடுக்க வேண்டும் என்பதற்காக, அக்கட்சியின் பாஜகவிடம் இரண்டு இணை அமைச்சர்கள் (MoS) பொறுப்பையும் கேட்பதாக கூறப்படுகிறது.
அதேநேரத்தில், சுப்ரியா சுலேவை மகாராஷ்டிராவின் முதலமைச்சராக்க NCP(SP) கட்சி கோரிக்கை வைத்ததாக வெளியான தகவலை சுப்ரியா சுலேவே மறுத்தார். அக்கட்சிக்கு வெறும் 10 எம்எல்ஏக்கள் மட்டும் இருக்கும் சூழலில், இந்த தகவல்கள் அடிப்படை ஆதாரமற்றவை என சாடினார்.
தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு ஆதரவளிப்பதற்கு முன் அதிகாரப் பகிர்வு ஒப்பந்தத்தை உறுதி செய்ய வேண்டும் என சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியில் ஒரு தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர்.
கட்சியில் பிளவை தவிர்க்கவே தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு ஆதரவளிப்பது அவசியமாகிறது என சரத் பவார், இந்தியா கூட்டணி தலைவர்களிடம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. சரத் பவார் உடல்நலப் பிரச்னைகளுடன் போராடி வருகிறார்.
சரத் பவாரின் உடல்நலக்குறைவைக் காரணம் காட்டி, நாடாளுமன்றக் கூட்டத்தொடருக்காக வரும் திங்கட்கிழமை (நவ.30) நேரடியாக டெல்லிக்குச் செல்ல இருப்பதாக சுப்ரியா சுலே ஏற்கெனவே தெரிவித்திருந்தார்.
இதன் காரணமாக இன்று (நவ. 28) டெல்லியில் நடைபெறும் இந்தியா கூட்டணியின் கூட்டத்தில் அவர் பங்கேற்க மாட்டார் என தெரிகிறது. சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் யாரும் இந்த கூட்டத்தில் கலந்துகொள்ள மாட்டார்கள் என தெரியவந்துள்ளது.