4 ஆயிரம் ஊழியர்களுக்கு... ஊதிய உயர்வு + DA உயர்வு - அரசு அறிவிப்பு
சுமார் 4 ஆயிரம் பொது சுகாதாரப் பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு மற்றும் அகவிலைப்படி அதிகரிக்கப்பட்டுள்ளது. டெல்லி முதலமைச்சர் இதுகுறித்த அறிவிப்பை வெளியிட்டார்.
MCD Workers, DA Wage Hike: டெல்லி மாநகராட்சியில்தற்போது பணியாற்றி வரும் சுமார் 4 ஆயிரம் பொது சுகாதாரப் பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு மற்றும் அகவிலைப்படி வழங்க டெல்லி அரசு மற்றும் மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
"சம வேலைக்கு சம ஊதியம்" என்ற விதியின் அடிப்படையில் இந்த ஊதிய மாற்றியமைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை டெல்லி மாநகராட்சித் தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தா அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார்.
முக்கிய விவரங்கள் மற்றும் நிதிச் சுமை
அரசு மற்றும் டெல்லி மாநகராட்சி அறிவித்திருக்கும் ஊதிய உயர்வின் மூலம் சுமார் 4,000 பொது சுகாதாரப் பணியாளர்களுக்கு குறைந்தபட்ச மாத ஊதியமாக ரூ.18 ஆயிரம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் அத்துடன் மாறுபடும் அகவிலைப்படியும் (Variable DA) வழங்கப்படும்.
ஊழியர்களுக்கு ஊதிய உயர்வை அளிப்பதன் காரணமாக டெல்லி அரசுக்கு ஆண்டுதோறும் சுமார் ரூ.52 கோடி கூடுதல் நிதிச் சுமை ஏற்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடிப்படை ஊதியம் ரூ.18 ஆயிரம்
இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் சஞ்சீவ் கிர்வார் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சுகாதார பணியாளர்கள் தொடக்கத்தில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தடுப்புப் பணிகளுக்காக இவர்கள் 'உள்ளூர் கொசு உற்பத்தி பரிசோதகர்கள்' ஆக நியமிக்கப்பட்டனர்.
பின்னர் அவர்கள் 'பொது சுகாதாரம் - பல்நோக்குப் பணியாளர்கள்' என மறுபெயரிடப்பட்டனர். பல ஆண்டுகளாக இவர்கள் வீடு வீடாகச் சென்று ஆய்வு மேற்கொள்வது உள்ளிட்ட முக்கியமான பொது சுகாதாரப் பணிகளைத் தொடர்ந்து ஆற்றி வருகின்றனர்.
புதிய ஊதிய விதிகளின்படி, இவர்களது ஊதியம் ஊதியக் கட்டமைப்பின் லெவல் 1-ன் குறைந்தபட்ச வரம்பான ரூ.18 ஆயிரம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. உயர்த்தப்பட்ட ஊதியத் தொகை ஊழியர்களின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக வரவு வைக்கப்பட்டுள்ளதாக டெல்லி மேயர் பிரவேஷ் வாஹி தெரிவித்தார்.
மேயர், முதலமைச்சர் தெரிவித்தது என்ன?
முந்தைய பட்ஜெட்டிலேயே இந்த ஊதிய உயர்வு மற்றும் அகவிலைப்படி வழங்குவதற்கான திட்டம் அறிவிக்கப்பட்டிருந்ததாகவும், அதன் ஒப்புதலுக்காகவும் முதலமைச்சரின் பார்வைக்கு எடுத்துச் செல்லப்பட்டதாகவும் டெல்லி மேயர் வாஹி கூறினார்.
ஆண்டிற்கு ரூ.52 கோடி செலவாகும் என தெரிவிக்கப்பட்ட உடன், முதலமைச்சர் தாமதமின்றி உடனடியாக அதற்கு ஒப்புதல் அளித்ததாக அவர் குறிப்பிட்டார். பொது சுகாதாரத் துறையில் பல ஆண்டுகளாக உழைத்த ஊழியர்களின் பங்களிப்பை இந்த நடவடிக்கை அங்கீகரிக்கிறது என்று முதலமைச்சர் ரேகா குப்தா தெரிவித்தார்.
2,500 பேருக்கு வேலைவாய்ப்பு
தொழிலாளர் நலன் சார்ந்த நடவடிக்கைகளுடன் சேர்த்து, தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு நகரின் சந்தைகள் மற்றும் பொது இடங்களின் தூய்மையைப் பராமரிக்க 2,500 புதிய தூய்மைப் பணியாளர்களைத் தற்காலிகப் பணியமர்த்த உள்ளதாகவும் மேயர் தெரிவித்தார்.
டெல்லியில் பல்வேறு பகுதிகளில் குப்பைகள் தேங்குவதை தடுக்கவும், இரவு நேர தூய்மை பணிகளைத் தீவிரப்படுத்தவும் முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். பண்டிகை காலங்களில் தூய்மைப் பணிகளில் எவ்வித அலட்சியமும் காட்டப்படக் கூடாது எனவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | 8வது ஊதியக் குழு: தீபாவளிக்கு முன் முக்கிய அறிவிப்பு!! காத்திருக்கும் அரசு ஊழியர்கள்