தேர்தல் ஆணையத்திற்கு எதிராக வெடிக்கும் புரட்சி! நவம்பர் 26-ல் டெல்லியில் மாபெரும் போராட்டம்
Delhi Protest on November 26: டெல்லி பிரஸ் கிளப்பில் நடைபெற்ற முக்கிய செய்தியாளர் சந்திப்பில், தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் மற்றும் ஜனநாயகத்திற்கு எதிரான நடவடிக்கைகள் மீது கடும் கண்டனங்கள் எழுப்பப்பட்டுள்ளன. பிரபல நடிகர் பிரகாஷ் ராஜ், சமூக செயற்பாட்டாளர் அஞ்சலி பரத்வாஜ் மற்றும் பல்வேறு மாணவர் அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டு அடுத்த கட்ட போராட்டங்களை அறிவித்துள்ளனர்.
டெல்லி பிரஸ் கிளப்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தப் பணிகளுக்கு (SIR) எதிராக சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் மாணவர் அமைப்புகள் கடும் எதிர்ப்பைப் பதிவு செய்தன. உச்ச நீதிமன்றமே ஃபார்ம் 6 நடைமுறைகளில் உள்ள தவறுகளைச் சுட்டிக்காட்டியுள்ள நிலையில், எஸ்ஐஆர் நடைமுறையை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்று அஞ்சலி பரத்வாஜ் வலியுறுத்தினார். மேலும் ஜந்தர் மந்தர் போன்ற பகுதிகளில் போராட அனுமதி மறுப்பதன் மூலம் ஜனநாயக உரிமைகள் பறிக்கப்படுவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
இதில் பங்கேற்ற நடிகர் பிரகாஷ் ராஜ், தலைமைத் தேர்தல் ஆணையர் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்ததோடு, ஜனநாயகத்தைக் காக்க நவம்பர் 26 அரசியலமைப்பு தினத்தன்று டெல்லி உட்பட நாடு முழுவதும் மக்கள் போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் என அறிவித்தார். அதன் விவரங்களை குறித்து பார்ப்போம்.
நவம்பர் 26 அரசியலமைப்பு தினத்தன்று நாடு முழுவதும் மாபெரும் போராட்டம்
தேர்தல் ஆணையம் தொடர்ந்து தனது நிலைப்பாடுகளில் மாற்றங்களைச் செய்து வருவதாகவும், ஆனால் எஸ்ஐஆர் ?(SIR) நடைமுறையை மட்டும் முழுமையாக ரத்து செய்ய தயங்குவதாகவும் செயற்பாட்டாளர்கள் குற்றம்சாட்டினர். இதன் ஒரு பகுதியாக, அரசியலமைப்பு நாளான நவம்பர் 26 அன்று டெல்லி உட்பட நாடு முழுவதும் மாபெரும் போராட்டங்கள் வெடிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 10 மற்றும் அதற்குப் பிறகும் இந்த மக்கள் இயக்கங்கள் தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜந்தர் மந்தரில் போராட்டம் செய்ய மறுப்பு
தலைநகரில் ஜனநாயக முறையில் போராடுவதற்கான அடிப்படை உரிமைகள் தொடர்ந்து முடக்கப்படுவதாக அஞ்சலி பரத்வாஜ் விமர்சித்தார். ஜந்தர் மந்தர் போன்ற பகுதிகள் முடக்கப்பட்டு, நகரின் மையத்திலிருந்து பல கிலோமீட்டர் தொலைவில் உள்ள புராடி போன்ற இடங்களுக்குப் போராட்டங்களை ஒதுக்கீடு செய்வது ஜனநாயகத்திற்கு விரோதமான செயல் என்றார்.
மேலும் அமைதியான முறையில் குரல் எழுப்பும் செயற்பாட்டாளர்கள் மீது காவல் துறையின் மூலம் பிணைப் பத்திரங்கள் பெறப்படுவதும், சட்டச் சிக்கல்களில் மாட்டுவதும் அரசின் அச்சத்தையே காட்டுவதாக சுட்டிக்காட்டப்பட்டது.
தேர்தல் ஆணைய நடைமுறை குளறுபடிகளை சுட்டிக்காட்டிய உச்ச நீதிமன்றம்
தேர்தல் ஆணையத்தின் ஃபார்ம் 6 உள்ளிட்ட நடைமுறைகளில் உள்ள குளறுபடிகளை, இப்போது உச்ச நீதிமன்றமே வெளிப்படையாக சுட்டிக்காட்டியுள்ளது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் கோடிக்கணக்கான வாக்காளர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ள விவகாரத்தில் கடுமையான கேள்விகள் எழுந்துள்ளன.
கோடிக்கணக்கான வாக்காளர் பெயர்கள் நீக்கம்
உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கூட கோடிக்கணக்கான வாக்காளர் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டியுள்ள சூழலில், இந்த எஸ்ஐஆர் நடைமுறை முழுமையாகத் தவறானது என்பது நிரூபணமாகிவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
நடிகர் பிரகாஷ் ராஜின் காரசாரமான விமர்சனங்கள்
செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய நடிகர் பிரகாஷ் ராஜ், தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகளை மிகக் கடுமையாக விமர்சித்தார். ஃபார்ம் 6 மற்றும் ஃபார்ம் 8-ல் உள்ள குளறுபடிகள், ஈசிஐ-நெட் சாஃப்ட்வேர் முறைகேடுகள் மற்றும் போலி ஊடுருவல்காரர்கள் என்ற பெயரில் பொதுமக்களை அச்சுறுத்தும் நடவடிக்கைகள் குறித்து அவர் விளக்கிப் பேசினார்.
சதித்திட்டங்களுக்கு எதிராக ஒன்றிணைவோம்
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்த அவர், ஜனநாயகத்தைக் காப்பாற்ற இந்தச் சதித்திட்டங்களுக்கு எதிராக அனைத்து மாநிலங்களிலும் மக்கள் ஒன்றிணைந்து சட்டப் போராட்டத்தையும் மக்கள் போராட்டத்தையும் முன்னெடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.