ஜீ நியூஸ் செய்தி எதிரொலி: சரோஜினி நகர் குடியிருப்பு மறு ஏல அறிவிப்பில் திருத்தம் செய்த NBCC!
டெல்லி சரோஜினி நகர் அவென்யூ டவர்ஸ் குடியிருப்புகளின் மறு ஏலம் தொடர்பாக டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதை ஒப்புக்கொண்டுள்ள NBCC நிறுவனம், ஏலதாரர்கள் சொந்த முடிவின் அடிப்படையில் செயல்பட வேண்டும் என எச்சரித்துள்ளது.
டெல்லி சரோஜினி நகரில் உள்ள அவென்யூ டவர்ஸ் குடியிருப்புகளுக்கான மறு ஏல அறிவிப்பில் நேஷனல் பில்டிங்ஸ் கன்ஸ்ட்ரக்ஷன் கார்ப்பரேஷன் (NBCC) நிறுவனம் திருத்தம் செய்துள்ளது. ஜீ நீயூஸ் தொடர்ந்து செய்திகளை அடுத்து, ரத்து செய்யப்பட்ட குடியிருப்பு ஏலம் தொடர்பாக டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதை நிறுவனம் தற்போது ஒப்புக்கொண்டுள்ளது.
திருத்தப்பட்ட அறிவிப்பு
கடந்த அக்டோபர் 28 அம் தேதி நிர்வாக காரணங்களால் ரத்து செய்யப்பட்ட 49 குடியிருப்புகளும் புதிய ஏலத்தில் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளதாக NBCC தெரிவித்துள்ளது. இதில் சில வீடுகளுக்கு அதிகபட்ச ஏலம் கோரியவர்கள், தங்களது ஏலம் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். இதனால், புதிய ஏலத்தில் பங்கேற்பவர்கள் சொந்த முடிவின் அடிப்படையில் செயல்பட வேண்டும் என்றும், ஏற்படும் இழப்புகளுக்கு நிறுவனம் பொறுப்பேற்காது என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
நவம்பர் 6ஆம் தேதி வெளியிடப்பட்ட மறு ஏல அறிவிப்பில், இந்த வீடுகள் தொடர்பாக எந்த வழக்கும் இல்லை என NBCC கூறியிருந்தது. ஆனால், அதற்கு ஒரு நாள் முன்பாகவே அதாவது நவம்பர் 5 ஆம் தேதி டெல்லி உயர் நீதிமன்றம் இந்த விவகாரத்தில் நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தது. இதுதவிர, முந்தைய ஏலத்தில் அதிக தொகைக்கு வீடுகளை கேட்டவர்களும் புதிய ஏலத்தில் பங்கேற்க கூடாது என முதலில் கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருந்தது. தற்போது அந்த விதியில் மாற்றம் செய்யப்பட்டு, ”அதிகாரப்பூர்வமாக வெற்றியாளராக அறிவிக்கப்பட்டவர்கள் மட்டுமே” மீண்டும் பங்கேற்க முடியாது எனத் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. இதனால், ஏலம் ரத்து செய்யப்பட்டவர்களும் மீண்டும் போட்டியிட வாய்ப்பு கிடைத்துள்ளது.
நவம்பர் 26ல் அடுத்த விசாரணை
நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிகத் தொகை கோரியும் உரிய காரணமின்றி ஏலம் ரத்து செய்யப்பட்டதாக மனுதாரர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். நவம்பர் 5ஆம் தேதி நீதிமன்றத்தில் பதிலளிக்காத NBCC, 24 மணி நேரத்திற்குள் மறு ஏலத்தை அறிவித்தது ஏன் எனவும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. புதிய ஏலத்திற்கு தடை விதிக்க கோரியுள்ள நிலையில், விவகாரத்தை மேலும் சிக்கலாக்க வேண்டாம் என நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. இவ்வழக்கின் அடுத்த விசாரணை நவம்பர் 26ஆம் தேதி நடைபெறவுள்ளது.