மத்திய அமைச்சர் எல்.முருகன் ராஜினாமா... பிரதமர் மோடிக்கு கடிதம் - திடீர் அறிவிப்பு
மத்திய இணையமைச்சர் பொறுப்பை எல்.முருகன் ராஜினாமா செய்துள்ளார். மீண்டும் கட்சிப் பணிக்கே திரும்புவதாக பிரதமர் மோடிக்கு அவர் கடிதம் எழுதி உள்ளார். எம்.பி., பொறுப்பில் இருந்தும் தன்னை விடுவிக்கும் அந்த கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
L Murugan Resigned: மத்திய இணையமைச்சர் பொறுப்பை எல்.முருகன் ராஜினாமா செய்துள்ளார். மீண்டும் கட்சிப் பணிக்கே திரும்புவதாக பிரதமர் மோடிக்கு அவர் கடிதம் எழுதி உள்ளார். எம்.பி., பொறுப்பில் இருந்தும் தன்னை விடுவிக்கும் அந்த கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எல். முருகன் அவரது X பக்கத்தில், பிரதமர் மோடிக்கு எழுதிய 5 பக்க கடிதத்தை பகிர்ந்திருந்தார். அந்த பதிவில் அவர், "பிரதமர் மோடி தலைமையில் இந்தியாவுக்கும், தமிழ்நாட்டுக்கும் சேவை செய்தது மாபெரும் கௌரவம். கூலித் தொழிலாளியின் மகனாக இருந்து பிரதமர் மோடியின் அமைச்சரவையில் பணியாற்றியது பெருமைக்குரியது" என்று குறிப்பிட்டுள்ளார்.
பிரதமரின் சென்னை பயணமும்... பதவி விலகலும்...
2029ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கு பாஜகவை வலுப்படுத்தும் வகையில் முழுநேர களப்பணிக்கு திரும்புவதாகவும், முதலில் நாடு, அடுத்து கட்சி, கடைசியில்தான் தனது நலம் என்றும் எல்.முருகன் அதில் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி கடந்த அக்டோபர் 11ஆம் தேதி அன்று சென்னைக்கு வருகை தந்திருந்த நிலையில், அப்போது பிரதமரின் அனைத்து நிகழ்ச்சிகளிலும் எல்.முருகன் பங்கேற்றிருந்தார். அப்படியிருக்க, அடுத்த 2 நாட்களிலேயே எல்.முருகன் பதவி விலகியிருப்பது கேள்வி எழுப்பி உள்ளது.
இதுகுறித்து அந்த கடிதத்தில், பிரதமர் மோடியின் சமீபத்திய தமிழகப் பயணத்தின்போது மக்கள் காட்டிய அன்பும் உற்சாகமும், தமிழகம் மற்றும் கட்சிக்காக முழுவீச்சில் உழைக்க வேண்டும் என்ற தனது உறுதியை மேலும் புதுப்பித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
நன்றி தெரிவித்த எல்.முருகன்
கூலித் தொழிலாளர்களின் மகனாகப் பிறந்து மத்திய அரசில் அமைச்சராகப் பணியாற்றுவேன் என்று கற்பனைகூட செய்து பார்த்ததில்லை என கூறும் அவர் தனக்கு தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய துணைத் தலைவர், இருமுறை மாநிலங்களவை உறுப்பினர் மற்றும் மத்திய இணையமைச்சர் போன்ற பொறுப்புகளை வழங்கிய பிரதமர் மோடிக்கும் பாஜகவிற்கும் நன்றி தெரிவித்துள்ளார்.
5 ஆண்டுகள் மத்திய அமைச்சரவையில் பணியாற்றிய திருப்தி உடன் பொதுவாழ்வுக்கு தான் வந்ததன் அடிப்படை நோக்கமான கட்சிப் பணிக்கே முழுமையாகத் திரும்ப விரும்புவதாக கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
பிரதமரிடம் கோரிக்கை
தமிழ்நாட்டில் கிராமம் தோறும் சென்று பாஜகவை வலுப்படுத்தவும், வளர்ச்சியடைந்த பாரதம் தொலைநோக்குப் பார்வையை மக்களிடம் கொண்டு சேர்க்கவும், வரவிருக்கும் 2029 மக்களவைத் தேர்தலுக்கு கட்சியை முழுமையாக தயார்படுத்தி தமிழ்நாட்டில் இருந்து பெருவாரியான இடங்களைப் பெற்றுத் தரவும் ஏதுவாக, மத்திய இணையமைச்சர் மற்றும் மாநிலங்களவை உறுப்பினர் ஆகிய இரண்டு பொறுப்புகளில் இருந்து தன்னை விடுவிக்குமாறு பிரதமரிடம் கோரியுள்ளார்.
நினைவுக்கூர்ந்த எல்.முருகன்
சென்னை மெட்ரோ, தூத்துக்குடி துறைமுக விரிவாக்கம், அம்ரித் பாரத் திட்டத்தில் 26 ரயில் நிலையங்கள் மேம்பாடு, ஆழ்கடல் மீன்பிடிப் படகுகள் திட்டம் உள்ளிட்ட தமிழக வளர்ச்சிப் பணிகளையும் குறிப்பிட்டு பாராட்டி உள்ளார்.
ஐ.நா. சபையில் "யாதும் ஊரே, யாவரும் கேளிர்" என மேற்கொள் காட்டியது, காசி தமிழ் சங்கமம், சௌராஷ்டிரா தமிழ் சங்கமம், புதிய நாடாளுமன்றத்தில் செங்கோல் நிறுவியது, திருக்குறள் மீதான பற்று ஆகியவற்றை எல்.முருகன் நினைவுக் கூர்ந்துள்ளார்.
மூன்று தேர்தல்களில் தோல்வி
2021 சட்டப்பேரவை தேர்தலில் தாராபுரம் தொகுதியில் இருந்தும்; 2024 மக்களவை தேர்தலில் நீலகிரி தொகுதியில் இருந்தும்; 2026 சட்டப்பேரவை தேர்தலில் அவிநாசி தொகுதியில் இருந்தும் பாஜக சார்பில் போட்டியிட்ட எல். முருகன், மூன்றிலும் தோல்வியடைந்தார்.
2021 சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட 5 தொகுதிகளை பாஜக கைப்பற்றியிருந்தது. அப்போது எல்.முருகன் பாஜகவின் மாநிலத் தலைவர் பொறுப்பில் இருந்தார். 5 தொகுதிகளை வென்று கொடுத்ததை தொடர்ந்து அவருக்கு மத்திய இணை அமைச்சர் பொறுப்பு தேடி வந்தது.
அதேபோல், 2024 மக்களவை தேர்தலில் இவர் தோல்வியடைந்தாலும் பிரதமர் மோடியின் அமைச்சரவையில் மீண்டும் வாய்ப்பளிக்கப்பட்டது. மத்திய பிரதேசத்தில் இருந்து கடந்த 2024ஆம் ஆண்டில் மாநிலங்களவை உறுப்பினராக இரண்டாவது முறை தேர்வு செய்யப்பட்ட எல். முருகனின் பதவிக்காலம் 2030ஆம் ஆண்டுவரை உள்ளது.